முஸ்லிம் மக்களை குறிவைத்து என்கவுண்டர் நிகழ்த்தப்படுகிறதா?
அசாம் பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, அக்.24 ஒரே ஆண்டில் 171 என்கவுண்டர்களா? முஸ்லிம் மக்களை குறிவைத்து என்கவுண்டர் நிகழ்த்தப்படுகிறதா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மாநில காவல்துறை என்கவுண்டர் கொலைகளை நடத்துவது ஏன்? அசாம் காவல்துறையினர் ஒரு சமூகத்தை ஏன் குறிவைக்கிறார்கள்? தங்கள் கடமைகளை மீறி அவர்கள் செயல்பட சுதந்திரம் அளித்தது யார் என்று அசாம் பா.ஜ.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:
பாஜக ஆளும் அசாம் மாநி லத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காவல்துறையினரின் என்கவுண்டர் கொலை நிகழ்வுகள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 2021-2022 ஒரே ஆண்டில் 171 என்கவுண்டர்கள் அசாம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன. இந்த என்கவுண்டர் கொலைகளில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வர்களே அதிகம் உயிரிழந் துள்ளார்கள். இதனால் அசாம் பாஜக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முஸ்லிம் மக்களை மட்டுமே குறி வைத்து என்கவுண்டர்கள் நிகழ்த்தி வருகி றார் என பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அசாம் பாஜக அரசு மேற் கொண்ட என் கவுண்டர்கள் 60% போலியானவை என செய்தி களும் அண்மையில் வெளி யாகின. என்கவுண்டர்கள் விஷயத்தில் மாநில அரசு ஒரு முறைகூட விசாரணைக்கு உத்தரவிடவில்லை. அசாமில் நடந்த காவல்துறை என்கவுண்டர் கொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆரிப் யெசின் ஜ்வாடர் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கவுகாத்தி உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க மறுத்தது. இதனால் வழக்குரைஞர் ஆரிப் யெசின் ஜ்வாடர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அசாம் என்கவுண்டர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி,”அசாம் மாநிலத்தில் 2021-2022இல் 171 காவல்துறை என்கவுண்டர்கள் நடந்துள்ளன. என்கவுண்டர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை (முஸ்லிம்) குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாதாரண விசாரணை கூட நடத்தவில்லை” என வாதிட் டார்.
அசாம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்,”கடந்த 10 ஆண்டு களில் தப்பியோடிய குற்றவாளிக ளில் 10% பேர் மட்டுமே காவல்துறை என் கவுண்டர் நடவடிக்கையில் காயமடைந்துள்ளனர். மாநிலத்தில் நிகழும் என்கவுண்டர்கள் தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது” என மழுப்பலாக பதில் அளித்தார்.
அசாம் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞரின் மழுப்பலான பதிலால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,‘‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மாநில காவல்துறை என்கவுண்டர் கொலைகளை நடத்துவது ஏன்? அசாம் காவல்துறையினர் ஒரு சமூகத்தை ஏன் குறிவைக்கிறார்கள்? தங்கள் கடமைகளை மீறி அவர்கள் செயல் பட சுதந்திரம் அளித்தது யார்? 171 என்கவுண்டர்கள் நிகழ்ந்துள்ள சூழலில், இதுவரை மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தாதது ஏன்? மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த 10 அல்லது 15 நாட்கள் கூட ஆகாது. எதுவாக இருந்தாலும் என்கவுண்டர் நடக்க வில்லை என்று கூற முடி யாது. அசாம் மாநிலம் மிகவும் சிக்கலான கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. அசாம் மாநிலத்தில் அடிக்கடி போலி என்கவுண்டர் வழக்குகள் வருகின்றன. 171 என்கவுண்டர் தொடர்பாக விரிவான விபரங்களை அசாம் அரசு அளிக்க வேண்டும்” எனக் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி கள் வழக்கின் அடுத்தகட்ட விசார ணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.