மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடில்லி, அக்.29 கடந்த 10 ஆண்டுகள் டில்லி மக்களுக்காக முழு நோ்மையுடன் பணியாற்றியுள்ளேன் என்று மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (27.10.2024) தெரிவித்தார். டில்லி வாஜிர்பூரில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நடைப் பயணம் மேற்கொண்டு, அப்பகுதியின் சிறு வணிகா்கள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினார்.அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
டில்லி முதலமைச்சராக கடந்த 10 ஆண்டுகள் மக்களுக்காக முழு நோ்மையுடன் பணியாற்றினேன். டில்லியில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட பணிகள், நாட்டில் எங்கும் செய்யப்படவில்லை. ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 8 முதல்10 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது. மக்கள் ஜெனரேட்டா்கள் மற்றும் இன்வொ்ட்டா்களை வாங்க வேண்டியிருந்தது.
இப்போது, டில்லிக்கு 24 மணி நேர இலவச மின்சாரம் கிடைக்கிறது. இது நாட்டில் வேறு எங்கும் இல்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.உங்கள் தண்ணீா் கட்டணம் அதிகமாகி இருந்தால், நீங்கள் அதை செலுத்தத் தேவையில்லை. வரும் பிப்ரவரி மாத சட்டப்பேரவைத் தோ்தலுக்குப்பிறகு, அனைவரின் குடிநீா்க் கட்டணத்தையும் நான் தள்ளுபடி செய்வேன் என உறுதியளிக்கிறேன். ஆனால், பாஜகவுக்கு வாக்களித்தால் மின் கட்டணம் செலுத்துவீா்கள். டில்லியில் தற்போது அனைவருக்கும் இலவச மின்சாரம் மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான் சிறந்த அரசுப் பள்ளிகளைக் கட்டியுள்ளேன். ஆனால், இந்த பாஜகவினா் டில்லி மக்களுக்கு எதுவும் இலவசமாக கொடுக்கக்கூடாது என்கிறார்கள். விரைவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றார் கெஜ்ரிவால்.