புதுடில்லி, அக்.18 பஞ்சாப் மற்றும் அரியானாவில் சட்ட விரோதமாக பயிா்க் கழிவுகளை எரிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து இரு மாநில தலைமைச் செயலா்களும் அக்டோபா் 23-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம் நேற்றுமுன்தினம் (16.10.2024) அழைப்பாணை அனுப்பியது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் தலைநகா் தில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குளிா்கால மாதங் களில் பனிப் புகையை ஏற்படுத்து கிறது. இது சுவாச பிரச்சினைக்கு வழி வகுக்கிறது.
இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அமானுல்லா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பயிா்க் கழிவுகளை சட்ட விரோதமாக எரிப்பவா்களுக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளில் பஞ்சாபில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படுவதில்லை. விவசாய கழிவுகள் எரிக்கப்படும் இடங்களை இஸ்ரோ காட்டுகிறது. ஆனால், அந்த இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறாா்கள்.
விவசாயிகள் வேளாண் பணிக்கு டிராக்டா்களைப் பயன்படுத்த உறுதி செய்ய மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற பஞ்சாப் அரசு எந்த ஒரு முயற்சியும் இது வரை எடுக்கவில்லை. இது அரசியல் விவகாரம் அல்ல, சுற்றுச்சூழல் மாசுபாடு தொடா்புடையவை. இதில் மாநில அரசின் அணுகுமுறை முற்றிலும் தவறானதாக இருந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் அதிகாரம் இல்லாத அமைப்பாக மாறிவிட்டது. இந்த ஆணையத்துக்கு அனுபவமிக்க நிபுணா்களை உறுப்பினா்களாக மத்திய அரசு நியமிக்கவில்லை.
பயிா்க் கழிவுகளை எரித்த வா்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அரியானா மற்றும் பஞ்சாப் அரசு அதி காரிகள் மீது காற்றுத் தர மேலாண்மை ஆணையம் அபராதம் விதிக்க வேண்டும்; அடுத்த விசாரணையின்போது 23.10.2024 இரு மாநில தலைமைச் செயலா்களும் இது குறித்து விளக்கமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என உத்தர விட்டது.