திருச்சி, அக். 23- திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
கட்சியின் நூற்றாண்டு ஆசிரியர் பயிலரங்கம் திருச் சியில் நேற்று (22.10.2024) நடை பெற்றது. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலை வகித்தார். தேசியச் செயலாளர் நாராயணா, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, பயிலரங்கை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. கூட்டணியில் இருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேறி விடுவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியிருப்பது, அவரது விருப்பம். தற்போது அதிமுக எரிந்துகொண்டிருக்கிறது, அதை அணைப்பதற்கு பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும். திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாகவும், ஒற்றுமையுடனும் இருக்கிறோம். இந்த அணி தொடரும்.
பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். நடவடிக்கை எடுத்தால், திமுக அரசு அராஜக அரசுஎன்கிறார்கள். எல்லா பிரச்சினைகளிலும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.