நொய்டா, அக்.30 வட இந்தியாவில் தற்போது எளிதில் பணம் ஈட்டும் முதலீடு இல்லாத ஒரே தொழில் சாமியார் தொழில்தான். ஆகவே, படிப்பை விட்டு விட்டு சாமியார் போன்று வேடமணிந்து பஜனை பாடுவது, கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வது, பெரிய பெரிய நிறுவனங்களுக்குச் சென்று அங்கு ஆன்மீகச் சொற்பொழிவாற்றுவது போன்றவற்றைச் செய்து கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றனர். இப்படி வரும் வருவாய்க்கு எந்த ஒரு வரியும் இல்லை.
சாமியாரிணி தொழில்!
புதிதாக சாமியாரிணி தொழில் தொடங்கியுள்ள உத்தரப்பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சாமியாரிணி ஜெய கிஷோரி என்பவரை ஆன்மீக தொலைக்காட்சிகளில் அதிகம் பார்க்க லாம். இவருக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரும். அதன்படி இவர் அண்மையில் வெளிநாடு ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்கு தனது ஆன்மீகச் சொற்பொழிவை முடித்துவிட்டு விமானத்தில் டில்லி திரும்பியுள்ளார். விமானத்தை விட்டு இறங்கியதும் அவர் ரீல்ஸ் படம் எடுத்துள்ளார். அதில் தான் கொண்டுவந்துள்ள விலையுயர்ந்த பொருட்களைக் காண்பித்து பெரு மைப்படுவது போல் பேசியிருந்தார்.
அவர் கொண்டுவந்த பொருள்களில், அவரது கைப்பை ஒன்று பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது ; கிரிஸ்டியன் டையோர் பிராண்ட் கை பை, அதன் மேல் பகுதி வழவழப்பாக இருக்கும், இதற்காக அந்த நிறுவனம் பசுமாட்டுத் தோலை மட்டுமே பயன்படுத்துகிறது.
இது அந்த நிறுவனத்தின் இணையதளத்திலேயே கூறியுள்ளது. மேலும் அந்த நிறுவனம் தயாரிக்கும் கைப் பையின் விலை இந்திய ரூபாய் மதிப்பு 2 லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை இருக்கும்
டில்லி ஆங்கில இதழ் படப்பிடிப்பு!
இது தொடர்பாக டில்லியிலிருந்து வரும் ஆங்கில நாளிதழ், இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றி ‘‘அசைவ உணவுகள் சாப்பிடுவதற்கு மிருகங்கள் கொல்லப்படுகின்றன. ஆகவே, யாரும் அசைவ உணவைச் சாப்பிட்டு பாவத்தைச் சுமக்கவேண்டாம்’’ என்று மேடைக்கு மேடை கூறும் சாமியாரிணி, பசுமாட்டின் தோல் கொண்டு செய்யப்பட்ட கைப்பை அதுவும் பல லட்சம் மதிப்புள்ள கைப்பையை பயன்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பி, செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் பெரிதான நிலையில் அந்தச் சாமியாரிணி கூறும் போது, ‘‘அது பசுவின் தோல் கொண்டு செய்யப்பட்டது என்று எனக்குத் தெரியாது; எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள்; அன்பாக கொடுப்பதை நான் ஏற்றுகொண்டேன்’’ என்று கூறியிருந்தார். அதைவிட அவர் கூறிய மற்றொரு பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஆசாபாசங்கள் உண்டாம்!
‘‘நான் ஒன்றும் முற்றும் துறந்து இமயமலைக்குச் சென்று அமர்ந்துகொண்ட சாமியாரிணி இல்லை. எனக்கும் ஆசா பாசங்கள் இருக்கும். ஊடகங்கள் என் பின்னால் வந்து நான் என்ன கைப்பையைப் பயன்படுத்துகிறேன் என்று ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உண்டு; அதைப்போய் கவனிக்கட்டும்’’ என்று கூறியுள்ளார்.
‘ஜீ நியூஸ்’ செய்தியின் படி இவரது மாத வருவாய் ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் வரை என்று கூறியுள்ளது. மேலும் இவரது நிகழ்ச்சியை புக் செய்வதற்கு லட்சக்கணக்கில் முன்பணம் கொடுத்துவிட்டு பல பெரு நிறுவனங்கள் காத்திருக்கின்றன என்றும் கூறியுள்ளது. கிஷோரியின் தந்தை ராதேசியாம் அரிலால் கோவிலில் அர்ச்சகராகப் பணி புரிகிறார். தந்தையோடு பஜனைகள் பாடிக்கொண்டு இருந்த ஜெய கிஷோரி 8 ஆம் வகுப்போடு படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பஜனைகள் பாட வந்தவர் என்று ‘ஜீ நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.