சென்னை, அக்.28- சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில், பொதுப்பணித் துறையின் கோயம்புத்தூர் மண்டலம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
ரூ.245 கோடியில் கோயம்புத்தூர் நூலகம் மற்றும் அறிவியல் மய்யக் கட்டடம், ரூ.114.16 கோடியில், கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடம், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ரூ.11.23 கோடியில், நீதிமன்றக் கட்டடம் மற்றும் ரூ.14.59 கோடியில், பொள்ளாச்சி நீதிமன்றக் கட்டடம், ரூ.59.43 கோடியில், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடம், ரூ.101.19 கோடியில், நாமக்கல் சட்டக் கல்லூரி கட்டடம் மற்றும் ரூ.101.55 கோடியில், சேலம் அரசு சட்டக் கல்லூரி கட்டடம், திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.27.00 கோடியில், கூடுதல் கட்டடம், ரூ.34 கோடியில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மய்யக் கட்டடம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
– இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், செயலாளர் மங்கத் ராம் சர்மா, முதன்மைத் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, தலைமைக் கட்டடக் கலைஞர் இளவேண்மால், கோயம்புத்தூர் மண்டலத் தலைமைப் பொறியாளர் ரங்கநாதன், சிறப்பு பணி அலுவலர் விஸ்வநாத், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் ரூ. 153.86 கோடியில்
பாதாள சாக்கடை திட்டம்!
தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, அக்.28- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது:
கள்ளக்குறிச்சி நகராட்சி 9.8.2021இல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பின்பு. 2.5.2023 முதல், தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
21 வார்டுகளை உள்ளடக்கி 15.87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இந்நகராட்சியில், தற்போது தோராயமான மக்கள் தொகை 57,456 ஆக உள்ளது. இந்த நகராட்சிக்கு, நகரை ஒட்டியுள்ள கிராம பகுதியிலிருந்து பொதுமக்கள் குடிபெயர்ந்து வருவதால் நாளுக்கு நாள் மக்கள் தொகை உயர்ந்து வருகிறது.
தற்போது உள்ள மக்கள் தொகை மற்றும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்து மேம்படுத்தி தர வேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே, இந்நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த 2024-2025ஆம் ஆண்டின் சட்டமன்ற மானிய கோரிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டது.
மேற்காணும் அறிவிப்பின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி நகராட்சியில் ரூ.153.86 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்தவும். ரூ.20.93 கோடி செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை 10 ஆண்டுகளுக்கு இயக்கவும் மற்றும் பராமரிக்கவும், ரூ.6.84 கோடி செலவில், கழிவுநீர் சேகரமாகும் அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்காணும் திட்டத்தினால், மொத்தம் 14,079 குடியிருப்புகளுக்கு பாதாளசாக்கடை வீட்டிணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு இத்திட்டத்தினை செயல்படுத்தும் போது கழிவுநீர் முறையாக சேகரிக்கப்பட்டு சுத்திகரித்து வெளியேற்றுவதால் இந்நகரின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், மேம்பட்டு, பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.
– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புச் சேவையில் சிறப்பு சலுகைத் திட்டம்!
சென்னை, அக்.28- தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமான ஜியோ, குறுகியகால சலுகைத் திட்டத்தில் தற்போது ரூ. 999 என்ற விலையில் கிடைக்கும் ஜியோபாரத் 4ஜி போன்கள், அனைத்து பயனாளிகளுக்கும் ரூ. 699 மட்டும் என்ற தனிச்சிறப்பு விலையில் கிடைக்கும் என அறிவித்துள்ளது.
பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கிடைக்கக்கூடிய (மாதத்திற்கு/ரூ.199) என்ற மிகக் குறைவான ஃபீச்சர் போன் திட்டத்துடன் ஒப்பிடுகையில் ஜியோபாரத் திட்டம் ஏறக்குறைய 40% மலிவானது மற்றும் ஒவ்வொரு மாதமும் ரூ. 76 என்ற சேமிப்பை இது வழங்குகிறது.
திட்ட கட்டண சேமிப்புகள் வழியாக 9 மாதங்களில் போனின் விலையை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்பதையே இது குறிக்கிறது.
மேலும் ஜியோபாரத் போன் நிஜ யதார்த்தத்தில் இலவசமானதாக உங்களுக்கு கிடைக்கப்பெறும். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு அதிகமாக நீங்கள் சேமிப்பீர்கள்.
இது வெறும் ஒரு போன் மட்டுமல்ல; அதற்கும் மேலானது. ஒளிமயமான, அதிக தொடர்பும் இணைப்புமுள்ள எதிர்காலத்தை வழங்குகிற ஒரு விழாக்கால பரிசு இது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.