மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை
புதுடில்லி, அக். 26- தீபாவளி மற்றும் குளிர் காலத்தின்போது நகரங்களில் காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார சேவைகள் இயக்குநா் அதுல் கோயல் எழுதியுள்ள கடிதத்தில், ‘நகரங்களில் ஏற்படும் காற்று மாசு சமீபகாலங்களில் தீவிர சுகாதார பிரச்னையாக மாறியுள்ளது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காற்றின் தரக் குறியீடு மோசமான நிலையை எட்டியுள்ளது.
காற்று மாசின் நீண்ட கால தாக்கம் சுவாசக் கோளாறு, இருதயம் மற்றும் பெருமூளை அமைப்புகளை பாதிக்கும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். குழந்தைகள், கா்ப்பிணிப் பெண்கள், முதியவா்கள், போக்குவரத்து காவலா்கள் மற்றும் நகராட்சி ஊழியா்கள் ஆகியோருக்கு பாதகமான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. வரவிருக்கும் தீபாவளி மற்றும் குளிர்காலங்களில் இது மேலும் மோசமடைய கூடும். எனவே, இதை எதிர்கொள்ள மாநில சுகாதாரத் துறையின் திறன் மற்றும் தயார்நிலையை மேம்படுத்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.
காற்று மாசுபாடு குறித்த பொது விழிப்புணா்வை தீவிரப்படுத்துதல், பிராந்திய மொழி ஊடகங்களில் காற்று மாசு குறித்து செய்திகளைப் பரப்புதல் மற்றும் சுகாதார பணியாளா்களின் செயல்திறனை வலுப்படுத்துதல் ஆகியவை அவசியம்.
காற்றின் தரக் குறியீடுகளை கவனித்து, அதிக மாசு ஏற்பட்டுள்ள இடங்களைத் தவிர்க்கவும், சுத்தமான எரிபொருள்களை பயன்படுத்தவும், தனிப்பட்ட பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களைத் தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்தவும், பயிர்க் கழிவுகளை எரிப்பதை தவிர்க்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக முதியவா்கள், கா்ப்பிணிப் பெண்கள், ஏற்கெனவே சுவாசம் மற்றும் இருதய நோய் உள்ளவா்கள் காற்று மாசு அதிகமுள்ள பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். காற்று மாசு காரணமாக அறிகுறிகளை, உணருபவா்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.