சென்னை, அக். 26- சட்டமன்ற அவைத்தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமு.க. வழக்குரைஞர்கள் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கிய சட்டமன்ற அவைத்தலைவர் அப்பாவு, ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தி.மு.க.வில் இணைய தயாராக இருந்தனர். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் அதை ஏற்கவில்லை என்று பேசினார்.
இவரது பேச்சு அ.தி.மு.க.வையும், எம்.எல்.ஏ.க்களையும் அவதூறு செய்துள்ளதாக கூறி அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க. வழக்குரைஞர்கள் அணி இணைச் செயலாளர் பாபு முருகேவல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்தநிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டமன்ற அவைத்தலைவர் அப்பாவு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, 40 எம்.எல்.ஏ.க்கள் என்று அப்பாவு கூறினாலும், பெயரை குறிப்பிடவில்லை. இந்த வழக்கை எம்.எல்.ஏ.க்கள் யாரும் தொடரவில்லை. இந்த நிகழ்வு நடந்த காலக் கட்டத்தில், வழக்கு தொடர்ந்த பாபு முருகவேல் அ.தி.மு.க.வில் உறுப்பினரே கிடையாது” என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாபுமுருகவேல் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று (25.10.2024) தீர்ப்பு அளித்தார். அதில், “சபாநாயகரின் பேச்சு தொடர்பாக கட்சி சார்பில் எந்த புகார்களும் தாக்கல் செய்யப்பட வில்லை. தனிப்பட்ட முறையில் புகார்தாரர் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை தாக்கல் செய்த பாபு முருகவேலுக்கு கட்சி எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை. சட்டமன்ற அவைத்தலைவர் அப்பாவு பேச்சுதொடர்பாக அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் அளித்த பேட்டி ஒன்றில், பதவிக்காக அப்பாவு இதுபோலபேசியுள்ளார் என்று கூறியுள்ளார். அப்பாவு தெரிவித்த கருத்தினால், கட்சிக்கு அவதூறு ஏற்பட்டதாக அவர் கூறவில்லை. எனவே, அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கைரத்து செய்கிறேன்” என்று நீதிபதி கூறியுள்ளார்.