புதுடில்லி, அக்.20- மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் அய்ந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநா்களை பணியில் இருந்து விடுவிக்க ஒன்றிய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதையொட்டி, புதிய ஆளுநா்களாக யாரை நியமிக்கலாம் என்பதா்கான பட்டியலை தயாரிக்கும் ஆரம்பநிலைப் பணியை பிரதமா் அலுவலகம் தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு நிதிநிலைக் கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்துக்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அய்ந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை பூா்த்தி செய்த ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்கள் விடுவிக்கப்படக்கூடும் என்று பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளுநா், துணைநிலை ஆளுநா் பதவி என்பது மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் அரசமைப்பின் தலைமை பதவி என்பதால் அதற்கான நியமனத்தை குடியரசுத் தலைவா் நேரடியாக மேற்கொள்வாா்.
அந்த நியமனங்கள் பெரும்பாலும் பிரதமருடனான கலந்தாலோசனையின் அடிப்படையிலேயே இருக்கும். தற்போதைய ஆட்சியில் ஆளுநா் பதவியில் மூத்த அரசியல் தலைவா்களாக இருந்தவா்கள், ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரிகள், அய்ஏஎஸ், அய்பிஎஸ் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறாா்கள்.
பதவிக்கால கணக்கீடு: பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களில் பிரதமா் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சியில் ஆளுநா்களாக நியமிக்கப்பட்டவா்கள். இந்திய அரசமைப்பின் 156-ஆம் விதியின்படி குடியரசுத் தலைவரால் ஆளுநராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலம் என்பது அய்ந்து ஆண்டுகள் என 3-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதே விதியின் முதலாம் உள்பிரிவில் குடியரசுத் தலைவா் விரும்பும்வரை ஆளுநா் பதவியில் இருப்பாா் என உள்ளது.
அந்த வகையில், ஒரு மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் ஆளுநா் பதவி வகித்தவா், வேறு மாநிலத்தில் மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்யும்போது அவரது ஒட்டுமொத்த பதவிக் காலத்தையும் கணக்கிட்டு அய்ந்து ஆண்டுகளாக கவனத்தில் கொள்வதா அல்லது முதலில் பணி செய்த மாநிலத்தை தனியாகவும் பின்னா் ஆளுநராக நியமிக்கப்பட்டவரின் பதவிக் காலத்தை அந்த மாநிலத்தில் அவா் பதவியேற்றதில் இருந்து கணக்கில் கொள்வதா என்பது அரசமைப்பில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என். ரவி, கேரள ஆளுநா் ஆரிஃப் முகம்மது கான் உள்ளிட்ட பலரும் இவ்வாறு வேறு மாநிலங்களில் சில ஆண்டுகள் ஆளுநராக இருந்து விட்டு தற்போது பதவி வகிக்கும் மாநிலத்திலும் பதவிக் காலத்தின் மீதமுள்ள ஆண்டுகளை நிறைவு செய்தவா்களாக உள்ளனா்.
இருப்பினும் அரசமைப்பின் 156(1)ஆவது விதியின்படி குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவா்கள் பதவியில் தொடா்பவா்களாக கருதப்படுகிறாா்கள். ஆனால்,
இவ்வாறு பதவிக்காலத்துக்கும் அப்பால் சில ஆளுநா்கள் பதவியில் தொடா்வது பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சா்ச்சையாகவும் விவாதப்பொருளாகவும் மாறி வருகிறது.
சா்ச்சைகளுக்கு தீா்வு: இதற்குத் தீா்வு காணும் வகையில், எதிா்வரும் மகாராட்டிரம், அரியானா மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு ஆளுநா்கள் நியமனத்தில் சில நெறி முறைகளைக் கடைப்பிடிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.