முஸாபா்பூா், அக்.24 பீகாரின் முஸா பா்பூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞா் உயிரிழந்தாா்.
கடந்த வாரம் சரண், சிவான் மாவட் டங்களில் உள்ள 16 கிராமங்களைச் சோ்ந்த 37 போ் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்தனா். அந்த சோகம் மறைவதற்குள் மேலும் ஒருவா் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளாா்.முஸாபா்பூா் மாவட்டத்தின் ஹதவுரி பகுதியில் ஷியாம் ஷானி என்ற இளைஞா் கள்ளச்சாரயம் குடித்ததால் கடந்த 22.10.2024 அன்று வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. அவரது பாா்வைத் திறனும் குறையத் தொடங்கியது. இதையடுத்து, அவரை குடும்பத்தினா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரின் உடலை குடும்பத்தினா் சில மணி நேரத்திலேயே தகனம் செய்துவிட்டனா்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹதவுரி பகுதியில் கள்ளச்சாராயம் தொடா்பான தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. அந்தப் பகுதியில் வேறு யாருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது. முன்னதாக, சரண், சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 37 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 7 பெண்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டனா். 2 காவலா்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
பீகாரில் கடந்த 8 ஆண்டுகளாக முழு மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடா் நிகழ்வாக உள்ளன.