ஓசி நகையில் மின்னும் மகாலட்சுமி
புதுடில்லி, அக்.30 வட மாநிலங்களில் தீபாவளி அய்ந்து நாட்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கமாம். இதன்படி தீபாவளி நேற்று (29.10.2024) தொடங்கியது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லாமில் உள்ள சிறீமகாலட்சுமி பெரிய கோயிலில் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளதாம்.
பக்தர்கள் தங்களுடைய தங்க, வைர நகைகளையும், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளையும் மகாலட்சுமி கோயிலுக்கு வழங்குகிறார்கள் (டெபாசிட்). இவற்றை கோயில் நிர்வாகிகள் கணக்கிட்டு நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்து, உரிய வர்களிடம் ரசீது வழங்குகின்றனர். பின்னர் இந்த நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அம்மன் சிலை; அருகிலுள்ள விநாயகர் மற்றும் சரஸ்வதி சிலைகளுக்கு அலங்காரம் செய்கின்றனர். இதை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனராம்.
அய்ந்து நாள் தீபாவளி முடிந்த பிறகு, அக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் வழங்கிய நகைகள், ரூபாய் நோட்டுகளுக்கான ரசீதுகளை காண்பித்து அவற்றை திரும்பப் பெற்றுச் செல்கின்றனர். கோயிலின் உள்ளே, பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களும், சில காவ லர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம். இந்த அலங்கார மகாலட்சுமியை தரிசனம் செய்வதால் தங்களுக்கு செல்வம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம்!
இதேபோன்ற ஒரு வழக்கம், உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள மகாலட்சுமி கோயிலிலும் உள்ளது. பக்தர்கள் ரூபாய் நோட்டுகளில் தங்கள் பெயர்களை எழுதி லட்சுமி சிலைக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இவை ரூ.1 முதல் ரூ.500 வரையிலான நோட்டுகளாக இருக்கும். இவற்றால், அக்கோயிலின் லட்சுமிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. தீபாவளி முடிந்ததும் இந்தத் தொகையை அளித்த பக்தர்களுக்கே பிரசாதமாக திருப்பி அளிக்கப்படுகிறதாம். இந்தத் தொகை கடந்த ஆண்டு ரூ.17.5 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.