புதுடில்லி, அக்.23 உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் சுமார் 1800 கோடி ரூபாய் பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமன் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரபலங்கள் முன்னிலையில் பிரதமர் மோடி தலைமையில் கோவிலுக்கு குட முழுக்கு நடைபெற்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மசூதி இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
அதன்பிறகு ராமன் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சமீபத்தில் தனது சொந்த ஊரான பூனேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நீதிபதி சந்திர சூட் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு சில வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரவே முடியாது. அப்படி தான் ராமஜென்ம பூமி-பாபர் மசூதி பிரச்சினை மூன்று மாதங்களாக என் முன் இருந்தது. நாள்தோறும் நான் கடவுளின் சிலைக்கு முன்னால் அமர்ந்து இந்த பிரச்சினை ஒரு தீர்வுக்கு வரவேண்டும் என வேண்டினேன். என்னை நம்புங்கள். உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயமாக அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று அவர் பேசினார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டின் கருத்தை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண கடவுளிடம் வேண்டுதல் செய்ததாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். ஒரு சாமானியனுக்கு உயர் நீதிமன்றத் திலும், உச்ச நீதிமன்றத்திலும் பணமில்லாமல் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் வேண்டுதல் செய்திருந்தால் இந்த பிரச்சினை தீர்ந்திருக்கும். இ.டி., சி.பி.அய்., அய்.டி. ஆகியவற்றின் தவறான பயன்பாடு நிறுத்தப்பட்ட வேண்டும் என்று அவர் வேண்டுதல் செய்திருந்தால் நிறுத்தப் பட்டு இருக்கும் என பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.