புதுடில்லி, அக். 24- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்தும் சரிபார்ப்பு இயந்திரம் (விவிபேட்) குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. டில்லியில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு வாகனங்களை அனுப்பி, வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி திட்டமிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு டில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திலுள்ள 70 தொகுதி களுக்கும் 70 வாகனங்கள் அனுப்பப் படவுள்ளன.மொபைல் வேன்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வுள்ளது.
இது குறித்து பேசிய டில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என ஒவ்வொரு பொதுத் தேர்தலின்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சரிபார்ப்பு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவிஎம் மற்றும் விவிபேட் இயந் திரத்தில் உள்ள அடிப்படை அம்சங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இவிஎம்-மில் வாக்களிக்கும் முறைகள் விளக்கப்பட்டு, விவி பேட் இயந்திரத்தில் அதனை உறுதிப்படுத்துவது என படிப்படி யாக எடுத்துரைக்கப்படும். இந்த முயற்சியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் கணக்கெடுக்கப்படும். இந்த வாய்ப்பை டில்லி மக்கள் தவறாது பயன்படுத்திக்கொண்டு, முறையாகத் தெரியாததால், வாக்களிப்பதற்கு ஆகும் நேர விரயத்தை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2025 பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.