மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை – மாறாக
ஆளுநரிடம் மன்னிப்புக் கேட்கும் டிடி தொலைக்காட்சி
சென்னை, அக்.19- தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் டிடி தமிழ் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது. சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்று வரும் ஹிந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்தில் அவமதிப்பு செய்யப் பட்டது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரியை தவிர்த்துவிட்டு பாடியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது திராவிடநல் திருநாடு என்ற வாசகம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் இழிவுபடுத்தி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவற விட்டுவிட்டதாக டிடி தமிழ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய ஹிந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார்.
கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட் டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை – வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஹிந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றதை தவிர ஆளுநருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஆளுநரின் ஊடக ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு வரி தவிர்க்கப்பட்டதில் ஆளுநருக்கு எந்தப் பங்கும் இல்லை. தமிழ் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மிகவும் உயர்ந்த மதிப்பு என்று வழகுழா அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்கப்பட வேண்டியது மக்களிடமே – ஆளுநரிடம் அல்ல!