அமராவதி, அக். 26- ஆந்திர அரசின் சின்னமாக விளங்கும் தியான புத்தர் சிலைகள் அமரா வதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சமூக நலத்துறை விடுதியில் சேற்றில் உள்ளன. இதுகுறித்து அரசு அதிகாரிகள் யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்று அங்குள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆந்திர அரசின் அதிகார சின்னம் தியான புத்தர். இதனால்தான், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கடந்த முறை அமராவதியில் 125 அடி உயர தியான புத்தர் சிலை இங்கு நிறுவப்பட்டது. கிருஷ்ணா நதிக் கரையோரம் இச்சிலை மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதற்கு சுற்றுச்சுவர் எழுப்பி, அந்த மதில்களின் மீது தியான புத்தர்சிலைகளை அமைக்க அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு தீர்மானித்து சிறிய அளவிலான புத்தர் சிலைகளையும் தயாரித்து, அவற்றை சமூக நலத்துறைக்கு சம்பந்தப்பட்ட மாணவர்களின் விடுதியில் ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்தது.
இந்நிலையில், ஆந்திராவில் 2019 தேர்தலுக்குப் பிறகு ஜெகன் ஆட்சிக்கு வந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என பேசி கடந்த 5 ஆண்டுகளாக தலைநகர் பிரச்சினையை எழுப்பி, மக்களை குழப்பத்தில் வைத்து விட்டார். மேலும், அவரது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பாக இருந்த புத்தர் சிலைகளை விடுதி அறையில் இருந்து எடுத்து அதிகாரிகள் வெளியில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டனர். இச்சிலைகள் கடந்த 5 ஆண்டுகளாக மழை, வெயில், பனியில் நனைந்து சேற்றில் கிடக்கின்றன. தற்போது ஆந்திராவில் மீண்டும்ஆட்சி மாறி, சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகி உள்ளதால், இப்போதாவது இச்சிலைகளை புதுப்பிக்கப்படுமா என சுற்றுலாத் துறை தலைமை பொறியாளர் நிவாசராவிடம் கேட்டதற்கு, கண்டிப்பாக விரைவில் இச்சிலைகள் புதுப்பிக்கப்பட்டு வேறு இடங்களில் அமைக்கப்படுமென தெரிவித்துள்ளார்.