காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
புதுடில்லி, அக். 22- குடும்ப கட்டுப்பாட்டை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைத்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அதில், தென்மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியதால், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
இதை ஈடுசெய்ய இணையர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், 2குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் இப்பிரச்சினை தொடர்பாக குரல் கொடுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தியதில் தென்மாநிலங்கள் முன்னோடியாக உள்ளன. முதலில், கேரளா 1988ஆம் ஆண்டு அத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியது.
பின்னர், தமிழ்நாடு 1993ஆம் ஆண்டிலும், ஆந்திரா 2001ஆம் ஆண்டிலும், கருநாடகா 2005ஆம் ஆண்டிலும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தின
அதே சமயத்தில், குடும்ப கட்டுப் பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், தங்கள் மாநிலங் களில் நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்பட்டு விடுமோ என்ற கவலை, மேற்கண்ட மாநிலங்களில் நிலவுகிறது.
வாஜ்பாய் அரசு திருத்தம்
அதனால்தான், கடந்த 2001ஆம் ஆண்டு, வாஜ்பாய் அரசு அரசியல் சாசனத்தின் 82ஆவது பிரிவில் திருத்தம் செய்தது. அதில், 2026ஆம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படும் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதிகள் சரிசெய்து கொள்ளப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
2026ஆம் ஆண்டுக்கு பிறகு நடத்தப் படும் முதலாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு என்றால், 2031ஆம் ஆண்டில் நடத்துவது என்று அர்த்தம்.
தண்டிக்கப்படக்கூடாது
ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பே இன்னும் நடத்தப்பட வில்லை.
அந்த கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்குவதற்கு இந்த கணக்கெடுப்பு விவரங்கள் பயன் படுத்தப்படுமா?
குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. அவற்றின் தொகுதிகள் குறைக்கப்படக்கூடாது. அப்படி நடக்காதவகையில், பொருத்தமான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
– இவ்வாறு அவர் கூறியுள்ளார்.