வெளிநாட்டில் வெளியிடப்படும் புத்தகங்களுக்கு இந்தியாவில் மறைமுகத் தடையா?
கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்
புதுடில்லி, அக்.18 இந்தியாவில் மிகக்குறை வான அளவிலான மக்களே புத்தக விரும்பிகளாக உள்ளனர். அதுவும் வெளிநாடுகளில் வெளியிடப்பட்ட வாசிப்புப் புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களாகத் தான் இருக்கும். ஒரு சில இந்திய அறிஞர்கள் பன்னாட்டு வெளியீட்டளர்களால் புத்தகங்களை மதிப்பாய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்காக வெளிநாட்டு புத்தகங்கள் இந்தியாவிற்கு வரும். ஆனால், மறை முகமாக வெளிநாட்டுப் புத்தகங்கள் இந்தியாவில் காலடி வைப்பது கிடையாது. இந்நிலையில், அண்மையில் வேர்ட்ஸ்ரேட்டட் (Wordsrated) என்ற வலைத்தளம், “புத்தகத் தடையில் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது” எனக் கூறியது. ஆனால், தற்போது இந்திய கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர், “வெளிநாட்டுப் புத்தகங்களை பெறுவதில் சிரமம் இருக்கிறது” என வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
“வெளி நாட்டு புத்தகங்களை மட்டுமின்றி தங்கள் சொந்த எழுத்தில் உருவாக்கப்பட்டு, வெளிநாட்டில் வெளி யிடப்பட்ட புத்தகத்தை இந்தியாவிற்குத் தனிப்பட்ட முறையில் கொண்டு வருவது கூட சவாலாகவே இருக்கிறது” என எழுத்தாளர்கள் குற்றம் சாட்டி வருகின்ற னர்.
கொந்தளிக்கும்
எழுத்தாளர்கள்
வெளிநாட்டு புத்தகங்களை இந்தி யாவிற்கு கொண்டு வர பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவிக்கப்படாத தணிக்கைக்கு கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிரபல கல்வியாளர் பிரதாப் பானு மேத்தா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “வெளிநாட்டி லிருந்து புத்தகங் களைப் பெறுவதில் இந்தியாவின் சக கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற ஒரு பொது மேடையில் தான் ஒரு குறையை கூறுவது இதுவே முதல் முறை. எனது சொந்த பங்களிப்புகள் உள்பட வெளியீட்டாளர்கள் அனுப்பிய புத்தகங்களை என்னால் பெற முடிய வில்லை. பல புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பெரும்பாலும் வெளியீட்டாளர்களின் மதிப்பாய்வு பிரதிகள் மட்டுமே அனுப்பப்படும். இந்தியாவில் புத்தகம் அனுப்புவதற்கு முகவரி ஏன் போதுமானதாக இல்லை என்பது பாதி உலகத்துக்குப் புரியவில்லை” எனக் கூறி, ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பெட் எக்ஸ் (FedEx) – பன்னாட்டு போக்குவரத்து மற்றும் வணிக சேவை நிறுவனம்) ஆகியவற்றை டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் டேக் செய்துள்ளார்.
அய்தராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோதிர்மயா சர்மா கூறுகையில்,
“கூரியர் முகமைகளின் இணையதளத்தில் தவ றான விதிகள் மற்றும் குளறுபடிகளால் நானும் அவதிப்பட்டேன். அண்மையில் நண்பர் எனக்கு ஒரு புத்தகத்தை அனுப்பினார். “டிஎச்எல்இ எக்ஸ்பிரஸ் இந்தியா (DHLExpress India)” என அழைக்கப்படும் கூரியர் ஏஜென்சி மூலம் கேஒய்சி (KYC) ஆவணங்களைப் பதிவேற்ற நான் பலமுறை முயற்சி செய்தேன். ஆனால், எனது முயற்சிகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. சோர்வாக நான் நண்பரிடம் பார்சலைத் திருப்பி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். புத்தகத்தை அனுப்பிய நண்பரிடம் மன்னிப்பு கேட்கும் நிலைக்கும் தள்ளப் பட்டேன்” என அவர் கூறினார்.
பைனான்சியல் டைம்ஸின் மேனாள் தெற்காசிய பணியகத் தலைவர் ஏ.மி.காஸ்மின் கூறுகையில்,
“நானும் இந்தியாவில் இதே சித்ரவதையை அனுபவித்தேன். மதிப்புரைக்காக வெளிநாட்டு புத்தகங்களின் நகலை எனக்கு அனுப்ப முயன்றபோது கடுமையான சிரமங்களை எதிர்கொண்டேன். இறுதி யில் வெளிநாட்டில் புத்தகங்களை வாங்குவதையே கைவிட்டேன். இதுதான் சரியான யோசனையா? என்று நான் ஆச்சரியப்பட்டேன். மக்களின் வாசிப்பைக் கட்டுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு புத்தகங்கள் நாட்டிற்குள் நுழைவதை நிறுத்துவது வித்தியாசமான அணுகுமுறை ஆகும்” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் விமர்சகர் ராஜ் காலித் கூறுகையில்,
“எளிய புத்தகங்களைப் பெறுவதற்கு நான் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டேன், அவற்றை திரும்பப் பெறுமாறு கூரியரிடம் அடிக்கடி கேட்டுக்கொள்கிறேன். இந்த அர சாங்கம் தொலைதூரத்தில் சாத்திய மான சில மோசடி நிகழ்வுகளைத் தடுக்கும் போர்வையில் மக்களைக் கண்காணித்தல், துன்புறுத்துதல் மற்றும் சுமைப்படுத்துவதில் வெறித்தனமாக உள்ளது” என கண்டனம் தெரிவித்தார்.
எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான நிலஞ்சனா ராய் கூறுகையில்,
“முன்பெல்லாம் வெளிநாட்டில் இருந்து புத்தகம் வாங்குவது மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால், இப்போது மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது. வெளிநாட்டிலிருந்து புத்தகங்களை அனுப்ப வேண்டாம் என்று நண்பர்களையும், வெளியீட்டா ளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளேன். இது சந்தேகத்திற்கிடமான கலாச்சா ரத்தை வளர்க்கிறது” என அவர் கூறினார்.
வரலாற்றாசிரியரும், பல புத்தகங்களை எழுதியவருமான ரோசன் தலால்,
“எனக்கு இரண்டு புத்தகங்கள் இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்டன. கேஒய்சி மற்றும் மின் கட்டண ரசீது என பல்வேறு ஆவணங்கள் கேட்டனர். நான் மறுத்துவிட்டேன். அதற்கான காரணத்தை என்னால் யோசிக்க முடியவில்லை. அதனால் புத்தகத்தைத் திருப்பி அனுப்பிவிட்டேன்” என கூறியுள்ளார்.
மோடி பிரதமர் ஆன பிறகு நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவி வருகிறது. ஊடகச் செய்தி முதல் முக நூல் காட்சிப் பதிவு வரை பல்வேறு கட்டுப்பாடுகள், தணிக்கைகள் உள்ளன. இதன்மூலம் ஜனநாயகம், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இதன்வரிசையில் தற்போது வெளிநாட்டுப் புத்தகங்க ளுக்கும் மோடி அரசு மறைமுக தணிக்கை கட்டுப்பாடுகள் மூலம் தடை விதித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோடிக்கு புத்தகங்கள் என்றால் நடுக்கமா? இல்லை அலர்ஜியா? என்று தெரியவில்லை.