கவிஞர் கண்ணிமை
எம்மதம் ஆயினும் சம்மதம் கண்டுமே
இளித்திடும் சிறுகூட்டம் – நெஞ்சம்
களித்திடும் நரிக்கூட்டம் – நாளும்
இம்மதம் என்மதம் அம்மதம் உன்மதம்
என்றிடும் பிறர்கூட்டம் – அறிவைக்
கொன்றிடும் மரக்கூட்டம்!
பொய்மையின் அடித்தளம் புன்மையின் பிறப்பிடம்
புல்லரின் இருப்பிடமே! மதமும்
துள்ளிடும் கருப்பிடமே – உயர்ந்த
மெய்மையைப் புதைத்திடும், மேன்மையைக் கெடுத்திடும்
மூடரால் வளர்மதமே – இந்து
கேடரால் துளிர்மதமே!
மேலவன் கீழவன் வேற்றுமைக் காட்டிடும்
குப்பையும் ஓர் மதமா? – அதனை
ஒப்பவும் கூடிடுமா? – குறுக்கு
நூலவர் நிறுத்திட பேதமை மதங்களை
நுண்ணறி வேற்றிடுமா? – ஏற்று
பண்ணினால் போற்றிடுமா?
இழிவுகள் எத்தனை? கழிவுகள் எத்தனை?
ஏற்றிடல் தீவளியா? – அதனைப்
போற்றிடல் உன்வழியா? – இல்லாப்
பழிகளும் பாவமும் படைத்திடும் கற்பனைப்
பள்ளங்கள் பண்டிகையா? – தீய
உள்ளங்கள் தண்டிகையா?