இரா.கவிதா – இர.ேஹமந்த்குமார் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை

Viduthalai
9 Min Read

அடக்கமானவர்; அமைதியானவர்; உறுதியானவர், கொள்கையில் சமரசம் செய்துகொள்ளத் தெரியாதவர் இராமலிங்கம்!
எளிமையாக நடைபெறக்கூடிய மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில், நம்முடைய கொள்கையின் வலிமையைக் காட்டியிருக்கிறார்!

சென்னை, அக்.25 இராமலிங்கம் அவர்களைப் பொறுத்தவரையில், எப்பொழுதுமே எளிமையாக இருக்கக்கூடியவர். அடக்கமானவர்; அமைதியானவர்; உறுதியானவர், கொள்கையில் சமரசம் செய்துகொள்ளத் தெரியாதவர். எளிமையாக நடைபெறக்கூடிய மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி இது. அதில், நம்முடைய கொள்கை வலிமையைக் காட்டியிருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இரா.கவிதா -இர.ஹேமந்த்குமார்
மணவிழா வரவேற்பு
கடந்த 23.10.2024 மாலை வடசென்னை மாவட்ட கழகக் காப்பாளர் கி.இராமலிங்கம் – இலட்சுமி இணையரின் மகள் இரா.கவிதாவிற்கும், சு.இரங்கநாதன் – கலாவதி ஆகியோரின் மகன் இர.ஹேமந்த்குமாருக்கும் சென்னை பெரியார் நகரில் உள்ள திருவள்ளுவர் திருமணக் கூடத்தில் நடைபெற்ற மணவிழா வரவேற்பிற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்..
அவரது வாழ்த்துரை வருமாறு:

எங்கள் பாராட்டுதலுக்குரிய கொள்கை வீரர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி
மகிழ்ச்சியோடு நடைபெறக்கூடிய அன்புச் செல்வர்கள் இராமலிங்கம் – இலட்சுமி இணையரின் மகளான அருமைச்செல்வி கவிதா பி.காம்., எம்.பி.ஏ., அவர்களுக்கும், இரங்கநாதன் – கலாவதி ஆகியோரின் செல்வன் அருமைத் தோழர் ஹேமந்த்குமார் பி.இ., அவர்களுக்கும் நடைபெறக்கூடிய மணவிழா வரவேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ள வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகச் சிறப்பாக பணியாற்றக்கூடி யவரும், அற்புதமான மருத்துவராகவும், மருத்துவத் துறையில் உயர்ந்த பட்டப்படிப்பை நம்மாலும் படிக்க முடியும்; நாமும் அந்த இடத்திற்கு வர முடியும் என்பதை மற்றவர்களுக்குக் காட்டி, மற்றவர்களையும் தயாரிக்கக்கூடிய இடத்தில் இருக்கக்கூடியவரும், எங்கள் பாராட்டுதலுக்குரிய கொள்கை வீரருமான நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களே மற்றும் கழகப் பொறுப்பாளர்களே, அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களே, தோழர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தி னைத் தெரிவித்து, உங்கள் எல்லோரையும் வருக, வருக என வரவேற்கிறேன்.
ஏனென்றால், இது வரவேற்பு நிகழ்ச்சி. இது நம் குடும்பம்; எங்கள் குடும்பம்.

இந்தக் குடும்பத்திற்கு உரியவன் நான்!
இந்தக் குடும்பத்திற்கு உரியவன் நான். குருதி உறவு என்பதைவிட கொள்கை உறவு என்பது இறுக்கமான தாகும்; நெருக்கமானதாகும். தண்ணீரைவிட மிகவும் கெட்டியானது ரத்தம். ஆனால், ரத்தத்தைவிட கெட்டியானது கொள்கை உறவாகும்.
இந்தக் கொள்கையைத் தவிர, அவருக்கு
வேறு எந்தக் கொள்கையும் தெரியாது!
அந்த வகையில், தோழர் இராமலிங்கம் அவர்கள், இளைஞரணியில் இருந்த காலம்தொட்டு, இந்தக் கொள்கையைத் தவிர, அவருக்கு வேறு எந்தக் கொள்கையும் தெரியாது.
அவர் எந்த நிலையிலும் கொஞ்சம்கூட தடுமாறியதே கிடையாது. தடுமாறியதும் கிடையாது; தடம் மாறியதும் கிடையாது.
கட்சிக்காரனாக இருப்பது என்பது வேறு. தந்தை பெரியார் அவர்கள் சொல்வார், ‘‘என்னுடைய வாழ்நாளில் நான் என்றைக்கும் கட்சிக்காரனாக இருந்ததைவிட, கொள்கைக்காரனாகத்தான் இருந்திருக்கிறேன்” என்று.
திராவிட இயக்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு நூற்றாண்டை காணுகின்ற இயக்கமாகும்.
ஒரு பெரிய சமூக மாறுதலை இந்த இயக்கம் செய்தி ருக்கிறது; அதுதான் சுயமரியாதைத் திருமணமாகும்.

அடக்கமானவர்; அமைதியானவர்; உறுதியானவர்!
இராமலிங்கத்தைப்பற்றி இங்கே எல்லோரும் சொன்னார்கள். மிகவும் உண்மையானவர்; அவர் அதிக மாகப் பேசமாட்டார்; அடக்கமானவர்; அமைதியானவர்; உறுதியானவர், கொள்கையில் சமரசம் செய்துகொள்ளத் தெரியாதவர்.
அப்படிப்பட்ட அற்புதமான தோழர் இராமலிங்கம் அவர்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவர் அவர்; அவர் குடும்பத்தில் ஒருவராக நாங்கள் இருக்கிறோம் என்பதை விட, வேறு என்ன பேறு வேண்டும்? வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்?
1993 ஆம் ஆண்டு என்னுடைய தலைமையில்தான் திருமணம் செய்துகொண்டவர் இராமலிங்கம்!
இங்கே உரையாற்றியபொழுது கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் சொன்னார். 1993 ஆம் ஆண்டு என்னுடைய தலைமையில்தான் இராம லிங்கம் அவர்களுக்குத் திருமணம் நடந்தது. இன்றைக்கு அவருடைய மகளுக்கும் என்னுடைய தலைமையில்தான் மணவிழா வரவேற்பு நடக்கிறது. அவருடைய பேரப் பிள்ளைகளுக்கும் என்னுடைய தலைமையில்தான் மணவிழா நடக்கும், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
நீங்கள் எல்லாம் நினைக்கலாம்; இவருக்கே 92 வயதா கிறது; ஆனாலும், அவ்வளவு காலம் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறாரே என்று.

திராவிடம் என்பதை யாராலும் அசைக்க முடியாது!
நான் சொல்ல வருகின்ற கருத்து அதுவல்ல. அதனு டைய தத்துவம் என்னவென்றால், இந்தக் கொள்கை ஆயிரங்காலத்துப் பயிர். திராவிடம் என்பதை யாராலும் அசைக்க முடியாது.
குடித்தவர்கள்போன்று சிலர் உளறலாம். நேற்று முன்தினம்கூட ஒரு செய்தி, குடித்துவிட்டு, காவல்துறை யினரை கண்டபடி திட்டியிருக்கிறார். பிறகு, போதை தெளிந்த பிறகு காவல்துறையினரிடம், ‘‘நான் தெரி யாமல் பேசிவிட்டேன்” என்று சொல்லியிருக்கிறார்.
அவருக்கும், நம்மைப்பற்றி பேசுகின்ற தலைவர்க ளுக்கும் வித்தியாசமே கிடையாது. அவனுக்குப் போதைத் தெளிந்துவிட்டது. ஆனால், இவனுக்கு போதைத் தெளியவில்லை. அதனால்தான், ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மாதிரி உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
போதையிலிருந்தவரை நம்மால் மன்னிக்கத்தான் தெரிகிறதே தவிர, அவர்களை தண்டிக்கத் தெரியாது. அதுதான் இந்த இயக்கத்திற்கே தனி பெருமை.
நம்முடைய இராமலிங்கம் அவர்கள் ஒரு இலட்சியத் தொண்டர்; எடுத்துக்காட்டானவர், எல்லோரும் பின்பற்றக் கூடியவர்.

குடும்பம் குடும்பமாக இருக்கின்றவர்களின் இயக்கம் இது!
இந்நிகழ்வில் இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய டெய்சி.மணியம்மை, அவருடைய பெற்றோர் – இந்த இயக்கம் எப்படிப்பட்டது? டெய்சி.மணியம்மை அவர்கள் சின்ன குழந்தையாக இருந்த காலத்தி லிருந்து இந்தக் கொள்கையிலேயே இருப்பவர். குடும்பம் குடும்பமாக இருக்கின்றவர்களின் இயக்கம் இது.
சிலர் பைத்தியக்காரத்தனமாக சொல்வார்கள், ‘‘இது வாரிசு அரசியல்; குடும்ப அரசியல்” என்று.
இது கொள்கைக் குடும்பம் என்பதால், நான் சுயமரியாதைக்காரன் என்றால், என்னுடைய மகனும் சுயமரியாதைக்காரனாக இருப்பதும், என்னுடைய பேரன் இந்தக் கொள்கையிலேயே இருக்கவேண்டும் என்று நினைப்பதும் குற்றமா?
அவர்கள் திறமைசாலியாக இருந்தால், உரிய பொறுப்பு அவர்களுக்குக் கொடுக்கப்படும். என்னு டைய மகன் என்பதினாலேயே, என்னுடைய பேரன் என்பதினாலேயே அவர்களுடைய உரிமையை நான் தடுக்க முடியாது. என்னால் மட்டுமல்ல; யாராலும் தடுக்க முடியாது.
பகுத்தறிவு அடிப்படையில் சொன்னால், இதில் விருப்பு – வெறுப்பு, பாசம் என்பதெல்லாம் கிடையாது.
வேறு எந்தக் குற்றச்சாட்டையும் நம்மீது சொல்ல முடி யாமல்தான், இதுபோன்ற குற்றத்தைச் சொல்கிறார்கள்.
இங்கே அமர்ந்திருக்கின்ற மணமக்களைப் பாருங்கள்; மணமகள் கவிதா அவர்கள் பி.காம்., எம்.பி.,ஏ. – எம்.பி.ஏ.தான் இருப்பதிலேயே மேலாண்மை படிப்பாகும். ஒரு காலத்தில் இந்தப் படிப்பை நாமெல்லாம் படிக்க முடியாது என்று நினைத்தார்கள்.
நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்கள், பெரிய பெரிய படிப்பு படித்திருக்கின்றார். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின்மூலம் பல சேவைகளை செய்துகொண்டிருக்கின்றார்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான் சமூகநீதி!
ஒரு காலத்தில், நமக்கு படிப்பு வராது; படிக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதை வலியுறுத்துவதுதான் மனுதர்மம்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதான் சமூகநீதி. அதனை ‘திராவிட மாடல்’ ஆட்சியும், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
‘‘எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடாது” என்பதுதான் எதிரிகளுடைய வாதம். அனை வருக்கும் அனைத்தும் இருக்கக்கூடாது; எங்க ளுக்குத்தான் எல்லாம் என்று சொல்லுவதுதான்.
அனைவருக்கும் அனைத்தும் என்றால், உன்னு டைய பங்கை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; எங்களுக்குரிய பங்கை எங்களுக்குக் கொடுங்கள்; எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறோம்.
இல்லை, இல்லை. இதுவரையில் நாங்கள்தான் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டி ருக்கின்றோம்; உங்களுக்குத் தரமாட்டோம் என்கிறார்கள்.
திராவிட இயக்கம் அதற்காகப் போராடியதின் விளை வாகத்தான், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள், மண மகள் கவிதா அவர்கள் பி.காம்., எம்.பி.ஏ., படித்திருக்கிறார்.
இங்கே ஏராளமான தாய்மார்கள் இருக்கிறீர்கள். பாட்டியின் பாட்டி படித்திருக்கிறாரா? அல்லது பாட்டி படித்திருக்கிறாரா? அம்மா ஓரளவிற்குப் படித்திருப்பார்; மகள் முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பார்.

மாற்றம் வந்தது பெரியாரால்தான்!
இந்த மாற்றம் எப்படி வந்தது?
ஒவ்வொரு ஆண்டும் சரசுவதி பூஜையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். சரசுவதியால்தான் அந்த மாற்றம் வந்தது என்றால், எப்பொழுதோ அந்த மாற்றம் வந்திருக்கவேண்டுமே?
அந்த மாற்றம் வந்தது பெரியாரால்தான்!
திராவிடர் கழகத்தால் வந்தது!
அண்ணாவால் வந்தது!
காமராஜரால் வந்தது!
கலைஞரால் வந்தது!
தமிழ்நாட்டில், மக்கள் தொகைக்கு ஏற்றபடி, நாடாளுமன்றத் தொகுதியைக் குறைக்கவேண்டும் என்று ஒன்றிய அரசு முடிவெடுத்திருப்பதால், நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று முதல மைச்சர் வேடிக்கைக்காக சொன்னார்.
ஒன்றியத்தில் ஆட்சியை மாற்றுவதுதான்
ஒரே வழி!
அதற்காக நிறைய குழந்தையைப் பெற்றுக்கொண் டால், நமக்குத்தான் அவதி. அதற்குரிய வழி என்ன வென்றால், ஒன்றியத்தில் ஆட்சியை மாற்றுவது என்பதுதான்.
நம்முடைய அடிப்படைக் கொள்கையே குடும்பக் கட்டுப்பாடாகும். இது எதற்கென்றால் பெண்களின் சுதந்திரத்திற்காகத்தான். வெறும் எண்ணிக்கைக்காக அல்ல.
குடும்பக் கட்டுப்பாட்டை திராவிட இயக்கம் சொன்னதினுடைய அடிப்படையே, எண்ணிக்கைக்காக அல்ல. ஆனால், இன்றைக்கு எண்ணிக்கை தேவை.

பரிசு கொடுக்கவேண்டுமா?
தண்டனை கொடுக்கவேண்டுமா?
ஓர் அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையை சீரிய முறையில் நிறைவேற்றினால், அதற்காக பரிசு கொடுக்கவேண்டுமா? தண்டனை கொடுக்கவேண்டுமா?
இன்றைக்குத் தண்டனை கொடுக்கிறார்கள். இது தான், விசித்திரமான ஒன்றிய ஆட்சியின் செயல்பாடு.
‘‘அய்ந்து பெண்களைப் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று ஒரு பழமொழி சொல்லி, இதுவரை அச்சுறுத்தி வந்தார்கள்.

கல்லூரி செல்லும் பெண்ணுக்கு ஆண்டிற்கு
ரூ.12 ஆயிரம் அளிக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி!
இன்றைக்கு நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், அய்ந்து பெண்களையும் கல்லூரிக்கு அனுப்பினால், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆயிரம் ரூபாய் என்ற முறையில், ஆண்டிற்கு ஒரு பெண்ணுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரும்.
ஆனால், இந்தக் காலத்திற்கு முன்பே, மணமகள் கவிதா அவர்கள் எம்.பி.ஏ., படித்துவிட்டார். இன்னும் இதற்குமேலும் படிக்கலாம்.
அதேபோன்று மணமகன் ஹேமந்த்குமார் அவர்கள் பி.இ., படித்திருக்கிறார்.
அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்பொழுது, தெலுங்கில் உள்ள ஒரு பழமொழியை சொல்வார் – ‘‘இச்சி பட்ன வாடுக்கு இஞ்சினியரிங்” என்று. அதற்கு என்ன அர்த்தம் என்றால், இஞ்சினியரிங் படிக்கவேண்டும் என்றால், கொடுத்து வைத்தவர்களால்தான் படிக்க முடியும். எல்லோருக்கும் அந்தப் படிப்பு கிடைக்காது.
அந்த இச்சி பட்ன வாடுக்கு எல்லாம் வேலை கொடுத்ததுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி – சமூகநீதி ஆட்சி.

எளிய முறையில்,
ஆடம்பரம் இல்லாமல்…
இம்மணவிழா வரவேற்பு விழா, எளிய முறையில், ஆடம்பரம் இல்லாமல், அதிக செலவில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இம்மணவிழா வரவேற்பு விழா அழைப்பிதழை என்னிடம் கொடுத்த பொழுது, ‘‘இவ்வளவு ஆடம்பரமாக அழைப்பிதழ் போடவேண்டாம்; இன்னும் சிறிதாகப் போடவேண்டும். ஏனென்றால், மணவிழா வரவேற்பு முடிந்தவுடன், மணமக்களின் குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் கீழேதான் போடுவார்கள்” என்றேன்.

நம்முடைய கொள்கை வலிமையைக்
காட்டியிருக்கிறார் இராமலிங்கம்!
நம்முடைய இராமலிங்கம் அவர்களைப் பொறுத்தவரையில், எப்பொழுதுமே எளிமையாக இருக்கக்கூடியவர். இது ஒரு எளிமையாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சி. அதில், நம்முடைய கொள்கை வலிமையைக் காட்டியிருக்கிறார்.
அந்த வகையில், அருமை மணமக்களே நீங்கள் சிறப்பாக வாழவேண்டும். கழகப் பொதுச்செயலாளர் இங்கே சொன்னதுபோல, மணமக்களுக்கு நான் அறிவுரையைச் சொல்வதில்லை. அப்படி சொன்னாலும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை.
அதனால், ஒரே ஒரு வேண்டுகோளை மணமக்க ளுக்கு வைக்கிறேன்.
முதலாவதாக, நீங்கள் வாழ்வில் எந்த நிலைக்கு உயர்ந்தாலும், நிச்சயமாக உயர்வீர்கள், உங்களுடைய ஆற்றலினால், உழைப்பினால், அறிவினால்.

உங்களுடைய வாழ்வு சுயமரியாதை வாழ்வாக இருக்கவேண்டும்!
ஆகவே, உங்கள் வரவிற்கு உட்பட்டு செலவு செய்யுங்கள். உங்களுடைய வாழ்க்கை உண்மையான, சுதந்திரமான, சுயமரியாதை வாழ்வாக இருக்கவேண்டும்.
இரண்டவதாக, இந்த நிலைக்கு நீங்கள் வந்ததற்குக் காரணம் உங்கள் பெற்றோர்தான். அவர்களிடம் அன்பு காட்ட மறக்காதீர்கள்.
எந்தப் பெற்றோரும், பணத்தை பிள்ளைகளிடம் எதிர்பார்க்கமாட்டார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பை, பாசத்தை, மரியாதையைத்தான்.
பல நேரங்களில், இன்றைய சூழலில், அது தேய்ந்து, மறைந்து வருகிறது. ஆகவே, அதற்கு இடமில்லாமல் நீங்கள் சிறப்பாக வாழவேண்டும்.

உங்கள் பெற்றோரையே ‘ரோல் மாடலாக’
ஆக்கிக் கொள்ளுங்கள்!
நல்ல அளவிற்கு, நேர்மையாக எப்படி இராமலிங்கம் அவர்களும், அவருடைய வாழ்விணையர் இலட்சுமி அவர்களும் சிறப்பான முறையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்களோ – அவர்களையே நீங்கள் – உங்கள் ‘ரோல் மாடலாக’ – முன்னுதாரணமாக – எடுத்துக்காட்டாக கொண்டு இனிமையாக வாழுங்கள் என்று சொல்லி, அனைவருக்கும் நன்றி கூறி என்னு ரையை முடிக்கின்றேன்.
வாழ்க மணமக்கள்!
வளர்க பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையில் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *