வரவேற்கத்தக்க முடிவு: டில்லியில் ஜன. 1ஆம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை – டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

viduthalai
2 Min Read

புதுடில்லி, அக். 25- டில்லியில் அடுத்தாண்டு ஜன. 1ஆம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து, பட்டாசு கிடங்குகளை மூடி முத்திரை வைக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு காரணமாக பட்டாசு விற்க டில்லி அரசு விதித்த தடைக்கு எதிராக பட்டாசு உரிமம் வைத்துள்ளவர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டது. டில்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. மேலும் அதிகாலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, உடல்நல அபாயங்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வயதானவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்சினை உள்ளவர்கள் இந்த காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டில்லியின் மோசமான காற்று மாசுபாட்டிற்கு, அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பு, தடையை மீறி பட்டாசு வெடிப்பது போன்றவை காரணமாக பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் அரியானாவில் 19.8%, பஞ்சாபில் 28.7% பயிர் கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

மோசமான காற்றின் தரம் காரணமாக டில்லி மாசு கட்டுப்பாட்டு குழு அனைத்து வகையான பட்டாசுகள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை முழுமையான தடையை ஏற்கெனவே விதித்துள்ளது. ஆனால் பல்வேறு விழாக்கள் காரணமாக தடையை மீறி மக்கள் பட்டாசு வெடிப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் காற்று மாசும் அதிகரித்து வருகிறது. தீபாவளிக்கு பிறகு, மாசு அளவு இன்னும் அதிகரிக்கும்.

இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில், மாசு கட்டுப்பாட்டு குழுவின் உத்தரவை எதிர்த்து பட்டாசு உரிமம் வைத்துள்ளவர்கள் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் டில்லி அரசின் உத்தரவை உறுதி செய்து ஆணையிட்டது. மேலும், ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு வைத்துள்ள அனைத்து கிடங்குகளையும் மூடி முத்திரை வைக்க வேண்டும் என்றும் டில்லி அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *