கவிஞர் கலி.பூங்குன்றன்
‘தினமலர்’ ஏட்டில் (6.5.2017) மூத்த பத்திரிகையாளர் என்று கூறப்படும் பா.சி.ராமச்சந்திரன் என்பவர் கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார். தலைப்பு “ஸ்டாலின் விருப்பமும் – திராவிட நாடும்” என்பதாகும்.
தலைப்பு இப்படி இருந்தாலும், கட்டுரைக்குள் நுழைந்தால் தந்தை பெரியார் பற்றியும், திராவிட இயக்கம் பற்றியும் சகட்டு மேனிக்கு அவதூறுகள் பொழியப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு நாள் கழித்து “பிராமண துவேஷம் வளர்ந்த கதை” எனும் தலைப்பில் டாக்டர் சு.அர்த்தனாரி என்பவர் (இவர் இதய நோய் சிகிச்சை பிரிவு பேராசிரியர்) அதே தினமலரில் எழுதியுள்ளார்.
எழுதியவர் எந்த அளவுக்கு விவரம் தெரிந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டால் விலா நோக சிரிப்புத் தான் வரும் – ‘தினமலரின்’ அறிவு நாணயத்தை எண்ணி ஏகடியம் பேசத்தான் தோன்றும்.
“1930களில் சென்னை நகரில் உள்ள சில பிராமணரல்லாத பேர்வழிகள் ஒரு கட்சியைத் துவக்கினர்! அதன் பெயர் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம். இதில் ஈ.வெ.ரா.வும் அடக்கம்” என்று எழுதியுள்ளார். 1930இல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாம்!
இந்தக் கூட்டம் வரலாற்று நிபுணர்கள் குழுவில் இடம் பெற்றால் என்னாவது?
அடுத்து ஒன்று!
1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) தொடங்கப்பட்டது. அப்பொழுது கூட தந்தை பெரியார் அந்த அமைப்பில் இல்லை என்பது முக்கியம்.
1938இல் தந்தை பெரியார் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பெல்லாரி சிறையில் இருந்தபோது – தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், தன்னிச்சையாக தந்தை பெரியாரை தலைவராகத் தேர்ந்தெடுத்தது என்ற வரலாறு தெரியாத வக்கணைக் கொழுந்துகளை என்ன சொல்லுவது?
‘தினமலரின்’ அதே கட்டுரையில் இன்னொரு கேலிக்கூத்து என்ன தெரியுமா? 1927இல் ராஜாஜி சேலம் நகர சபைத் தலைவராக இருந்தாராம்.
இதுபோன்ற பூஜ்ஜியங்கள் தோளில் பூணூல் இருக்கும் ஒரே காரணத்தால் ஒன்றிய அரசால் வரலாற்று நிபுணர் குழுவில் திணிக்கப்படுகிறார்கள்.
இன்னும் இருக்கிறது! அந்தக் கட்டுரையில் கேளுங்கள்! கேளுங்கள்! சிரிப்பு சிறந்த டானிக் அல்லவா!
தஞ்சையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வெ.ரா., காமராசர் ஆகியோருக்கு தனியே வெளியே திண்ணையில் உணவை வைத்தும், மற்ற பிராமணர்களுக்கு பிராமணர்களின் வீட்டின் உள்ளேயும் சாப்பாடு பரிமாறினர். அவர்கள் இருவரும் சாப்பிட்ட இலையை மாலை வரை யாரும் எடுக்கவில்லை.
(நடந்தது உண்மைதான் – அதைக்கூட சரியான வரலாறாகத் தெரியாத ‘அபிஷ்டு’களாக இருப்பதுதான் கவனிக்கத்தக்கது.)
தந்தை பெரியாரும், சீனிவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரச்சார விஷயமாய் திண்டுக்கல்லுக்கு ஒரு பார்ப்பனர் வீட்டுக்குச் சென்றபோதும், தனியே வைத்து சாப்பாடு போட்டார்கள். மற்றொரு சமயம் தந்தை பெரியாரும், திரு வேங்கடசாமி பிள்ளையும் பெரிய குளத்துக்குச் சென்ற போதும் தனியே வைத்து சாப்பாடு போட்டனர். காலை சாப்பிட்ட எச்சில் இலை பக்கத்தில், இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும் ஈக்களும் மொய்த்திருந்தன. (‘குடிஅரசு’, 10.1.1948).
இதில் காமராசர்ர் எங்கிருந்து வந்தார்? எந்த ‘பஞ்சாங்கத்தில்’ இந்த பஞ்சகச் சங்கிகள் படித்தன?
அதே நேரத்தில் ஓர் உண்மையை அவர்கள் அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டனர்.
காங்கிரசில் முக்கிய தலைவர்களாகச் சென்ற வர்கள் பார்ப்பனரல்லாதவர்களாக இருந்தால் பார்ப்பனர்கள் அவர்களை எப்படி நடத்துவார்கள் என்பது விளங்கவில்லையா? – இதுதான் அந்தக் காலத்துக் காங்கிரஸ்.
தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத தலைவர் களைப் பார்ப்பனர்கள் அவமதித்தது ஒருபுறம் இருக்கட்டும். காந்தியாரையே தாழ்வாரத்தில் உட்கார வைத்தவர்கள் தானே இந்தப் பார்ப்பனர்கள்! மறுக்க முடியுமா?
இதோ காந்தியார் பேசுகிறார்:
“சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில் உட்கார்ந்து இருந்தேன். இப்போது அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள்”.
(“தமிழ்நாட்டில் காந்தி”, பக். 520-521)
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பிறகே (1925) காந்தியாருக்கும் அவரது மனைவிக்கும் தாழ்வாரத்திலிருந்து பார்ப்பனர்களின் வீட்டுக்குள் செல்லும் உரிமையும் தகுதியும் கிடைத்தன என்பதை அடிக்கோடிட்டு நெஞ்சில் பதிய வையுங்கள்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய செய்தி இதோ!
“நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்கள் அந்தஸ்து உயர்ந்துள்ளது. நீதிக்கட்சிதான் தமிழ் மக்களிடத்துப் பிடிப்பும் – தமிழர்களின் வாழ்வில் ஒரு உருப்படியான சேவையும் செய்துள்ளது.
உதாரணமாக, நான் முன்பெல்லாம் ‘இந்து’ பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றபோது, திரு. கஸ்தூரி ரெங்க அய்யங்கார் அவர்கள் “வாடா சிதம்பரம்” என்றழைத்துப் பேசுவார். ஆனால், நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு நாள் போனேன். “வாங்கோ சிதம்பரம் பிள்ளை, சவுக்கியமா?” என்று அழைத்தார்.
(வ.உ.சிதம்பரனார் சென்னை நேப்பியர் பூங்காவில் ஆற்றிய உரை – உரையைச் செவிமடுத்தவர் காஞ்சி கல்யாணசுந்தரம்.)
மற்றொரு வயிறு வெடிக்கும் தகவல்: சங்கராச்சாரியார்கள் வரலாறு எழுதினால் எப்படி இருக்கும்? இதோ பார்க்கலாம்.
நமது உபநிஷத்துகளில் சொல்லப்பட்டிருக்கிற ஒரு விஷயத்தை அவர்கள் படித்துவிட்டு அர்த்தத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் கிரகித்துக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். ஜா என்ற சப்தம் யா என்ற சப்தமாக மாறிவிடும். ஜாகோப் என்ற ஹிப்ரு பாஷைச் சொல் யாஹோப் ஆகிவிடுகிறது. ஜம்னா – யமுனை, ஜாத்ரா – யாத்திரை, ஜாகப் – யாதவ், ஜா – யாவாகி வருவதை இந்த உதாரணங்கள் விளக்குகின்றன.
ஒரு உபநிஷத்தில் முதலில் ஆத்மா மாத்திரம் இருந்தார். மாயா சம்பந்தத்தால் ஜீவன் உண்டாயிற்று. அது பிப்பலத்தால் (கர்மபலத்தை) சாப்பிட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆத்மாவை அகம் என்றும், ஜீவனை ஈவ் என்றும் பலத்தை ஆப்பிள் பழமென்றும் எழுதிக் கொண்டு விட்டார்கள். கிருஷ்ணன் கோபலன் என்று அதாவது பசுவை இரட்சிப்பவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிருஸ்துவை இடையர் என்று சொல்லியிருக்கிறார்கள். கிருஸ்து சரித்திரம் கிருஷ்ணன் சரித்திரம் போலவே இருக்கிறது. நமது புராணத்தைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டு அதை எழுதிக் கொண்டார்கள். ஒருவரிடமிருந்து ஒரு கதை மற்றவரிடம் போகையில் அதில் மாறுதல் ஏற்படும். எத்தனை கை தாண்டி கிருஷ்ணன் சரித்திரமும் ‘கிருஸ்து’ சரித்திரமாயிற்றோ…
கிருஸ்து சரித்திரத்திற்கு நமது புராணமே மூலம் என்பது எனது அபிப்பிராயம்.
(சிறீஜகத் குருவின் உபதேசங்கள், மூன்றாம் பாகம் Published by சிறீகாமகோடி கோசஸ்தானம் 4, பிரான்ஸிஸ் ஜோசப் தெரு, சென்னை-1)
சென்னை அரண்மனைக்காரர் தெருவில் உள்ள சிறீ கச்சபேசுவரர் ஆலயத்தில் (25.1.1933) காஞ்சி சங்கராச்சாரி உபன்யாசம்.
சிறீ கிருஷ்ணனிலிருந்து, கிறிஸ்து வந்தாராம்.
கற்பனை தேவைதான் – வரலாற்றில் தங்கள் தண்டத்தை நுழைக்கலாமா? நுழைப்பதைத்தான் அனுமதிக்கலாமா?
சிந்து அகழ்வாய்வு நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்று ஆக்கிக் காட்டி ஆரியத்தின் கோலுக்கு ஆட்டம் போடும் ஒன்றிய அரசு – 17 பேர் கொண்ட குழுவில் 14 பார்ப்பனர்களைத் திணிப்பதன் சாரம்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உண்மையை திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான மாண்புமிகு துரைமுருகன் கூறினார் என்பதற்காக ‘தினமலர்’ திரிநூலை முறுக்கிக் கொண்டு, உச்சிக்குடுமியையும் அவிழ்த்துவிட்டு ஆடாத ஆட்டம் போடுவதை பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்ளட்டும் – புரிந்து கொள்ளவும் வேண்டும்.
தினமலர் ஏட்டின் திரிபு – திருகுதாளத்தை அடுத்துப் பார்ப்போம்!