பெய்ஜிங், அக்.20 சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது குறித்து, அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அதிரடி ஆய்வில் இறங்கியுள்ளது. ஆய்வு முடிவுகளை பரிசீலித்து, குழந்தைகளை அதிக அளவில் பெற்றுக்கொள்ள புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
90களிலும், 2000த்தின் தொடக்கத் திலும் குடும்ப கட்டுப்பாடு குறித்த விளம்பரங்கள் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருந்தன. சினிமா நட்சத்திரங்கள் கூட இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதை யெல்லாம் பார்க்கும் போது, குடும்பக் கட்டுப்பாடு அவசியம், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தோன்றியிருக்கலாம். ஆனால், இதே நமக்கு பக்கத்து நாடான சீனா, ஏன் அதிக குழந்தைகளை அந்நாட்டு மக்கள் பெற்றுக்கொள்வில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2022 வரை மக்கள் தொகை எண்ணிக்கையில், உலகின் முதல் நாடாக சீனா இருந்தது. ஆனால், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சீனாவை இந்தியா முந்தியிருக்கிறது. மக்கள் தொகையை குறைந்தது நல்ல விடயம் தானே என்று நாம் யோசிக்கலாம். ஆனால், சீனாவுக்கு இதில் உடன்பாடு கிடையாது. ஏனெனில் மக்கள் தொகை சரிந்தால் அது பல்வேறு விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
முதல் பாதிப்பு பொருளாதாரத்தில் தான் இருக்கும். சீனாவில் அதிக மக்கள் தொகை இருக்கிறது. இதை கணக்கிட்டு பொருளாதாரம் இயங்கி வருகிறது. அரசு பொருளாதாரத்தை உயர்த்த சில முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ளும். அதாவது கூடுதல் தொழிற்சாலைகள், உற்பத்தி மய்யங்கள் போன்றவற்றை தொடங்கும். இதற்கு ஆட்கள் தேவை. ஆனால் மக்கள் தொகை குறைந்தால், ஆட்கள் எப்படி கிடைப்பார்கள்? எனவே உற்பத்தி பாதிக்கப்பட்டு பொருளாதாரம் நலிவடையும்.
குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைகிறது எனில், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று அர்த்தம். எனவே அவர்களுக்கான சுகாதாரம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றிற்கு அரசு அதிகம் செலவிட வேண்டியது வரும். மறுபுறம் நகர்புறங்கள் வளர்ச்சியை நோக்கியும், கிராமங்கள் முழுக்க முழுக்க வீழ்ச்சியை நோக்கியுமே பயணிக்கும்.
அதேபோல சமூக சேவைகள், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றிலும் பாதிப்பு ஏற்படும். நிலங்களை பராமரிப்பது குறைந்துவிடும். எனவே ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் பலமாக அடிவாங்கும். பல முக்கிய இடங்கள் பராமரிப்பின்றி காடுகளாக மாறிவிடும்.
மிக குறிப்பாக குடியேற்றம் தொடர்பான விதிகளை அரசு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். இந்த பிரச்சினைகளையெல்லாம் சீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சந்தித்து வருகிறது. எனவே இதிலிருந்து தப்பிக்க, குழந்தை பிறப்புகளை அதிகரிக்க என்ன வழி என்பதை சீன அரசு ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது.
சீனாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த ஆய்வை முன்னெடுத்திருக் கிறது. அதன்படி 150 மாவட்டங்களில் 1500 சமூக குழுக்களிடையே, குழந்தை பேறுக்கு எது தடையாக இருக்கிறது? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சிக்கல், மாறி வரும் வேலை சூழல், கலாச்சார சிக்கல், குழந்தைகளுக்கான கல்வி, அவர்கள் வளர்ந்து இளைஞர் களாக ஆகும் பட்சத்தில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளில் சிக்கல் இருக்கிறதா? என்கிற கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வின் முடிவுகளை பகுப்பாய்வு செய்து, அதன் அடிப்படையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.