கடந்த இரண்டு ஆண்டுகளில் தனிநபர் வருமானம் தேசிய அளவைவிட தமிழ்நாட்டில் அதிகம்
புள்ளியியல் மதிப்பீட்டில் தகவல்
சென்னை, அக். 22- தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் கடந்த 2022-2023, 2023-2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில், தேசிய அளவிலான தனிநபர் வருமானத்தை விட அதிகமாக இருந்ததாக தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து திட்டம், வளர்ச்சித் துறை செயலர் நேற்று (21.10.2024) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான விரைவு மதிப்பீடு மற்றும் 2023-2024ஆம் ஆண்டுக்கான முன் மதிப்பீடு ஆகியவற்றை பொருளியல் மற்றும் புள்ளியல் துறை தயாரித்துள்ளது. அதன் சிறப்பு கூறுகள்:
தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி நிலையான விலையில் 2022-2023ஆம் ஆண்டில் ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-2024ஆம் ஆண்டு நிலையான விலையில் ரூ. 15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் நிலையான விலையில், 2022-2023ஆம் ஆண்டில் 8.13 சதவீதமாகவும், 2023-2024ஆம் ஆண்டில் 8.23 சதவீதமாகவும் இருந்தது. அதேநேரம், நடப்பு விலையில் 2022-2023ஆம் ஆண்டில் 15.48 சதவீதமாகவும், 2023-2024ஆம் ஆண்டில் 13.71 சதவீதமாகவும் இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் வீதம் நடப்பு விலையில் 2022-2023இல் 8.88 சதவீதமாகவும், 2023-2024இல் 9.21 சதவீதமாகவும் இருந்தது. நிலையான விலையில் 9.03 மற்றும் 9.04 சதவீதமாகவும் இருந்தது.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதி்ப்பில் 2022-2023இல் நடப்பு விலையில் மகாராட்டிராவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு 2ஆ வது இடத்தில் உள்ளது. நிலையான விலையில், மகாராட்டிரா மற்றும் குஜராத்துக்கு அடுத்ததாக 3ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் பண வீக்க வீதம் 2022-2023இல் 5.97 சதவீதமாகவும், 2023-2024இல் 5.37 சதவீதமாகவும் இருந்தது. இதே காலகட்டத்தில், இந்தியப் பணவீக்க விகிதங்கள் 6.65 மற்றும் 5.38 சதவீதமாக இருந்தன.
மாநிலத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி, நிலையான விலையில் 2012 முதல் 21 வரை 5.80 சதவீதமாகவும், கடந்த 2021-2024 வரை 3 ஆண்டுகளில் 7.89, 8.13, 8.23 சவீதமாகவும் இருந்தது.
இதனால், 2012-2021 வரையான முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து, 2021-2024 என மூன்றாண்டுகளில் சராசரி வளர்ச்சி விகிதம் 8.08 சதவீதமாக உள்ளது.
தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் நிலையான விலையில் 2022-2023, 2023-2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தைவிட 1.68 மடங்காக உள்ளது குறி்ப்பிடத்தக்கது.
அதே போல், நடப்பு விலையில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2023-2024ஆம் ஆண்டில் தேசிய அளவில் தனிநபர் வருமானத்தை விட 1.71 மடங்காக இருந்தது.
மேலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு, நிலையான விலையில், முறையே 9.29 சதவீதம் மற்றும் 6.37 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையானது 45.47 சதவீதமும், 45.90 சதவீதமும் பங்களித்தது. 2023-2024ஆம் ஆண்டில் பணித்துறை நிலையான விலையில் 9.25 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
போக்குவரத்து, சேமிப்புக் கிடங்கு மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் 8.76 சதவீதம், பிறவகை போக்குவரத்துத்துறையில் 7.46 சதவீதம், நிதி தொடர்பான பணிகளில் 9.29 சதவீதம், கட்டடம் மனை துறையில் 10.08 சதவீதம் பிறவகைப் பணிகளில் 9.96 சதவீதம் என வளர்ச்சிக் காணப்பட்டது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்குப் பணித்துறை குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.