புதுடில்லி, அக். 19- கோவை ஈஷா யோகா மய்யத்துக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடை யில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது. அதேவேளையில், துறவறம் பூண் டுள்ள மகள்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஈஷா யோகா மய்யத்தில் துறவிகளாக உள்ள தனது இரு மகள்களையும் மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவை ஈஷா யோகா மய்யம் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, ஈஷா யோகா மய்யத்துக்கு சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதை எதிர்த்து ஈஷா யோகா மய்யம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஈஷா யோகா மய்யத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசார ணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றியது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் நிலையறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் ஈஷா யோகா மய்யம் தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வில் நேற்று (18.10.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இரு பெண் துறவிகளும் தங்களது சொந்த விருப்பத்துடன் தங்கி இருப்பதாக காவல் துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஈஷா யோகா மய்யத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், தங்களது இரு மகள்களையும் பெற்றோர் எப்போது வேண்டுமென்றாலும் சென்று பார்க்கலாம்” என்று தெரிவித்தனர்.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், “ஈஷாவில் விதிமீறல்கள் உள்ளது தொடர்பாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்அய்ஆர்கள் தொடர்பான நிலுவை வழக்குகளின் புலன் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது.
அந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “ஈஷா யோகா மய்யத்துக்கு எதிராக ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான புலன் விசார ணைக்கு எந்த தடையும் இல்லை. அந்த வழக்குகளை சட்டத்துக்குட்பட்டு விசாரிக்கலாம்” என்று உத்தரவிட்டனர்