புதுடில்லி, அக்.28- தலைநகர் டில்லியில் கடந்த 2 நாட்களில் காற்று மாசு மீண்டும் ‘மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அங்கு நேற்று (27.10.2024) காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 359 ஆக பதிவாகியுள்ளது. 26.10.2024 அன்று 255 ஆக இருந்த தரக்குறியீடு நேற்று மிகவும் அதிகரித்ததாகவும், கடந்த 2நாட்களில் காற்று வீசும் வேகம் குறைந்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றதாகவும் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆனந்த்விஹார், அலிபூர், பவானா, ஜஹாங்கீர்புரி,முந்த்கா, வாசிர்பூர், விவேக் விஹார் மற்றும் சோனியா விஹார் ஆகிய இடங்களில் காற்றின் தரக்குறியீடு கடுமையான பாதிப்பு இருப்பதாகவும், 28 இடங்களில் மிக மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 20.1 டிகிரியாக பதிவாகியுள்ளது. இது இந்த பருவத்திற்கான சராசரியை விட அதிகமாகும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியசை எட்டும் என்றும் வானிலை மய்யம் கணித்துள்ளது.