தமிழ்நாட்டு திராவிட மாடல் அரசின் முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவரும், சமூகநீதிக்கான சரித்திர நாயகருமான மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு முறை சொன்னது தான் நினைவிற்கு வருகிறது.
தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக் கூடிய ஆர்.என். ரவி – தொடர்ந்து ஆளுநராகவே இருக்கட்டும்; நாள்தோறும் ‘திருவாய்’ மலர்ந்து பேசிக் கொண்டே இருக்கட்டும்.
அது நமக்குச் சாதகமாகத்தான் இருக்கும். தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும், தமிழ்நாட்டுப் பண்பாட்டின்மீதும் நாள்தோறும், நாள்தோறும் சேற்றை வாரி இறைப்பது என்பது ஆளுநர் ஆர்.என். ரவியின் அன்றாட ‘சேவகம்’ ஆகும்.
இவை எல்லாம் ஏதோ தி.மு.க. ஆட்சியின் மீதான எதிர்ப்பு– அதனால் பிஜேபிக்குப் பலன்தான் – லாபம்தான் என்ற அவர்களின் நினைப்புத் தான் அவர்களின் பிழைப்பைக் கெடுக்கப் போகிறது.
தமிழ்நாடு என்பது தந்தை பெரியார் பிறந்த மண். அவர்களால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை மண்!
சுயமரியாதை, சமூகநீதி, பாலியல் நீதி, மதச் சார்பின்மை, பகுத்தறிவு, சமதர்மம் என்கிற மனிதத் துவத்துக்கு இன்றியமையாத – உயிருக்கு மேலான கொள்கை விளைச்சலைப் பூத்துக் கனியச் செய்ய நூற்றாண்டாக பாடுபட்ட இயக்கத்தின் கொள்கைக்கு எதிராகத் துரும்பு அளவேனும் வீசப்படுமானால், எரிமலையாக தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்து எழுவார்கள் என்பதைப் புரியாமல் – பாம்புப் புற்றுக்குள் கை வைக்கும் விஷம வேலையில் ஈடுபடுபவர்கள் – எந்த அதிகாரத்தின் உச்சியில் நின்று ஆட்டம் போட்டாலும் –அதன் விளைவு எதிர் நிலையாகத்தான் இருக்கும் – அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை – இது கடந்தகால, நிகழ் கால, எதிர்கால வரலாறே!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராசர் ஆளவில்லையா என்று கேட்கலாம்? அவர் ஆட்சியும் திராவிடர் ெகாள்கை ஆட்சியே!
‘‘கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை’’ என்று கார்ட்டூன் போட்டு ‘கல்கி’ ஏடு அடையாளம் காட்ட வி்ல்லையா?
உடம்பெல்லாம் மூளை என்று அக்ரகாரம் உச்சிமோந்து பாராட்டிய சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி) 1937இல் பிரீமியராக வந்த போதும் சரி, 1952இல் சென்னை மாநில முதல் அமைச்சராக வந்த போதும் சரி வாய்தா காலம் ஆள முடியாமல் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டியது – தந்தை பெரியாரின் திராவிட மண் என்பதை நினைவூட்டுகிறோம்.
அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பற்றக் கொள்கைக்கு எதிராக நாள்தோறும் பேசி வருகிறார் ஆளுநர் ரவி; மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசு என்பதை மறந்து விட்டு, ஸநாதனம் பற்றி சத்தம் போட்டுப் பேசுகிறார்.
தமிழ் மண்ணில் ஸநாதன எதிர்ப்பு என்பது ஆத்திச் சூடிப் பாடம்! பக்தி வயப்பட்ட மக்கள்கூட – தமிழ்நாட்டில் – ஆளுநர் உதிர்க்கும் ஸநாதனம் என்பது எந்த வகையைச் சார்ந்தது என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொண்டவர்கள்தாம்.
1971இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது கடவுள் நம்பிக்கையுடைய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், ‘இன்றைய ஆத்திகம் என்பது சிறுபான்மையினர் நலம்; இன்றைய நாத்திகம் என்பது பெரும்பான்மையினர் நலம் – உங்களுக்கு எது வேண்டும்? என்ற முதிர்ச்சியுள்ள வாசகத்தை வெளிப்படுத்தினாரே – அதன் உட்பொருள் என்ன?
பிறப்பின் அடிப்படையிலான வருணாசிரமம் தான் ஸநாதனம் என்பதை மூத்த காஞ்சி சங்கராச்சாரியாரே ஒப்புக் கொண்டதற்குமேல், ஆளுநர் ஸநாதனத்துக்குச் சரிகைக் குல்லா வைத்து பவனி வர செய்தால், அது எடுபடாது!
நறுக்கென்று கேட்டு இருக்கிறார் நமது திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் – ‘ஆளுநரா – ஆரியரா?’ என்பதுதான் அந்த நச்சென தைத்த கூர்மையான வேல்!
அலறுகிறார் ஆளுநர் – இருக்காதா? ஆளுநர் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் அந்த உணர்வு தெரிகிறதே! உண்மையைச் சொன்னால் சுடத்தானே செய்யும்.
ஆளுநர் மாளிகை என்பதை மதச் சார்பின்மைக்கு எதிரான பாசறையாக மாற்றி வருகிறார் ஆளுநர்
ஆர்.என். ரவி.
அவற்றிற்கெல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமான பதிலடிதான் முதல் அமைச்சரின் ‘ஆளுநரா – ஆரியரா?’ என்ற கேள்வி.
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை விலக்கியதன் மூலம், தனது முழு முகவரியையும், முகத்தையும் தனக்குத்தானே அம்பலப்படுத்தி விட்டார்!
தமிழ் உணர்வும், தமிழின உணர்வும் கட்சிகளைக் கடந்து வெடித்துக் கிளம்பியிருப்பதன் பின்னணியில் தந்தை பெரியார் – சுயமரியாதை இயக்கம் – திராவிட இயக்கம் ஆகியவற்றின் ஆணி வேர் பலமாக இருக்கிறது – அசைத்துப் பார்க்க ஆசைப்பட வேண்டாம் – வேண்டவே வேண்டாம்!