இரா.அதியமான் அறிக்கை!
சென்னை, அக்.20- ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:–
சமூக சீர்திருத்த நடவடிக்கையால் சமத்துவமிக்க மண்ணாக செழுமைப்படுத்தியதில் திராவிட இனமும், நிலமும் இந்தியாவின் முதன்மைப் பங்கு வகிக்கிறது என்பதை நாள் தோறும் மறைக்கின்ற வேலையைச் செய்யும் – திட்டமிட்டு செய்து வரும் ஆளுநர்
ஆர்.என்.ரவிக்கு ஆதித்தமிழர் பேரவை வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது.
தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தில் கூட “திராவிடம்” என்ற வார்த்தையை தவிர்த்து விட்டு பாடுவதென்பது ஆளுநர் உடல் ழுழுவதும் ஒவ்வாமை அல்ல அது விசமாக பரவி புரையோடிக் கிடக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகின்றது. உணர்வுகளையும் மரபுகளையும் மதிக்காத ஒரு நபரான ஆளுநரை தொடர்ந்து ஆளுநராக நீடிக்க வைப்பது, அவர் பேசும் பேச்சில் மூலம் குளிர் காய்வதென்பது ஒரு பதற்றத்தை கட்டமைக்க முயல்வது பேராபத்திற்குரியது. ஆகையால், மரபுகளை மதிக்காத ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை நசுக்குகின்ற வேலையை தொடர்ந்து செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை கண்டிப்பதோடு அவரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வாய்ப்பு அளிப்பதாகக் கூறி பண மோசடி
ஒன்றிய அமைச்சர் பிரகலாத்
ஜோஷியின் சகோதரர் கைது
மும்பை, அக்.20- ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை மகாராட்டிராவில் வைத்து பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலின்போது, கோபால் ஜோஷி மற்றும் 2 பேர் தன்னிடம் ரூ.2 கோடி வாங்கியதாகவும், தனது கணவருக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் ஜே.டி.எஸ். மேனாள் சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அளித்த புகார் அளித்திருந்தார். மேலும், தேர்தல் சீட் கொடுக்காமல் பணத்தை திருப்பிக் கேட்டால் தன்னை அவமானப்படுத்தியாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, பெங்களூரு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோபால் ஜோஷி மீது மோசடி, எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, தனக்கும், தனது சகோதரர் கோபால் ஜோஷிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
சாமியார் குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான
விசாரணைக்கு தடை நீக்கம்
உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, அக்.20 தேரா சவுதா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகளின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் 18.10.2024 அன்று நீக்கியது.
பெண் சீடா்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியார் குா்மீத் ராம் ரஹீமுக்கு 2017-ஆம் ஆண்டு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல ஊடகவியலாளா் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில், 2019-ஆம் ஆண்டு ராம் ரஹீம் உள்பட 4 பேருக்கு 16 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அரியானாவில் உள்ள ரோத்தக் பகுதி சிறையில் ராம் ரஹீம் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அண்மையில் 20 நாள்கள் பரோல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பஞ்சாபில் ராம் ரஹீமுக்கு எதிராக சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் பிற சீக்கிய மதத் தலைவா்களை இழிவுபடுத்தியது உள்பட 3 மத நிந்தனை வழக்குகளை காவல் துறை பதிவு செய்தது.இதுதொடா்பாக ராம் ரஹீம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயா்நீதிமன்றம், அவருக்கு எதிரான அந்த வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.\இந்த உத்தரவுக்கு எதிராக பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகள் குறித்த விசாரணைக்கு உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
காவல் துறையைப் போல ஆா்.பி.அய்.
செயல்பட முடியாது: ஆா்.பி.அய். ஆளுநா்
மும்பை, அக்.20 பங்குச் சந்தைகள், கடன்சார் நிதி நிறுவனங்களின் உள்ளிட்ட நிதி சார்ந்த அமைப்புகளைக் கண்காணிக்கும் விஷயத்தில் காவல் துறையைப்போல இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஅய்) செயல்பட முடியாது என்று ஆா்பிஅய் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ஃபிளிப்கார்ட் நிறுவனா்களில் ஒருவரான சஞ்சய் பன்சாலின் நவி ஃபின்சா்வ் நிறுவனம் உள்பட 4 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று ஆா்பிஅய் உத்தரவு பிறப்பித்தது. அதிக வட்டி உள்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைப்பேசி செயலி மூலம் கடனளிக்கும் பல நிதி நிறுவனங்கள் இதுபோன்ற பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக தொடா்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ் இது தொடா்பாகக் கூறியதாவது: நாங்கள் காவல் துறையினா் அல்ல. காவல் துறை குற்றவாளிகளைத் தொடா்ந்து கண்காணிப்பதுபோல நிதி நிறுவனங்களை ஆா்பிஅய்-யால் மிகத் தீவிரமாக கண்காணிக்க இயலாது. எனினும், இதுபோன்ற கடனளிக்கும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணா்வுடன்தான் ஆா்பிஅய் உள்ளது. தேவைப்படும் நேரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.