அரியலூர், ஜூலை 29- மாணவர் ராகுல் காந்த்தின் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த வர் முருகேசன். இவரது மனைவி தேவகி. முருகேசன் சைக்கிள் ரிப்பேர் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். வறுமை நிலையில் இருந்தாலும் தனது குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வறுமையையும், பொருட்படுத்தாத முருகேசனின் மகள் பிஎஸ்சி முடித்து விட்டு எம்எஸ்சி படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் இளைய மகன் ராகுல் காந்த் கடந்த ஆண்டு கீழப்பழுவூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி 588 மதிப்பெண்கள் பெற்றார். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து பொறியியல் மற்றும் கால்நடை இளநிலை மருத்துவத்திற்கு விண்ணப்பித்திருந்தார். எனினும் கிராமத் தில் வளர்ந்த ராகுல் காந்த் பொறியியல் படிப்பதை விட கால்நடை மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தீராத ஆசையுடன் தரவரிசை பட்டியலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் கால்நடை இளநிலை மருத்துவத்திற்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதில் பொது பட்டியலில் ராகுல் காந்த் முதலிடம் பெற்று சாதித்துள்ளார். வறுமை சூழ்நிலையிலும் தமிழ்நாடு அளவில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற ராகுல் காந்த்க்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். எம்பிபிஎஸ் படிச்சு டாக்டர் ஆகனும்னு ரொம்ப ஆசை, ஆனா நீட் கோச்சிங் போக காசு இல்லை என கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலின் பொதுப்பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ராகுல் காந்த் தனியார் செய்தி தொலைக் காட்சிக்கு பேட்டியளித்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டிவிட்டரில் வாழ்த்து
“மாணவர் ராகுல் காந்த் அவர்களின் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது. அவரை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! கல்வியின் முக்கியத்து வத்தை நான் ஒவ்வொரு முறை வலியுறுத்திப் பேசுவதும், நம்முடைய நீட் எதிர்ப்பு என்பதும் ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகத்தான்! அவருக்கு உதவ நமது அரசு இருக்கிறது. படிப்பு மட்டுமே நம்முடைய சொத்து! நிலையான புகழ்! தடைகளைக் கடந்து படிப்போம்! படிப்பால் பெருமையடைவோம்! ராகுல் காந்த்தின் பெற் றோருக்குப் பாராட்டுகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.