லடாக், அக். 24- கிழக்கு லடாக்கில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவு டன் ஒப்பந்தம் செய்துகொள்ள சீனா முன்வந்துள்ளது.
சமீப காலங்களில், இந்தியா – சீனா இடையே நடைபெற்று வந்த மோதல்கள் தொடர்பாக இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே நடத்தப்பட்டு வரும் பேச்சு வார்த்தையில் இணக்கமான சூழல் காணப்படுவதாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். தற்போது இரு நாடுகளும் இந்த விவகாரங்களில் ஒரு தீர்வை எட்டியுள்ளதாகவும், வரும் காலங்களில் இந்தத் தீர்மானங்களை செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், இந்த விடயத்தில் அவர் மேற்கொண்டு தகவல்கள் தர மறுத்துவிட்டார்.
இரு தரப்பினருக்கும் இடையே பல ஆண்டு களாக மோதல் இருந்து வரும் நிலையில், கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து இந்தியா – சீனா இடையேயான உறவில் பெரிய விரிசல் விழுந்தது. இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுபாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியா நேற்று முன்தினம் (22.10.2024) அறிவித்தது. இது, இரு நாட்டு ராணுவத்தினருக்கு இடையே 4 ஆண்டுகளாக நடைபெறும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.