சென்னை, அக். 18- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந் தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:- மழையால் எந்தவிதமான பாதிப்பும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை போன்ற பலதுறைகளின் அதிகாரிகள் தீவிரமாக களத்தில் இறங்கி அரும்பணியாற்றி இருக்கிறார்கள். அதன்மூலம் கடும் மழையினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மழை நின்ற சில மணித்துளிகளிலேயே இயல்பு நிலைக்கு திரும்பியதை தமிழ்நாடு அரசின் சாதனையாக கருதலாம். இதற்காக முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்களை மனதார பாராட்டுகிறேன். சென்னை மாநகர மக்கள் அனைவரும் நிம்மதியடைகிற வகையில் தற்போது இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.
இதற்கு தமிழ்நாடு அரசின் புயல் வேக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும். எதையும் விமர்சனம் செய்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் நிவாரண நடவடிக்கைகளை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தமிழநாடு அரசு கடந்த காலங்களில் எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உரிய பலன் கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியினரே விமர்சிக்க முடியாத அளவிற்கு தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுகிறார்கள். இத்தகைய சீரிய முயற்சிகளை திட்டமிட்டு, செயல்படுத்திய முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் ஒரே அட்டையை பயன்படுத்த நடவடிக்கை
சென்னை, அக்.18 மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகிய அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்க என்சிஎம்சி (நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு) எனப்படும் ஒரே பயண அட்டையை பயன்படுத்தும் வசதியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக எஸ்பிஅய் வங்கி உதவியுடன் மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை கடந்த ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கருவியில் கிரெடிட், டெபிட் கார்டுகள், க்யூஆர் குறியீடு உள்ளிட்டவை மூலம் பணம் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதில் என்சிஎம்சி பயன்படுத்தும் முறையையும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பயணச்சீட்டுக் கருவி மூலம் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் போக்கு வரத்துக் கழகங்களிலும் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிவை சுட்டிக்காட்டி போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட பதிவில், “அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் 3 மாதங்களுக்குள் பயணச்சீட்டுக் கருவி முழுமையாக வழங்கப்படும். மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து என்சிஎம்சி அட்டையும் விரைவில் அறிமுகம் செய்யப்படும்” என கூறியுள்ளார்.