நம்முடைய தொல் எச்சங்களை எவ்வாறு நாம் முறையாக ஒப்பிடவேண்டும் என்ற
ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, நாம் ஆய்வுகளை முன்னெடுத்துச் செய்தால்,
அதில் எந்த வெற்றியும் அவர்களுக்குக் கிட்டாது, நமக்குக் கிட்டும்!
நம்முடைய பண்பாட்டின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு பல அரிய தகவல்கள் நம்மிடம் உள்ளன!
சென்னை, அக்.18 நம்முடைய தொல் எச்சங்களை எவ்வாறு நாம் முறையாக ஒப்பிடவேண்டும் என்ற ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, நாம் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அப்படி செய்தால், அதில் எந்த வெற்றியும் அவர்களுக்குக் கிட்டாது, நமக்குக் கிட்டும். நம்முடைய பண்பாட்டின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு பல அரிய தகவல்கள் நம்மிடம் உள்ளன. அதற்கு ஆய்வுகளைத்தான் நாம் மேற்கொள்ளவேண்டும். அந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, இதுபோன்ற கருத்தரங்கங்கள் உதவும் என்றார் தொல்லியல் இயக்குநர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்கள்.
சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா!
கடந்த 24.9.2024 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழாவில், தொல்லியல் இயக்குநர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
1919 ஆம் ஆண்டில்தான் அந்த ஆய்வுகள் தொடங்கின. ஜான் மார்ஷலுக்குக் கீழ் ஆர்.டி.பானர்ஜி என்பவரும், மாதவ் சொரூபஸ், தயாராம் சாஹ்னி என்பவரும் பணிபுரிந்தனர்.
இந்தக் குழுவைத் தவிர, இன்னொருவரும் அங்கே பணியாற்றினார். இந்தியத் தொல்லியல் துறையில் சேராத ஒருவரும் பணியாற்றினார். அவருடைய பெயர் லுகிபியோ டிசிட்டோரி. அவர் ஒரு ராணுவ அதிகாரி. ஹரப்பாவில் அவரும் தொல்லியல் பணி செய்தார்.
மேற்சொன்ன நான்கு பேர்தான் மிக முக்கியமாக அந்தக் கண்டுபிடிப்பிற்காகப் பணி புரிந்தவர்கள்.
இவர்களும் என்ன சொன்னார்கள் என்றால், அலெக்சாண்டர் கன்னிகாம் சொன்ன கருத்தைத்தான் சொன்னார்கள்.
மவுரியர்களுக்கு முன் இருந்த நாகரிகமாகத்தான் இருக்கும் என்று சொன்னதையே சொன்னார்கள். இவர்களுக்கு ஒரு புரிதல் ஏற்படவில்லை.
பரந்துபட்ட ஒரு நாகரிகம்!
அந்தப் புரிதல் ஏற்படுவதற்கு மிக முக்கியமாக இருந்தவர் ராணுவ அதிகாரி இருந்த லுகிபியோ டிசிட்டோரி. இந்த நாகரிகங்களைப் பார்த்து, இது பரந்துபட்ட ஒரு நாகரிகமாக இருக்கிறதே என்கிற கேள்வியை எழுப்பினார்.
ஏனென்றால், ஹரப்பாவும், மொகஞ்சதாரோவும் ஒரு பரந்துபட்ட நிலப்பகுதியில், இரண்டும் வெவ்வேறு திசைகளில் இருக்கின்ற நாகரிகமாக இருக்கின்றதோ என்கிற ஒரு கேள்வியை அவர் எழுப்பும்பொழுதுதான் – பல கேள்விகள் எழுப்புவதற்கான காரணங்கள் பிறக்கின்றன.
இதையெல்லாம் வைத்துக்கொண்டுதான் ஜான் மார்ஷல் என்ன சொல்கிறார் என்றால், எல்லாவற்றையும் நீங்கள் சிம்லாவில் இருக்கின்ற அலுவலகத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள்; அதை முறைப்படுத்தி நாம் ஆய்வு செய்யலாம் என்று சொன்னார்.
அதற்குப் பிறகு, ஒரு பெரிய கருத்தரங்கத்தை நடத்தி, அதை முறைப்படுத்தினார்கள்.
அதனுடைய ஒற்றுமைத்தன்மையைப் பார்க்கிறார்கள். மொகஞ்சதாராவும், ஹரப்பாவும் கிட்டத்தட்ட 600 கிலோ மீட்டர் இடைவெளி உள்ள பகுதி.
அனைத்தும் ஒரே சீரான வடிவத்தில் இருக்கின்றன!
ஆனால், இரண்டு பகுதிகளிலும் கிடைக்கின்ற தொல்பொருள்கள் அனைத்தும் ஒரே சீரான வடிவத்தில் இருக்கின்றன.
அங்கு கட்டப்பட்ட கட்டடங்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன; கட்டட வடிவமைப்புகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. நகரங்களும், தெருக்களும், கழிவு நீர்ப் பாதைகளும், குளியல் அறைகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
அதேபோல, அங்கே கிடைக்கின்ற பானைகள். பானைகளை வைத்துத்தான் தொல்லியல் துறையில் ஆய்வு செய்வோம்.பானை ஓடுகளாகத்தான் கிடைக்கும்; முழு பானைகள் கிடைப்பது என்பது அரிதான செயல். இரண்டு இடங்களிலும் கிடைத்த பானைகள் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன.
ஜான் மார்ஷலுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின!
சிவப்பு பானைமீது கருப்பு வண்ணத்தில் வரையப்பட்டிருக்கும். அவ்வாறு வரையப்பட்ட பானைகள் இரண்டு இடங்களிலும் கிடைத்தன. ஒரே அளவுள்ளதாகவும், ஒரே வடிவமாகவும் இருந்ததைப் பார்த்த ஜான் மார்ஷலுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
அதேபோன்று, அங்கே கிடைத்த தொல் எச்சங்கள்; பல வகையான தொல் எச்சங்கள் கிடைக்கின்றன. அனைத்துத் தொல் எச்சங்களும் ஒரே மாதிரி, ஒரே தன்மை கொண்டிருக்கின்ற காரணத்தினால், அவருக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வருகிறது.
இரண்டு நகரங்களுக்கும் உள்ள தூரம் அதிகம். ஆனால், எவ்வாறு அவர்கள் அதை உருவாக்கினார்கள் என்று சந்தேகம் எழுந்து, அந்த காலகட்ட இலக்கி யத்தைப் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். ஆனால், அந்த இலக்கியத்தில் எந்த சான்றும் கிடையாது. அதுதான் மிகவும் முக்கியமாகும்.
நமக்கு முன் சொல்லிவிட்டுப் போன வேத கால நாகரிகத்தைப்பற்றி சொன்ன அனைத்துச் சான்றுகளும் அந்த இடத்தில் ஒன்றும் பலிக்கவில்லை.
வேத காலத்திற்கும் முற்பட்ட நாகரிகம் சிந்துசமவெளி நாகரிகம்!
அப்படி பலிக்காத காரணத்தினால்தான், அவர் அறிவிக்கிறார், இது வேத காலத்திற்கும் முற்பட்ட ஒரு நாகரிகம். கண்டிப்பாக இந்த நாகரிகத்தை உருவாக்கிய வர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள் என்று சொன்னார்.
இந்த மண்ணின் பூர்வ குடிகள்தான் திராவிடர்கள் என்பதை நாம் உறுதியாகச் சொல்லவேண்டும்.
ஏனென்றால், இன்றைக்குத் திராவிடர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டோடு மட்டும் நின்றுவிடவில்லை. நாம் தமிழ் நாட்டோடு சுருக்கிக் கொள்கிறோம்; இது ஒரு தவறான செயல்.
திராவிடர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்!
திராவிடர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டில் மட்டு மல்ல, இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் நம்முடைய எகிப்திய பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள்; மெசபடோமியோ பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் இன்றைக்கு மரபணு சொல்லுகின்ற ஒரு கருத்து.
இன்று மொழிகள் மாறியிருக்கலாமே தவிர, அந்த மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், பல மொழிகளைப் பேசிக்கொண்டு இந்தியா முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
நாட்டில் 80 சதவிகித மக்கள் திராவிட இன மக்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்!
இந்தியாவில் இருக்கின்ற மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள் திராவிட இன மக்களாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்கிற கருத்தும் இன்று நிலவுகிறது. அதனால்தான் இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், ஹரப்பா, ராக்கி கீழடியில் கிடைத்த நம்முடைய டி.என்.ஏ.வை பரிசோதித்துவிட்டு, இந்தியர்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது சரிதான், திராவிடர்களும் இந்தியர்கள்தான்.
அதில், செடிபி புல்வெளியிலிருந்து வந்த நாடோடிகள் பின்னாளில் வந்தவர்கள் என்பதை உறுதியாகச் சொல்கிறார்கள். அதுதான் உண்மை.
அவர்கள் கி.மு.1500-க்கு பின்னால்தான் இந்தப் பகுதிக்கு வந்தார்கள் என்பது உண்மை. இன்றைக்குக் கிட்டத்தட்ட 30 சத விகிதம் வட இந்தியாவிலும், 10 சதவிகிதம் தென்னிந்தியாவிலும் இருக்கிறது என்பதை முழுமையாக இன்றைக்கு மரபணு வரை இன்றைக்குக் கொண்டு செல்கிறார்கள். அந்தக் கருத்தைத்தான் நாம் இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் பல அக ழாய்வுகளின்மூலம் கிடைக்கின்ற செய்தியாகும்.
ஏனென்றால், மார்ஷல் சொல்லும்பொழுது இருந்த அந்த தாக்கம், இன்றைக்கு நூறாண்டிற்குப் பின்னர் எதிரொலிக்கிறது.
மார்ஷல் சொல்லும்பொழுது அதை யாரும் கவனிக்க வில்லை. அது ஒரு வேத காலத்திற்கு உட்பட்ட நாகரிகம் என்றும், வேத காலம்தான் நாகரிகம் என்று முழுமையாகக் கட்டமைக்கப்பட்டு, எல்லோரிடமும் சொன்னார்கள்.
மேக்ஸ் முல்லர் கொடுத்த தேதியை வைத்துத்தான் வேத காலத்தைச் சொல்கிறோம்!
என்று இந்த வேதம் இயற்றப்பட்டது என்பதற்கான தொல்லியல் ஆதாரம் இதுவரை கிடையாது. மேக்ஸ் முல்லர் கொடுத்த தேதியை வைத்துத்தான் வேத காலத்தைச் சொல்கிறோம் நாம்.
கி.மு.1500-க்கு முன்பு என்று சொல்லிக் கொள்ளலாம். அது ஒரு கற்பனையாக உருவாக்கப்பட்ட தேதிதான். ஆனால், வேத நாகரிகத்திற்கான தொல்லியல் ஆதாரங்கள் எந்தப் பகுதிகளிலும் கிடைக்கவில்லை.
இன்றைக்கு நாம் பார்த்தமேயானால், ஆரியவர்த்தம் என்று சொல்லப்படுகின்ற வட இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள். அந்தப் பெரும் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைக்கின்ற பொருள்கள், அவர்கள் சொல்வதற்கான வேத நாகரிகத்தின் இலக்கியங்களுக்கு சம்பந்தமில்லாத பொருள்கள்தான் கிடைக்கின்றன.
குறிப்பாக பார்த்தீர்களேயானால், ஆக்கர் கலர் பெயிண்ட் என்று சொல்லப்படுகின்ற ஒரு பானை ஓடு கிடைக்கிறது. பிஜிடபுள்யூ என்று சொல்லப்படுகின்ற ஒரு பானை ஓடு கிடைக்கிறது.
பி.பி.லால் காலத்தில், அதை மகாபாரத பானை ஓடு என்று சொல்வார். பெயிண்ட்டட் கிரே வேர் கல்ச்சர் என்று சொல்வதை, மகாபாரத காலத்துச் சான்றிதழ் என்று சொல்வார்.
மகாபாரத கல்ச்சர் கிடையாது-ஆக்கர் கலர் பாட்தான்!
ஆனால், இன்றைக்கு ஆய்வு செய்கின்ற ஆய்வா ளர்கள், பெயிண்ட்டட் கிரே வேர் கல்ச்சர், மகாபாரத கல்ச்சர் கிடையாது. ஆக்கர் கலர் பாட் என்று சொல்லப்படு கின்ற ஓ.சி.பி. பாட்தான் மகாபாரத கால பானை என்று சொல்கிறார்கள்.
ஆனால், ஆக்கர் கலர் பாட்ரியும், நம்முடைய சிந்து சமவெளி நாகரிகத்தைத் தொடர்ந்து வந்த பானைகள்தான்.
1200 ஆண்டுகள் வாழ்ந்த நாகரிகம்!
ஏனென்றால், சிந்துசமவெளி நாகரிகம் என்பது கிட்டத்தட்ட 1200 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு நாகரிகம். ஒரு நாளோ, இரண்டு நாளோ வாழ்ந்த நாகரிகம் கிடை யாது. கிட்டத்தட்ட 1200 ஆண்டுகள் வாழ்ந்த நாகரிகம்.
கி.மு.3000-த்தில் இருந்து தொடங்கி, கி.மு.1600 வரை இருந்த ஒரு நாகரிகம். அந்த நாகரிகம் அழிந்துவிட்டதா, என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அழிவதற்கான வாய்ப்புகள் இல்லை. பல வகை களில், பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம். மக்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கலாம். அதன் காரண மாகத்தான் அந்த நகரங்கள் எல்லாம் விடுபட்ட நகரங்க ளாக இருக்கின்றனவே தவிர, முழுமையாக அந்த நாகரிகம் அழிவதற்கான வாய்ப்பு இல்லை. அதன் தொடர்ச்சிகள் கண்டிப்பாக இருந்துள்ளன.
அதன் தொடர்ச்சிகள்தான் நம் தென்னிந்திய பகுதிக்கும், கிழக்குப் பகுதிக்கும் நகர்ந்துள்ளன. அதனால்தான் இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், ஓ.பி.சி. என்று சொல்லப்படுகின்ற பானை ஓடும், பெயிண்ட்டட் கிரே வேர் என்ற பானை ஓடும், வெஸ்டன் உ.பி.யில் மட்டும்தான் கிடைக்கும். அரியானாவில்கூட கிடைக்காது.
காசிக்கும், டில்லிக்கும் நடுவில் உள்ள பகுதி களில்தான் கிடைக்குமே தவிர, வேறு எங்குமே கிடைக்காது.
சிந்து சமவெளியில் உள்ள அனைத்துப் பண்புகளும், வேத நாகரிகங்களாக இன்று மாற்றப்பட்டுள்ளன!
அந்தப் பகுதிகளில் பின்னாளில் வந்து குடியேறியவர்கள்தான் மிக முக்கியமான காரணம். அவர்கள் குடியேறிதான் இந்த நாட்டினுடைய கலாச்சாரத்தில் முழு ஆதிக்கத்தைச் செலுத்தி னார்கள்.
எல்லா கலாச்சார பண்புகளும் இங்கிருந்து எடுக்கப்பட்டவை.
சிந்து சமவெளியில் உள்ள அனைத்துப் பண்பு களும், வேத நாகரிகங்களாக இன்று மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக சொல்லவேண்டு மானால், சிந்துசமவெளி நாகரிகத்தில் வழிபாட்டு முறைகள் இருந்தன. அப்பொழுது ஆண் குறி வழிபாட்டு முறை இருந்தன. பெண் தெய்வ வழிபாட்டு முறை இருந்தது.
அதெல்லாம் பார்த்தீர்களேயானால், இயற்கை வழிபாட்டு முறை.
எதற்கு வளத்தை மக்கள் தேடுகிறார்கள் என்றால், ஒரு நிலையான இடத்தில் இருப்பவர்கள் வளத்தைத் தேடுவார்கள்.
இயற்கை சார்ந்த ஒரு வழிபாட்டு முறை!
ஒரு நகரமோ, ஒரு கிராமமோ அமைத்து, அதில் வேளாண்மையைப் பெருக்கி வளமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள்தான் வளத்தைத் தேடுகின்ற ஒரு வழிபாட்டு முறையைப் பின்பற்றுவார்கள். அந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றியவர்கள்தான் சிந்துசமவெளி மக்கள். அது இயற்கை சார்ந்த ஒரு வழிபாட்டு முறை.
ஆனால், வேதங்களில் சொல்லப்படுகின்ற முறை அவ்வாறு கிடையாது. ரிக் வேதத்தை எடுத்துக் கொண்டால், அக்னி வர்ணன், மித்ரன், வாயு போன்ற கடவுள்கள்தான் இருப்பார்களே தவிர, இயற்கை வழிபாடு இல்லாமல் இருந்தன.
ஆனால், பிற்காலத்தில் வேத தாக்கத்தினால், அவர்கள் வேத மதங்களாக அவற்றை மாற்றிக் கொள்கிறார்கள். அப்படி மாற்றுகின்ற ஒரு செயல் நடைபெறுகிறது.
அதிலிருந்துதான், செல்வாக்கைப் பயன்படுத்தி, நம்மிடமிருந்த அனைத்து செயல்களையும் எடுத்து அவர்களுடைய நாகரிகங்கங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், எத்தனை கோவில்கள் ஆரிய மயமாக்கப்பட்டு இருக்கின்றன என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கக் கூடிய வாய்ப்பு உண்டு.
ஒரு சிறு குழுவினால், அவர்களுடைய
ஆதிக்க சக்தியினால்தான் ஏற்படுத்தப்பட்டது!
அனைத்தும் ஒரு சிறு குழுவினால், அவர்களுடைய ஆதிக்க சக்தியினால்தான் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், நாகரிகத்திற்கான ஆதாரங்கள் அனைத்தையும் பார்த்தோம் என்றால், தொல்லியல் ரீதியாக கிடைக்கின்ற ஆதாரங்கள் அனைத்தும் நமக்குச் சொல்வது இந்த மக்களின் நாகரிகத்தைப்பற்றிதான்.
இந்த மக்கள் எவ்வாறு இருந்தார்கள்?
அவர்கள் யார்?
பூர்வ குடிகள் யார்?
அவர்கள் பேசிய மொழி என்ன? என்பதை விளக்கிக் கொண்டிருக்கின்றன.
சிந்துசமவெளி என்ற பகுதியில் பேசிய மொழி, புரோட்டோ திரவிடியனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு கருத்தை எடுத்து வைக்கிறோம்.
ஏனென்றால், தமிழ் மொழிக்கு ஒரு முந்தைய மொழியாகவும், தமிழின் தாய்மொழியாகவும் இருந்திருக்கவேண்டும் என்கிற ஒரு கருத்துத்தான் நிலவுகின்றது. ஆனால், இன்றுவரை அதை நம்மால் படிக்க முடியவில்லை.
புரோட்டோ திரவிடியன்
குறிப்புகளில் உள்ள எழுத்துகளை நம்மால் படிக்க முடியாத காரணத்தினால், அதனை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. பலர் அதை தமிழ் என்று சொல்கிறார்கள். அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு. அதனால், அவை புரோட்டோ திரவிடியன் என்று சொல்லப்படுகின்ற ஒரு முன் ஆதி தமிழாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுதான் உண்மை.
அவர்கள்தான் இன்று இந்தப் பகுதிகளில் பரவியுள்ளார்கள். தென்னிந்திய பகுதிக்கும், வட இந்திய பகுதிக்கும், அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ளார்கள். பரவியவர்களின் நாகரிகத்தைத்தான் நாம் இனிமேல் தேடவேண்டும்.
சிந்துசமவெளி நாகரிகத்தோடு
நாம் நின்றுவிடக் கூடாது!
இந்த நூற்றாண்டின் பிரகடனத்தில் மிக முக்கியமான கருத்தாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், சிந்துசமவெளி நாகரிகத்தோடு நாம் நின்றுவிடக் கூடாது.
சிந்துசமவெளி நாகரிகம் என்பது உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அதனுடைய தொடர்ச்சிகளை நாம் தேடவேண்டும்.
தொடர்ச்சிக்கான இடங்கள் பல நம்மிடம் உள்ளன. இந்தியா முழுவதும் பல இடங்கள் உள்ளன. அந்த இடங்களைத் தோண்டும்பொழுதுதான் பல ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கும். அந்த ஆதாரங்களை சிந்துசமவெளியோடு ஒப்பிடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.
சங்க இலக்கியம் சாப்ட்வேர்; சிந்துசமவெளியின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஹார்ட்வேர்!
இன்றைக்கு நம்முடைய பாலகிருஷ்ணன் அய்யா அவர்கள், நம்முடைய சங்க இலக்கியத்தை சாப்ட்வேர் என்று சொல்வார். சிந்துசமவெளியின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஹார்ட்வேர் என்று சொல்வார். அவர் ஒப்பிட்டது மிக அருமையான ஒரு செயலாகும்.
அங்கே கிடைத்த ஆதாரங்களை, அதனுடைய உறவுகளை, அதனுடைய தொடர்ச்சிகளை நாம் இங்கு கிடைக்கின்ற பொருள்களோடு ஒப்பீடு செய்யவேண்டும். அப்படி செய்யும் பொழுதுதான் முழுமையான தரவுகள் நமக்குக் கிடைக்கப் பெறும்.
அதை நாம் இன்னும் செய்யத் தொடங்கவில்லை. இன்றைக்குக் கீழடியைப்பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம். கீழடி என்ற ஒரு நாகரிகத்தோடு நின்றுவிடவில்லை. பல இடங்கள் தென்னிந்திய பகுதிகளில் இருக்கின்றன. கிழக்குப் பகுதிகளிலும் இருக்கின்றன. அந்தப் பகுதிகளைத் தோண்டத் தோண்டத்தான் நமக்குப் பல உண்மைகள் கிடைக்கும்.
அவற்றையெல்லாம் நாம் ஒப்பீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகின்ற ஒரு கருத்தரங்கமாக இந்த நூற்றாண்டு பிரகடனம் இருக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.
இன்றைக்கு நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடி விட்டுப்போனால் மட்டும் போதாது.
வேதத்தில் சொல்லப்படாத செய்திகள்
தொல் எச்சங்களாகக் கிடைக்கின்றன!
இன்னும் நாம் பல செயல்களை செய்யவேண்டும் என்பதற்கு இந்தக் கூட்டம் ஊக்கமாக அமையவேண்டும்.
பெயரை மாற்றி, சிந்து சரசுவதி என்று அழைத்து, அந்த நாகரிகத்தையே மாற்றுகிறார்கள். ஏனென்றால், வேதத்தில் சொல்லப்படாத செய்திகள் தொல் எச்சங்களாகக் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை மாற்றுவதற்கு எத்தனையோ முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், அவர்களால் அதை செய்ய முடியவில்லை.
ஒருமுறை குதிரையைப்பற்றி பேசினார்கள். குதிரை கிடைத்தது என்று சொன்னார்கள். அது குதிரை கிடையாது என்று நாம் நிரூபித்தோம்.
அடுப்பைப் பார்த்து ஓமகுண்டம் என்கிறார்கள்!
இன்றைக்கு ஓமகுண்டம் கிடைத்தது என்று சொல்கிறார்கள். அடுப்பைப் பார்த்து ஓமகுண்டம் என்று சொன்னால், யாராவது நம்புவார்களா?
அடுப்புதான் கிடைக்கிறது. ராக்கிகிரி போன்ற இடங்களையெல்லாம் நான் தோண்டியவன். எங்களுக்குத் தெரியும். அங்கே கிடைக்கின்ற பொருள்கள் எப்படி இருக்கும் என்று. அடுப்பை, ஓமகுண்டமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதிலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
சிந்து சரசுவதி என்று சொன்னால்,
நாகரிகம் மாறிவிடுமா?
இன்று பெயரை மாற்றி, சிந்து சரசுவதி என்று சொல்கிறார்கள். சிந்து சரசுவதி என்று சொன்னால், நாகரிகம் மாறிவிடுமா? வாழ்ந்த மக்கள் மாறிவிடுவார்களா?
ஏனென்றால், அந்தப் பகுதியில் ஒரு காலத்தில் கக்கர், அக்ரா என்ற ஆறு பாய்ந்த இடம். அதற்குப் பழைமையான பெயரே, கக்கர் அன்ட் அக்ரா. ஒரு காலத்தில் சட்லஜ் நதியும், யமுனை நதியும் இணைந்து, ராஜஸ்தான் பகுதியில் ஓடி, பொலிவிரா என்ற இடத்தில் கடலில் கலந்தது.
அதில், சிந்துசமவெளி சார்ந்த அனைத்து இடங்களும் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட மொகஞ்சதாரோ, ஹரப்பாவைவிட, மிகப்பெரிய நகரமான ராக்கிகரி என்ற நகரம் அந்தப் பகுதியில் கிடைக்கிறது.
ஒரு நகர நாகரிகம் முழுமையாக அந்தப் பகுதியில் இருக்கின்றன.
சிந்துசமவெளி நாகரிகத்தில்,
பல நகரங்கள் இருந்துள்ளன!
கிட்டத்தட்டப் பார்த்தீர்களேயானால், சிந்துசமவெளி நாகரிகத்தில், பல நகரங்கள் இருந்துள்ளன. 13 லட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ள சிந்துசமவெளி நாகரிகத்தில் பல நகரங்கள் இருந்துள்ளன. பல நகரங்கள்தான் நம்முடைய முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன.
அவை அனைத்தும், வேத இலக்கியங்களில் ஒரு நகரத்தைப்பற்றியும் குறிப்பு இல்லை என்பதுதான் உண்மை.
அப்படியென்றால், குறிப்பில்லாத ஓர் இலக்கியத்தை, தொல் எச்சங்களோடு ஒப்பிட முயல்கிறார்கள்.
அதில் அவர்கள் தோல்வியடைகிறார்கள். அப்படி தோல்வி அடைந்தாலும், விடாமுயற்சியோடு நாங்கள் செய்வோம் என்று பெயரை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
நம்முடைய பண்பாட்டின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு பல அரிய தகவல்கள் உள்ளன!
அதை நாம் உணர்ந்துகொண்டால் போதும்; நம்முடைய தொல் எச்சங்களை எவ்வாறு நாம் முறையாக ஒப்பிடவேண்டும் என்ற ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, நாம் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அப்படி செய்தால், அதில் எந்த வெற்றியும் அவர்களுக்குக் கிட்டாது, நமக்குக் கிட்டும். நம்முடைய பண்பாட்டின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு பல அரிய தகவல்கள் நம்மிடம் உள்ளன.
அதற்கு ஆய்வுகளைத்தான் நாம் மேற்கொள்ளவேண்டும். அந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, இதுபோன்ற கருத்தரங்கங்கள் உதவும்.
இந்தக் கருத்தரங்கத்தின்மூலம் பல ஆய்வுகளை நாம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
ஏனென்றால், இன்று மிக முக்கியமான நாள்; இந்த மாதம் மிக முக்கியமான மாதம். சிந்துசமவெளி நாகரிகம் அறிவிக்கப்பட்டதின் நூற்றாண்டின் மிக முக்கியமான நாள்.
இதனை தமிழ்நாடு கொண்டாடுகிறது; தமிழ்நாடு அரசு கொண்டாடுகிறது.
வரும் ஆண்டுகளில் தொடர்ந்து கொண்டாடவேண்டும்!
நாம் இன்னும் அதை வரும் ஆண்டுகளில் தொடர்ந்து கொண்டாடவேண்டும். நம்முடைய கருத்தை நாம் ஆணித்தரமாக எடுத்துக் கூறவேண்டும். கருத்தை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறவேண்டும்.
ஆதாரமில்லாமல் நாம் பேசவில்லை. நம்முடைய இலக்கியங்களை, ஆதாரங்களை ஒப்பிட்டு நாம் பேசுகிறோம்.
நம்முடைய தொல் எச்சங்களையும் ஒப்பீடு செய்து, இந்த உலகத்திற்குத் தெரிவிக்கவேண்டும் என்பதைத்தான் ஒரு கருத்தாக இங்கே சொல்ல விரும்புகிறேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்திற்கும், திராவிடர் கழகத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தொல்லியல் இயக்குநர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்கள் உரையாற்றினார்.