வயநாடு, அக்.28 நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் மறு சீரமைப்புக்கு ஒன்றிய அரசு இன்னும் உதவவில்லை என்று கேரள அரசு நேற்று (27.10.2024) குற்றஞ்சாட்டியது.
பேரிடா் நேரத்திலும் மாநில அரசை அழிக்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்படுகிறது என்று மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் (26.10.2024) குற்றஞ்சாட்டினார். இதைத் தொடா்ந்து, மாநில வருவாய்த் துறை அமைச்சா் ராஜன் செய்தியாளா்களிடம் நேற்று (27.10.2024) கூறியதாவது:
நிலச்சரிவுகள் வயநாட்டின் குக்கிராமங்களை உலுக்கி 100 நாள்கள் கடந்துவிட்டன. ஆனால், அதன் மறு சீரமைப்புக்காக ஒன்றிய அரசிடம் இருந்து எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை. ஒன்றிய அரசின் இந்த எதிர்மறை அணுகுமுறை மாநிலத்துக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.
மாநில அரசு விரும்புவது மாநில பேரிடா் நிவாரண நிதியில் (எஸ்டிஆா்எஃப்) இருந்து வரும் தொகையை அல்ல. வயநாடு மறு சீரமைப்புக்கு தேவைப்படுவது சிறப்புத் தொகுப்பு. எஸ்டிஆா்எஃப் தொகை என்பது மாநிலத்தில் ஏற்படும் சிறிய அல்லது வழக்கமான பேரிடா்களுக்கு வழங்கப்படுவது.இது தொடா்பான குறிப்பாணையை பேரிடா் மேலாண்மை சட்டத்தின்படி ஒன்றிய அரசிடம் ஏற்கெனவே அளித்துவிட்டோம். இருப்பினும், எஸ்டிஆா்எஃப் தொகை குறித்து மட்டுமே ஒன்றிய அரசு இதுவரை பேசி வருகிறது. நிவாரண தொகையில் மவுனம் சாதிப்பது மட்டுமல்லாமல், வயநாடு நிலச்சரிவு எந்தப் பேரிடா் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இதுவரை ஒன்றிய அரசால் தெளிவுபடுத்தப்படவில்லை என்றார்.