சரத்பவார் குற்றச்சாட்டு
மும்பை, அக்.31 மகாராட்டிரத்தில் அமைய வேண்டிய டாடா ராணுவ விமான தயாரிப்பு ஆலை, பிரதமா் நரேந்திர மோடியின் தலையீட்டால் குஜராத்தில் அமைக்கப்பட்டுவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தலைவா் சரத் பவார் குற்றம்சாட்டினார். குஜராத்தின் வதோதரா நகரில் நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து பிரதமா் நரேந்திர மோடி 28.10.2024 அன்று தொடங்கி வைத்தார்.
‘டாடா’ குழுமம் அமைத்துள்ள இந்த ஆலையில் ‘ஏா்பஸ்’ விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சி-295 ராணுவப் பயன்பாட்டு விமானங்கள் முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. இந்நிலையில் மகாராட்டிர மாநிலம், பாராமதியில் நேற்று முன்தினம் (29.10.2024) தோ்தல் பிரச்சாரம் மேற்கொண்ட சரத்பவார் பேசியதாவது: இந்தியாவின் தனியார் விமான தயாரிப்பு ஆலை என்பது மன்மோகன் சிங் ஆட்சிகாலத்திலேயே திட்டமிடப்பட்டது. அப்போது ஆட்சியில் பங்கு வகித்ததால் அது குறித்த தகவல் எனக்கும் தெரியும்.
மகாராட்டிரத்தில்தான் நாட்டின் முதல் தனியார் விமான தயாரிப்பு ஆலையை அமைக்க வேண்டும் என்று மறைந்த ரத்தன் டாடா திட்டமிட்டிருந்தார். அது தொடா்பாக என்னுடனும் ஆலோசனை நடத்தினார். அதற்காக நாகபுரி அருகே 500 ஏக்கா் நிலமும் தோ்வு செய்யப்பட்டிருந்தது.
2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமரானார். அவா் ரத்தன் டாடாவிடம் தொடா்பு கொண்டு பேசி குஜராத்தில்தான் அந்த விமான தயாரிப்பு ஆலையை அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டார். இதனால், இப்போது குஜராத்தில் அந்த ஆலை திறக்கப்பட்டுள்ளது. இதனால், மகாராட்டிரத்தில் உருவாக வேண்டிய ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன. இதேபோல ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டா் ஆலையும் மகாராட்டிரத்தில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், மோடி அதையும் குஜராத்துக்கு பறித்துச் சென்றுவிட்டார். பிரதமா் என்பவா் முழு நாட்டுக்கும் பணியாற்றுபவராக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்துக்கு மட்டும் பணியாற்றுபவராக இருக்கக் கூடாது. மோடி அதை மறந்து சுயநலத்துடன் செயல்படுகிறார் என்றார்.