வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா

viduthalai
2 Min Read

கல்பெட்டா, அக்.24 காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் நேற்று (23.10.2024) வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக பேரணியாக சென்ற அவர், 35 ஆண்டுகளில் முதல் முறையாக எனக் காக பிரச்சாரம் செய்கிறேன் என்றார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், கேரளா சென்றுள்ள பிரியங்கா நேற்று வயநாடு மாவட்ட தலைநகர் கல்பெட்டாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றார். அப்போது அவரது சகோதரர் ராகுல், மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பனக்காட் சய்யித் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் உடன் இருந்தனர். இந்தப் பேரணியில், வயநாடு மட்டுமல்லாது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்த பிரியங்கா, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான டி.ஆர்.மேகாசிறீயிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தாய் சோனியா, சகோதரர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக வாகன பேரணியின் போது பிரியங்கா காந்தி பேசியதாவது: எனது சகோதரர் வெற்றி பெற்ற இந்த வயநாடு தொகுதியில் நான் போட் டியிடுவதை கவுரவமாக கருதுகிறேன். கடந்த 1989-ஆம் ஆண்டு எனது தந்தை ராஜீவ் காந்திக்காக வாக்கு சேகரித்தேன். அப்போது எனக்கு வயது 17. அதன் பிறகு என் தாய், சகோதரர் மற்றும் கட்சிப் பிரமுகர்களுக்காக பல முறை தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.

ஆனால் இந்த முறை 35 ஆண்டு களுக்குப் பிறகு முதல் முறையாக எனக்காக பிரச்சாரம் செய்கிறேன். உங்கள் ஆதரவை எனக்காக கோருகிறேன். இது எனக்கு மிகவும் வித்தியாசமான உணர்வை தருகிறது.

சகோதரர் பணியை தொடர்வேன்: இந்த உலகமே எனது சகோதரருக்கு எதிராக இருந்தபோது அவருக்கு நீங்கள் ஆதரவு அளித்தீர்கள். துணிச்சலுடன் போராட நீங்கள் அவருக்கு வலிமையை கொடுத்தீர்கள். இந்த தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எனது சகோதரர் என்னிடம் விளக்கினார். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர விரும்பும் எனக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “வயநாடு மக்களவை தொகுதிக்கு 2 உறுப்பினர்கள் கிடைக்கப் போகிறார்கள். ஒருவர் அதிகாரப்பூர்வமானவர் (பிரியங்கா). மற்றொருவர் (ராகுல்) அதிகாரபூர்வமற்றவர். ஆனால் இருவரும் வயநாடு தொகுதி மக்கள் நலனை பாதுகாக்க பாடுபடுவார்கள். என் தந்தை மரணம் அடைந்தபோது என் தாய் அனைத்தையும் இழந்ததாக உணர்ந்தார். ஆனால் என் தாயை பார்த்துக்கொண்டது என் சகோதரிதான். அப்போது அவருக்கு வயது 17. அவர் குடும்பத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்வார் என நம்புகிறேன். பிரியங்கா வயநாடு தொகுதி மக்களை குடும்ப உறுப்பினர்களாக கருதுகிறார். எனவே என் சகோதரியை நீங்கள்தான் (மக்கள்) பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *