அயோத்தி வழக்குத் தீர்ப்புக்குமுன் கடவுளைப் பிரார்த்தித்தாராம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி!
புதுடில்லி, அக்.21 அயோத்தி ராமர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு என் முன் மூன்று மாத காலம் இருந்தது. இந்த வழக்கில் தீர்ப்புக்கு முன்பாக தெய்வத்தின் முன்னே அமர்ந்த நான், ‘‘எனக்கு ஒரு தீர்வு வேண்டும் என கடவுளிடம் வேண்டினேன்‘‘ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. நவம்பர் 9 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் குழந்தை ராமர் கோயில் கட்டிக்கொள்ள உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது.
இஸ்லாமிய மக்கள் வழிபாடு செய்வதற்கு, அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனையும் விதித்தது. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள், ரஞ்சன் கோகோய் , ஷரத் அரவிந் போப்டே, அசோக் பூஷன், டி ஒய்சந்திரசூட், அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் தற்பொது டி.ஒய்.சந்திரசூட் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.
இதர நீதிபதிகள் ஓய்வு பெற்று விட்டனர். அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்ட நிலையில், அது குறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். மகாராட்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:-
எங்களால் ஒரு முடிவுக்கு வர முடி யாத வழக்குகள் அடிக்கடி வருவதுண்டு.
இதேபோலத்தான் அயோத்தி ராமர் கோவில் வழக்கிலும் நடந்தது. மூன்று மாதங்களாக என் முன்னே இந்த வழக்கு இருந்தது. அப்போது தெய்வத்தின் முன்னே அமர்ந்த நான், எனக்கு ஒரு தீர்வு வேண்டும் என கடவுளிடம் வேண்டினேன். நான் வழக்கமாக சாமி கும்பிடும் பழக்கம் கொண்டவன். நான் சொல்வதை நம்புங்கள்..
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் கடவுள் எப்போதும் உங்களுக்கு வழியை காட்டுவார்” என்றார். அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டில் அரசு சார்பில் சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த ரேத்ரா எனும் ராமர் கோவில் கட்டுமான பணிக்குரிய அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறகட்டளை மூலம் கோவில் கட்டும் பணி துவங்கப்பட்டது.
ரூ.1000 கோடி செலவில் பிரமாண்ட மாக கோவில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை 2020 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி முடிந்த கடந்த ஜனவரி 22 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.
அயோத்தி ராமர் கோவிலுக்கு கடந்த ஜூலை மாதம் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சென்று வழிபட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்