வயநாடு, அக். 28- வயநாட்டின் பொதுப் பிரதிநிதியாகத் தனது முதல் பயணம் இருக்குமே தவிரப் போராளிக்கான பயணமாக இருக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். வயநாடு தொகுதிக்கு பேரணியாகச் சென்று அக்.23இல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வயநாடு மக்களைவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவுடன், அவரது தாய் சோனியா, கணவர் ராபர்ட் வதேரா, சகோதரர் ராகுல், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர். வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் நவ்யா அரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் சத்யன் மோகெரியும் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே பிரியங்கா வயநாட்டின் அதிகாரப்பூர்வ மக்களவை உறுப்பினராகவும், நான் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராகவும் இருப்போம். இருவரும் இணைந்து வயநாட்டு மக்களைக் காக்கப் பாடுபடுவோம் என்று கல்பெட்டாவில் நடைபெற்ற மாபெரும் சாலைப் பேரணியில் தெரிவித்தார்.
வயநாடு மக்களுக்கு பிரியங்கா எழுதிய கடிதம்.. மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள். மக்கள் பிரதிநிதியாக எனது முதல் பயணமாக இருக்கும். ஆனால் போராளிக்கான பயணமாக இருக்காது.
ஜனநாயகம், நீதி, அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக போராடுவது தான் எனது வாழ்வின் மய்யமாக இருக்கும் உங்கள் ஆதரவுடன் எதிர்காலத்திற்காக இந்தப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் எதிர்நோக்குகிறேன், நீங்கள் என்னை மக்களவை உறுப்பினராக்க முடிவு செய்தால் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன் என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல்முறையாக களம் காண்கிறார்.