இளைஞர்களே, கொள்கை வீரராவீர் –
பகை கக்கும் எதிரிகளை வீழ்த்துவீர்!
சென்னை, ஜூலை 30 – கழக இளைஞர்கள் கொள்கை உள்ளம் படைத்தவர்களாக உருவாகவேண்டும் – பகை கக்கும் எதிரிகளை வீழ்த்தவேண்டும் என்றார் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தி.மு.கழக இளைஞரணி மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று (29.07.2023) சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. தி.மு. கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு.
ஒருவருக்கு எத்தனை வயதானாலும் சொந்த வீட்டுக்குத் திரும்ப வரும்போது, சொந்த ஊரில் கால் வைக்கும்போது ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். அந்தப் புத்துணர்ச்சியோடு நான் இப்போது வந்திருக்கிறேன்.
இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இளை ஞரணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப் பாளர்களான உங்களை எல்லாம் இங்கு பார்க்கும்போது, அதே மகிழ்ச்சியைத்தான் புத்துணர்ச்சியைத்தான் நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், நான் இப்போது மிகவும் இளமையாக உணர்கிறேன். வயது 70. ஆனால் 20 மாதிரி நான் இங்கே நிற்கிறேன். இளமைக்கே உரிய அந்த வேகம் திரும்புகிறது. எல்லாப் புகழும் இந்த இளைஞரணிக்குத்தான்!
இங்கே நம்முடைய பொருளாளர் சொன்னாரே, மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தலைவர் கலைஞருடைய தலை மையில் நடந்த விழாவில் நாங்கள் இந்த இளைஞரணியை உருவாக்கினோம்.
அன்றைக்கு வந்த இளைஞர்கள் எப்படிப்பட்ட நெஞ்சுறுதியோடு, முக மலர்ச்சியோடு இருந்தார்களோ அந்த நெஞ்சுறுதியை மலர்ச்சியை, எழுச்சியை உங்களிடம் பார்க்கிறேன்.
நீங்கள் ‘இளவட்டங்கள்’ அல்ல; கழகத்தினுடைய ‘இளம் ரத்தங்கள்’! உங்களுக்குப் பொறுப்புகள் வழங்கி, கழகத்துக்குப் புதுரத்தம் பாய்ச்சியிருக்கிற இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
மொத்தம் உள்ள 72 மாவட்டக் கழகங்களில் இளைஞரணி சார்பில் மாவட்ட – மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் எனப் பொறுப்புகளைக் கேட்டு விண் ணப்பித்த 4 ஆயிரத்து 158 பேரில் இருந்து, தம்பி உதயநிதி அவர்கள் அனைத்து நகரங்களில் இருந்து நேர்காணல் (மிஸீtமீக்ஷீஸ்வீமீஷ்) நடத்தி, அதில் தேர்வாகி, 609 பேர் இளைஞரணி பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்கள் இங்கு நியமிக்கப் பட்டிருக்கிறீர்கள்.
இந்தப் பொறுப்பு ஏதோ உங்களுக்கு சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. உங்கள் உழைப்புக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது! இதை நீங்கள் பொறுப்பாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
பதவியல்ல – பொறுப்பு!
அடிக்கடி நான் சொல்வதுண்டு. இது பதவியல்ல, பொறுப்பு. நான் பல நேரங்களில் சொல்லியிருக்கிறேன். கலைஞர் அவர்கள், நான் மேயராக பொறுப்பேற்றபோது, அந்த மேயருக்குரிய முதல் பேச்சைத் தயாரித்து கலைஞரிடம் கொண்டு சென்று காண்பித்தபோது, என்னுடைய பேச்சில் இரண்டு திருத்தங்களைச் செய்தார். அதில் நான் மேயர் பதவி என்று இரண்டு இடத்தில் போட்டிருந்தேன். அந்தப் பதவியை அடித்துவிட்டு, பொறுப்பு என்று மாற்றினார். மாற்றிவிட்டு சொன்னார், ‘‘ஏன் மாற்றினேன் தெரியுமா? இது உனக்கு கிடைத்திருக்கும் பதவியல்ல, இது உனக்கு கிடைத்திருக்கும் பொறுப்பு. நீ பொறுப்போடு பணியாற்ற வேண்டும்” என்றார். எனவே அதைத்தான் நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
2019 ஜூலை 4 ஆம் தேதி கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல், தம்பி உதயநிதி அவர்கள் பல்வேறு மகத்தான சாதனைகளைச் செய்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு என்னிடம் தேதி கேட்டபோது இளை ஞரணியின் செயல்பாடுகளைப் பற்றி அவரிடம் நான் கேட்டேன்.
அவர் சொன்ன பட்டியலைக் கேட்டு எனக்கே மலைப்பாகிவிட்டது. அதில் சிலவற்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அதாவது, 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணிக்குச் சேர்த்து, கழகத்தின் வலிமையை இன்னும் கூட்டியிருக்கிறார்.
2019 தேர்தலுக்கு முன்பே, ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்திருக்கிறார்.
அவர் காட்டிய ஒற்றை செங்கல் உங்கள் ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன். எப்படி மறக்க முடியும்? நம்முடைய எதிரிகளாலேயே அதை மறக்க முடியவில்லை. இன்னும் அதை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
நீர்நிலைகளைத் தூர் வாருவது, நம்முடைய இயக்கம் மீது காலம் காலமாக எதிரிகள் பரப்புகிற அவதூறுகளை முறியடிக்க பொய்ப் பெட்டி நிகழ்ச்சி நடத்தியது, கரோனா காலத்தில் நிவாரணப் பணிகளில் இளைஞரணியை ஈடு படுத்தி, பொதுப்பணிகள், அவர்களுக்கு வேண்டிய வசதி களை செய்து கொடுத்தது மட்டுமல்ல, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணைய முறைகேட்டைக் கண்டித்தும் போராட்டம் நடத்தினார்.
அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்க முயற்சி நடந்தபோது அதை எதிர்த்துப் போராடினார். ‘நீட்’ தேர்வு, ஹிந்தி ஆதிக்கம் போன்ற அநீதிகளுக்கு எதிராக தம்பி உதயநிதியும், இளைஞரணியும் களமாடியிருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லத்தில் இருந்து, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தனது பரப்புரைப் பயணத்தை – பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் அவர் போட்டியிட்டாலும், மற்ற தொகுதிகளில்தான் அதிகமாகப் பிரச்சாரம் – பரப்புரை செய்தார்.
சட்டமன்ற உறுப்பினராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, இப்போது அந்தத் தொகுதியில் ஏராளமான முன்மாதிரித் திட்டங்களை அறிமுகப்படுத்தி எல்லோருக்கும் ஒரு தீமீஸீநீலீ-னீணீக்ஷீளீ sமீt செய்திருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேல், மெரினாவில் மாற்றுத் திறனாளி களுக்காக சிறப்பு நடைபாதையைத் திறந்து வைத்தார்.
அதன் மூலமாக, மாற்றுத்திறனாளித் தோழர்கள் அலை யோடு விளையாடுகிற வீடியோவை எல்லாம் பார்த்திருப் பீர்கள். அதைப் பார்த்தபோது என் மனதில் சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அவருக்கு மட்டுமல்ல, நமது ஆட்சிக்கே மிகப்பெரிய நற்பெயரை அந்த மனிதநேயச் செயல்பாடு சம்பாதித்து கொடுத்தது.
இவை எல்லா சிறப்புகளுக்கும் மகுடம் வைப்பதைப் போல, 234 தொகுதிகளிலும் ‘திராவிட மாடல்’ பயிற்சி பாசறைக் கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி முடித் திருக்கிறார். இது அவருடைய மகத்தான சாதனை!
‘திராவிட மாடல்’ பயிற்சிப் பாசறைகள்
இந்த திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்தான், நம்முடைய இயக்கத்திற்கான விதைகள்!
இப்போது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி அவர்கள் செய்து வருகிற பணிகளை எல்லாம் நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு கட்சிப் பணி – ஆட்சிப் பணி ஆகிய இரண்டிலும், ஒரே நேரத்தில் மிகமிகச் சிறப்பாக செயல்பட்டு, கழகத்திற்கும் ஆட்சிக்கும் நல்ல பெயரை வாங்கித் தருகிறார் நம்முடைய மாண்புமிகு உதயநிதி அவர்கள்.
சில நாட்களுக்கு முன்பு, திருப்பத்தூர் – திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்ததை பற்றி, விளக்கமாக விரிவாக நம்முடைய திரு வண்ணாமலை (தெ) மாவட்டச் செயலாளர் அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் ‘முரசொலி’யில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதைப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் நேரத்தில் எவ்வாறு சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்வோமோ அது மாதிரி செய்திருக்கிறார்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்… புதிய பொறுப் பாளர்களாக அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களுக்கு நான் வேறு யாரையும் உதாரணம் காட்ட விரும்பவில்லை. அவரையே உங்களுக்கு உதாரணம் காட்ட விரும்புகிறேன்.
உதயநிதியே உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நீங்கள் எல்லோருமே உதயநிதியை மாதிரி செயல்பட வேண்டும். அதற்காகத்தான் இதையெல்லாம் சொல்கிறேன்.
உங்களை நேரில் பார்ப்பதில் நான் அடைகிற உற்சாகம், அதைவிட உங்கள் தீர்மானங்கள், அதை நிறைவேற்றுகிற போது நான் மேடையில் இல்லை. இருந்தாலும் நேற்றிரவே இளைஞரணி செயலாளர் என்னிடத்தில் காண்பித்து அதற்குரிய அனுமதியை பெற்றார். அதைப் பார்த்தபோது எனக்கு பல மடங்கு மகிழ்ச்சி கூடிவிட்டது. எனக்கு இப்போது ஒரு நிம்மதி வந்துவிட்டது. நான் பிறந்த பயனை அடைந்து விட்டேன். உண்மையில் அதைத்தான் சொல்கிறேன்.
‘இல்லம்தோறும் இளைஞரணி!’
கழகம் மீது ஆர்வத்தில் இருக்கிற 16 முதல் 35 வயது இளைஞர்களை உறுப்பினர்களாக்க நீங்கள் நிறைவேற்றியிருக்கிற ‘இல்லம் தோறும் இளைஞரணி’ தீர்மானத்தை நான் பாராட்டுகிறேன். இது மிகவும் முக்கியமானது.
கடந்த சில ஆண்டுகளாக கழகத்தை நோக்கி வருகிற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகியிருக்கிறது.
அதிலும் கடந்து இரண்டு ஆண்டுகளில், நமது திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றுகிற,
‘நான் முதல்வன்’‘புதுமைப் பெண்’
‘இல்லம் தேடிக் கல்வி’ – போன்ற திட்டங்கள் மாணவர்கள், இளைஞர்களுக்கு நம்மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி யிருக்கிறது. கழகத்தின் மீது பற்றோடு இருக்கிறவர்களை தேடிச் சென்று நாம்தான் உறுப்பினர் ஆக்க வேண்டும்.
அதேபோல் இளம் பேச்சாளர்களை அடையாளம் காண மாவட்டம் தோறும் ‘திராவிட மாடல்’ பயிற்சி வகுப்புகளை மீண்டும் தொடங்கப் போகிறோம் என்று நிறைவேற்றியிருக்கிற தீர்மானமும் மிகவும் முக்கியமானது.
தொடர்ச்சியாக ‘திராவிட மாடல்’ பாசறைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
எண்ணிக்கைப் பலத்தைவிட கொள்கைப் பலம் முக்கியம்!
‘‘நம்முடைய கொள்கையையும், வரலாற்றையும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னால்தான் கொள்கையும் வலிமை பெறும், கேட்பவர்களின் மனதிலும் தங்கும்” – என்று தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார்.
அதனால் பாசறைக் கூட்டங்களை நடத்திக் கொண்டே இருங்கள்.
புதிதாக இளைஞரணிக்குள் வருகிறவர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை பற்றி முழுவதுமாக தெரிந்தவர் களாக, புரிந்தவர்களாக வளர வேண்டும்.
நம்முடைய இயக்கம், பேசிப் பேசி வளர்ந்த இயக்கம். எழுதி எழுதி வளர்ந்த இயக்கம். என்னைப் பொறுத்த வரைக்கும், நம்முடைய இயக்கத்தில் உறுப்பினராக எத்தனை பேர் சேருகிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம் என்பதைவிட, சேர்ந்த இளைஞர்களை திராவிட எண்ணம் கொண்ட போர் வீரர்களாக நீங்கள் எவ்வாறு மாற்றப் போகிறீர்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். அதைத்தான் நான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறேன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருடைய வாழ்க்கையை, திராவிட இயக்கத்தின் வரலாற்றை அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான, சமூகநீதி, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி – ஆகியவை குறித்து வகுப்புகள் எடுக்க வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்தது? இன்றைக்கு எப்படி இருக்கிறது? 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்தது? இன்றைக்கு எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு வீட்டிலும் அன்றைக்கு எத்தனை பேர் படித்திருந்தார்கள்? இன்றைக்கு எத்தனை பேர் படித் திருக்கிறார்கள்? அன்றைக்கு டிகிரி வாங்கியவர்கள் எத்தனை பேர்? இன்றைக்கு எத்தனை பேர் பட்டதாரிகளாக இருக் கிறார்கள்?
மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள்… இந்தக் கணக்கை எல்லாம் பார்த்தாலே, உங்களுக்கு திராவிட இயக்கத்தின் சாதனை நன்றாகப் புரியும். அடுத்தவர்களிடமும் சொல்ல முடியும்.
இந்த சாதனையை எல்லாம், எல்லோரிடமும் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு உதவியாகத்தான் துணைப் பொதுச் செயலாளர் நம்முடைய அன்பிற்கினிய ஆ.இராசா அவர்கள் கிட்டத்தட்ட ஓராண்டிற்கு மேலாக தொகுத்திருக்கிற 20 நூல்களை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அதை உங்களுக்கு கொடுத்திருக்கிறோம்.
அதில் நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசிய முக்கியமான பேச்சுகளையும் வகுத்தெடுத்து, அதையும் தொகுத்து கொடுத்திருக்கிறார்.
இது எல்லாமே திராவிட இயக்கத்தின் பால பாடங்கள்! இது எல்லாவற்றையும் படியுங்கள்! திரும்பத் திரும்பப் படியுங்கள்! 20 புத்தகம் அதில் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் படித்தால் போதும். இரவில் தூங்குவதற்கு முன்பு, பத்து நிமிடத்தில் படித்து முடித்துவிடலாம். படிக்கப் படிக்கத்தான் சிந்திக்குற திறன் அதிகரிக்கும். அடுத்தவர் களுக்கு எடுத்துச் சொல்ல உங்களுக்கும் தூண்டுதலாக அமையும்.
இங்கு எதுவும் தானாக மாறவில்லை. மாற்றியது யார்? இதையெல்லாம் உணர்த்துவதற்கு இந்தப் புத்தகங்கள் நிச்சயம் பயன்படும். இதே நம்முடைய தமிழ்நாட்டில்தான், படிக்கக் கூடாது, சாலைகளில் நடக்கக் கூடாது, கோயிலுக்குள் வரக் கூடாது, பதவிகளில் நிற்கக் கூடாது – என்றெல்லாம் அடக்குமுறை இருந்தது.
அந்தக் காலத்தை உடைத்துவிட்டு முன்னேறி வந்திருக் கிறோம். அந்த விழிப்புணர்ச்சியை தொடங்கி வைத்தவர்தான் தந்தை பெரியார், இந்த முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள், பேரறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும்.
இவர்கள் போட்டு தந்த அடித்தளத்தில்தான் நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்கு நடந்துகொண்டு இருக் கிறது. இதை நம்முடைய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும். அப்படி உணர்ந்த இளைஞர்கள் அடுத்தவர்களுக்குப் பரப்ப வேண்டும்.
தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு, நம்முடைய எதிரிகள் என்ன நினைத்தார்கள் என்றால், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் – மக்கள் மனதில் இருந்து அழிந்து விடுவார்கள், திராவிடக் கருத்தியல் மறைந்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் ஆசையில் மண் விழுந்தது.
அதற்கு காரணம், சுயமரியாதையும், பகுத்தறிவும் உடைய சமுதாயமாக தமிழ்ச் சமுதாயத்தை மாற்றிய திராவிடத்தின் வாரிசுகளாக நாம் இருக்கிறோம்.
நமக்கு அடுத்தும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை எடுத்துச் செல்கிற வாரிசுகளை இங்கே உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
வாரிசு அரசியலா!
வாரிசு வாரிசு என்று ஏன் திரும்ப திரும்ப சொல்கிறோம் என்றால் நம்முடைய எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறானோ நாமும் அதே ஆயுதத்தைதான் எடுக்க வேண்டும்.
கொள்கையைப் பேச, நமக்கு எண்ணிக்கையைவிட, எண்ணங்கள்தான் முக்கியம்! இதை எப்போதும் மறந்து விடாதீர்கள்!
நீங்கள் ஒவ்வொருவரும் கழக கொள்கைகளை பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்கிற பேச்சாளர்களாக மாற வேண்டும். அடுத்தவர்களையும் மாற்ற வேண்டும்.
அதற்கு, தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய மூத்த பிள்ளை என்று சொன்ன முரசொலியை முழுவதுமாக படியுங்கள். பள்ளிக் காலங்களிலேயே நான் நாள்தோறும் முரசொலியை முழுமையாக படிக்கத் தொடங்கினேன். இந்த மேடையில் இருப்பவர்களும் அப்படித்தான். ‘முரசொலி’தான் என்னை உருவாக்கியது. எங்களை உருவாக்கியது. உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
கழக மூத்த முன்னோடிகளின் உரைகள் – அரசின் சாதனைகள் முழுவதுமாக ‘முரசொலி’யில் வருகிறது. ‘முரசொலி’யை ஒழுங்காக படித்தாலே எல்லாவற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இப்போது இளைஞரணி சார்பில் பாசறைப் பக்கம் வருகிறது. அதற்கு என்று ஒரு பக்கத்தை ஒதுக்கி, அது வந்து கொண்டிருக்கிறது.
அதில், நம்முடைய சுப.வீரபாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி, கோவி.லெனின், சுப.குணராஜன் போன்ற வர்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.
‘திராவிடத்தால் வாழ்கிறோம்’ என்ற எளிமையான படக்கதை கார்ட்டூன் போன்று வரலாற்றை எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொல்கிறது. அதையும் புத்தகமாக்கி உங்களிடம் கொடுத்திருக்கிறோம். இதையெல்லாம் படித்து – உள்வாங்கி எந்தெந்த வழியில் எல்லாம் பரப்புரை செய்ய முடியுமோ, அப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
மக்களை நாடகக் கொட்டகைக்கு – திரையரங்கிற்கு – பொதுக் கூட்டத்திற்கு மாநாட்டுத் திடலுக்கு அழைத்துக் கொண்டு வந்த காலம் முன்பு இருந்தது. இப்போது, மக்களின் உள்ளங்கைக்கே நம்முடைய கருத்துகளை எடுத்துச் செல்கிற வாய்ப்பை, தொழில்நுட்பம் ஏற்படுத்தி தந்திருக்கிறது.
பேஸ்புக் – யுடியூப் – வாட்ஸ்அப் – ட்விட்டர் – இன்ஸ்டாகிராம் – ஷேர்சாட் – டெலிகிராம் என்று எல்லா சமூக ஊடகங்களையும் நம்முடைய கொள்கைகளை பரப்பவும், கழக வளர்ச்சிக்காகவும் – நம்முடைய சாதனை களை எடுத்துச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம் மீதான அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க, நம்முடைய சாதனைகளைச் சொல்லியாக வேண்டும். அதை சொல்லவிடாமல் திசைத் திருப்ப நினைப்பவர்களின் சதியில் சிக்கி – பிரச்சினைகளை நாம் உருவாக்க வேண்டாம். நாள்தோறும் ஏதாவது பொய் சொல்லி, இல்லாததை ஊதிப் பெரிதாக்கி, அது பற்றியே நாம் பேசவேண்டும் என்ற சதி செய்பவர்களின் கருத்துகளுக்கு யாரும் முக்கியத்துவம் தராதீர்கள்.
என்னை செதுக்கிய சிற்பிகள்!
சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, இயக்கத்தை வழி நடத்துவதில் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர், மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர் – என்று இந்த நான்கு பேரின் நிழற்குடையில் நிற்கிறவன் நான். இவர்கள்தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள்! இங்கிருப்பவர்களை செதுக் கியவர்கள் அவர்கள்தான். இந்த நான்கு பேரும் தனி மனிதர்கள் அல்ல. கருத்தியல் அடையாளங்கள்!
அவர்களை போன்றே நானும் கருத்தியல் அடையாள மாத்தான் இருக்க விரும்புகிறேன். இப்படித்தான் நீங்களும் இருக்க வேண்டும். இதே நோக்கத்துடன்தான் நீங்களும் வளர வேண்டும்.
உங்களின் வளர்ச்சி என்பது, பதவி வளர்ச்சியாக இல் லாமல்; கொள்கை வளர்ச்சியாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சியாக இருக்கவேண்டும்!
நான், இந்த முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந் திருப்பதால் பெருமை கொள்பவன் இல்லை. நாட்டுக்கு நன்மை செய்கிற இடத்தில் நான் இருக்கிறேனே என்று பெருமைப்படுகிறேன்.
பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் உட் கார்ந்த முதலமைச்சர் நாற்காலியில் நான் உட்காருவேன் என்று நான் கனவில்கூட நினைத்தது இல்லை. அவர்களை போன்று இந்த நாட்டுக்கும், இனத்துக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று நினைத்து நான் நாள்தோறும் உழைத்தேன். அதனால், இந்த உயர்வைப் பெற்றேன்.
இது தனிப்பட்ட என்னுடைய ஆட்சி இல்லை; பல நூற்றாண்டுகளாக ஒரு இனம் தாங்கி நிற்கிற கொள்கைகளை அந்த மக்களின் ஆதரவோடு செயல்படுத்துகிற திராவிட மாடல் ஆட்சி இது.
இந்த இயக்கம் எந்த நோக்கத்துக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை செயல் படுத்துவதற்கான ஆட்சி இது! இதை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றுதான் இப்போது ‘இந்தியா’ கூட்டணியை உருவாகி இருக்கிறது. இந்தியா – என்ற பெயரை கேட்டாலே சிலர் மிரள்கிறார்கள், அலறுகிறார்கள். பாட்னா கூட்டம் – பெங்களூரு கூட்டம் வெற்றி பெற்றிருக் கிறது. இதைப்பார்த்து பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மத்தியப் பிரதேசத்திற்குப் சென்றாலும், அந்தமான் விழாவில் கலந்து கொண்டாலும், எங்கு சென்றாலும் தி.மு.க.வை விமர்சிக்கிறார் பிரதமர். ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடக்கிறதாம். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த – வாழ வைத்துக் கொண்டிருக்கிற ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா காலத்தில் அவதிப்பட்டபோது, ஆட்சிக்கு வந்தவுடன் நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கிய ஆட்சி நம்முடைய தி.மு.க. ஆட்சி. இலவசப் பேருந்து பயணம், ஒரு கோடி மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, 18 லட்சம் மாணவ – மாணவியருக்கு காலை உணவு, 13 லட்சம் பேரின் நகைக் கடன் ரத்து, ஒரு கோடி மக்களைத் தேடி இலவச மருத்துவம் – என்று இந்த இரண்டு ஆண்டுகளில் எட்டுக் கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் பயன் அடையக் காரணமான, தமிழ்நாட்டுக் குடும்பங்களுக்கான ஆட்சிதான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் இந்த ஆட்சி.
ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது மூலமாக தாங்கள் ஏதோ வெல்ல முடியாக கட்சி என்பது போல பயம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தம்பி உதயநிதி பேசுகிறபோது சொன்னாரே, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா? இனிமேல் இதுபோல் ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள்.
அமித்ஷா அவர்கள், தமிழ்நாட்டிற்காக ஒன்றிய அரசின் புது திட்டத்தை தொடங்கி வைக்க வந்தாரா? இல்லை ஏற்கெனவே அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க வந்தாரா, இல்லை.
ஏதோ பாதயாத்திரையை தொடங்கி வைக்க வந்திருக் கிறார். அது பாதயாத்திரையா? இல்லை, குஜராத்தில் 2002 ஆம் ஆண்டும், இப்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிற பாவ யாத்திரை.
இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் அவர். நான் கேட்கி றேன், இந்த இரண்டு மாதமாக பற்றி எரிகிற மணிப்பூருக்கு சென்று அமைதி யாத்திரை நடத்த முடிந்ததா? முடியவில்லை.
அமைதியாக இருக்கிற தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்தோடு பாதயாத்திரையை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். நேற்று பேசியிருக்கிறார். தி.மு.க. குடும்பக் கட்சி என்று சொல்லியிருக்கிறார். கேட்டுக் கேட்டு புளிச்சிப் போன ஒன்று. நானும் எவ்வளவோ சொல்லிவிட்டேன். வேறு ஏதாவது மாற்றி சொல்லுங்கள் என்று. பா.ஜ.க.வில் எந்தத் தலைவரின் வாரிசும் அரசியல் பதவியில் இல்லையா? எல்லோரும் நாளைக்கு காலையில் விலகிவிடுவார்களா? பா.ஜ.க.வில் மாநில வாரியாக பதவியில் இருக்கிற வாரிசுகளின் பட்டியலை நான் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும். அதனால் வேறு ஏதாவது புதிதாக சொல்லுங்கள் – அமித்ஷா அவர்களே!
இலங்கைப் பிரச்சினை
இலங்கைப் பிரச்சினையை பற்றியும் பேசியிருக்கிறார். தமிழ் மக்களின் இரத்தக்கறை படிந்த ராஜபக்ஷேவைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரின் எதிர்ப் பையும் மீறி 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்தவர்களுக்கு இலங்கைப் பிரச்சினையைப் பற்றி பேச உரிமை இருக்கிறதா? நான் கேட்கிறேன் சொல்லுங்கள். திடீர் என்று அமித்ஷாவிற்கு, மீனவர்கள் மீது பாசம் பொங்கி இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கியபோது அன்றைய பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி என்ன சொன்னார்?
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட உயிரிழக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சினை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச் சினை. இரண்டு மாநில மீனவர்களையும் தீர்த்து வைப்போம். கூட்டு நடவடிக்கை எடுப்போம்’ என்று ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி சொன்னார்.
அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, 2017 இல் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட் டிருக்கிறார். 2017-இல் உங்களுடைய ஆட்சிதானே நடந்தது.
அதுமட்டுமல்ல, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோடி சென்னையில் பேசினார், ‘1600 மீனவர்கள் என்னுடைய ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்’ – என்று சொன்னார். அப்படியென்றால், அவருடைய ஆட்சிக் காலத்தில் 1600 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒப்புக் கொள்கிறாரா? அதுதானே அர்த்தம்.
313 மீனவ படகுகள் விடுவிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். அப்படியென்றால், அவருடைய ஆட்சிக் காலத்தில் 313 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அதை ஏற்றுக் கொள்கிறாரா? இவ்வாறு தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா?
அதுமட்டுமல்ல, அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது பற்றியும் பேசியிருக்கிறார். நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அமித்ஷா அவர்களே. குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்கள் எல்லாம் பிரதமர் மோடியின் அமைச்சரவையில்தானே இருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பது பற்றி கேள்வி கேட்கிற நீங்கள், பிரதமர் மோடியிடம் இந்தக் கேள்வியை கேட்கும் தைரியம் அமித்ஷா அவர்களுக்கு உண்டா? இந்த வழக்கு பற்றி இன்னும் என்னால் பேச முடியும். ஆனால் உச்சநீதிமன்றத்தில் இருக்கிற வழக்கு என்பதால், அதுகுறித்து விரிவாக சொல்ல முடியாது.
பா.ஜ.க. தன்னுடைய அரசியல் எதிரிகளை சலவை செய்கிற வாஷிங் மிஷினாக அமலாக்கத்துறையை பயன் படுத்தி வருகிறது என்பது இந்தியா முழுவதும் தெரிந்த ரகசியம்!
புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவதும், அவர்கள் பா.ஜ.க. பக்கம் மாறினால் அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் பா.ஜ.க.வின் அசிங்கமான அரசியல் பாணி!
அதனால்தான், உச்சநீதிமன்றமே அமலாக்கத்துறை இயக்குநரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து, ஜூலை 31-க்கு பிறகு நீட்டிக்கக் கூடாது என்று கூறிய பிறகு, திரும்ப அதே உச்சநீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று அவருக்கு மேலும் இரு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வாங்கியிருக்கிறது என்றால், என்ன காரணம்? ஏன் நாட்டில் அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு தகுதியான மிஸிஷி அதிகாரிகளே இல்லையா? இதே கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.
பி.ஜே.பி. ஆட்சி இன்னும் சில மாதங்களே…!
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில மாதங்கள்தான். ஜனநாயகம் – சமூக நீதி – மதச்சார்பின்மை – அரசியல் சட்டம் என்று அனைத்தையும் அழிக்க முயற்சிக்கும் பா.ஜ.க. ஆட்சி முடியப் போகிறது. இந்தியாவிற்கு விடியல் பிறக்கப் போகிறது.
தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற இந்தியா-விற்கு வாக்களியுங்கள் என்பதுதான் நம்முடைய தேர்தல் முழக்கமாக அமையப் போகிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் களம், உங்களுக்கு மிகப்பெரிய பயிற்சிக் களமாக அமையப் போகிறது. தேர்தல் பணி – பரப்புரை ஆகியவற்றின் மூலமாக பொது மக்களைச் சந்திக்க இருக்கிறீர்கள். மக்களைச் சந்திப்பதுதான் மகத்தான பணி!
“மக்களிடம் செல், மக்களோடு வாழ்!” என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. அவ்வாறு செயல்படுங்கள் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களைப் போன்ற இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்களாக, துணை அமைப்பாளர்களாக இருந்தவர்கள்தான் – சட்டமன்ற உறுப் பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர் களாக இன்றைக்கு இருக்கிறோம். நானும் இளைஞரணியில் இருந்து வந்தவன்தான். இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞரணியில் இருந்து வந்து உட்கார்ந்திருப்பவர்கள்தான். நாங்கள் இருந்த இடத்திற்கு நீங்களும் நிச்சயமாக ஒரு கட்டத்தில் வரத்தான் போகிறீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்காலத்தில் உயர்வான இடத்தைப் பெறத்தான் போகிறீர்கள். எனவே தலைவர் என்ற முறையில் மட்டுமல்ல – உங்களில் ஒருவனாக வாழ்த்துகிறேன்.
நன்றி! வணக்கம்!
-இவ்வாறு அவர் உரையாற்றினார்.