சென்னை, அக். 28- உலக மக்கள் அனை வரையும் பாதிக்கும் தலையாய சிக்கல் காலநிலை மாற்றமாகும். வளிமண்டலத்தில் கலக்கவிடப்படும் கரிய மிலவாயு அதிகரித்து வருகின்றன. இதுதவிர புவியின் மேற்பரப்பு வெப்பநிலையும் கடல் வெப்பநிலையும் அதி கரித்து செல்கிறது.
கடந்த 150 ஆண்டுகளில், பூமியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரித்து 1.5 டிகிரி செல்சியஸ் அளவை மிக விரைவில் எட்டிவிடும் என ஆய்வாளர்கள் கருத் துகளை தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், தமிழ்நாட்டில் கால நிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் அனைத்து மாநகராட்சியிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஆற்றல் திறன்வாய்ந்த கட்டுமானங்கள், போக்கு வரத்து, நிலையான கழிவு மேலாண்மை, நகர்ப் புறங்களில் வெள்ளம் மற்றும் தண்ணீர் நெருக் கடியை சமாளித்தல், பாதிக்கப்படும் மக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் உள்ளிட்ட வைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப் பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர் உள்பட 16 மாநகராட்சிகள், ராஜபாளையம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி அல்லிநகரம், திருவாரூர் ஆகிய 5 நகராட்சிகளுக்கு காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இதற்காக ரூ.8.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.