19ஆம் நூற்றாண்டு புரட்சிகள் பலவற்றின் விதைகளை தாங்கி இருந்த காலப்பகுதி தமிழ்நாடும் இதற்கு விதி விலக்கல்ல.
படைப்பிலக்கியம் ஆன்மீகம் என்ற களங்களில் நான்கு புரட்சியாளர்கள் தோன்றினர் கோபாலகிருஷ்ண பாரதியார், ராமலிங்கம், வேதநாயகம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ஆகியோர் அந்த நால்வர் ஆவர்.
தாழ்த்தப்பட்ட நந்தனை தலைவ னாக்கினார் கோபாலகிருஷ்ண பாரதியார். வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம் என்ற புதினத்தால் முதன்மை பெற்றார். பெண் விடுதலை கருத்துகளை அடங்கிய “பெண் மதிமாலை” ” மனோன்மணியம்” கவிதை நாடகத்தில் முதலிடம் வகிக்கும் மொழிப்பற்று – பெண் விடுதலை – தத்துவ பார்வை ஆகியவற்றை சுந்தரம் பிள்ளை இணைத்துக் கொண்டார். ராமலிங்கர் இவர்களில் ஒருவராய் ஆன்மீக இலக்கிய சிந்தனை புரட்சியாளராய் “திருவருட்பா” தந்தார்.
வள்ளலார் உருவத் தோற்றம் குறித்து வள்ளலாரின் நண்பர் தொழுவூரார் கூறுகிறார்.
“சாதாரண உயரம், மெலிந்த சரீரம், எலும்புகள் தெரியும். நிமிர்ந்த தேகம், தெளிந்த மாநிறம், பறக்கும் பொறி கண்கள்.”
மற்ற துறவிகள் போல் அடிகளார் காவி உடை உடுத்தவில்லை வெள்ளை உடையே உடுத்தி வந்தார். அதற்கு அவர் கூறிய காரணம்,
” யுத்த குறி அடையாளமாக தரிப்பது காவி” என்றார்.
“ஜாதியும் மதமும் சமயமும் தவிர்த்து சாத்திரக் குப்பையையும் தணந்தேன்”
என்று மக்களுக்கு அறிவுறுத்தியவர் வள்ளலார் ராமலிங்க அடிகள்.
முன்னர் வந்த பெரியோர்கள் ஜாதியைக் கடிந்தார்கள். ஆனால், “தன்சமயம்” என்ற எல்லைக்குள் நின்று ஜாதியத்தை எதிர்த்தார்கள். ஆனால் முற்றுமுழுதாக ஜாதி பேதங்களை தகர்க்க முயன்றவர் அடிகள் அவர்கள்.
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே”
( பாடல் :4174) என்று வன்மையாக கடிந்து பேசுகிறார்.
தாச மார்க்கம், சற் புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன் மார்க்கம் என்ற நெறிகள் ஏற்கெனவே தமிழ் சமய மரபில் இருந்து வந்துள்ளன. அதுபோன்றே தாயுமானவர் “சமரச நன்னிலை” என்ற மரபையும் தோற்றுவித்திருக்கிறார்.
1865ஆம் ஆண்டில் தம் புதிய அருட் கொள்கைகளை பரப்ப சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை வள்ளலார் அவர்கள் நிறுவினார்.
சன்மார்க்கம் என்பது சமய நெறி அல்ல., சமயங்களைக் கடந்த உயர் அனுபவம் என்றார்.
ஜீவகாருண்யம் என்னும் உயிர் கருணையே அடிகளார் வகுத்த தத்துவத்தின் மய்யம்.
மணிமேகலை ‘பசிப்பிணி என்னும் பாவி’ என இகழ்ந்து உரைக்கும் அடிகள் பசியிலிருந்து சமுதாயத்தை விடுவிக்க விழைந்தார்.
“வடலூரில் அவர் துவங்கிய தர்மச்சாலை பட்டினி ஒழிப்பு போரின் பாசறை ஆகும்” என்றார் மா.பொ. சிவஞானம்.
உணவு, உறக்கம், சிற்றின்ப நுகர்வு என பலவற்றையும் குறித்து எச்சரித்த வள்ளலார் அவர்கள் “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்ற உண்மை பொருளை விளக்கினார்.
ஒருமுறை சங்கராச்சாரியார் “மொழி களுக்கெல்லாம் சமஸ்கிருதமே தாய் மொழி என்று கூறியதை மறுத்து வடமொழி தாய் மொழியானால் தமிழ் தந்தை மொழி” என்று அடிகள் உரைத்தார் என்பது தமிழின் பால் அவர் கொண்ட பற்றுக்கு எடுத்துக்காட்டாகும்.
அடிகள் தம் கருத்துப் பகிர்வுக்கு இசைத்தமிழையும் காலத்தை வெல்லும் கீர்த்தனைகளையும் புனைந்து தந்திருக்கிறார்.
1867-இல் அடிகளார் சத்திய தர்மசாலை நிறுவி பின் வடலூரில் வாழத் தொடங்கினார்.
சமய சமூக சீர்திருத்த பேரலையாக அடிகள் திகழ்ந்தார். அனைத்து உயிர் நேயம், மரணம் இல்லா பெருவாழ்வு, பெண்ணுக்கு கல்வி, ஜாதிய எதிர்ப்பு ஆகிய கருத்துக்களில் ஊன்றி நின்றார்.
நூல் உதவி: தமிழ் இலக்கிய வரலாறு