சென்னை, அக்.18 வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- நெல்லூர் இடையே நேற்று (17.10.2024) அதிகாலை கரையைக் கடந்தது. தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியில் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.
மேலடுக்கு சுழற்சி: இந்நிலையில், தமிழ்நாடுப் பகுதிகளின் மேல் தற்போது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில்ஒருசில இடங்களிலும், 20 முதல் 22-ஆம் தேதிவரை பெரும்பாலான இடங்களிலும், 23-ஆம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழ்நாட்டில்இன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20, 21-ம்தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி,திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில்
‘போதையில்லா தமிழ்நாடு’
என்ற தலைப்பில் போட்டி
நவ.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.18 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நேற்று (19.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தொடர்ந்து இளைஞர்கள், பொதுமக்கள் இடையே புகையிலை பொருட்கள் மற்றும் மது மீது நாட்டம் ஏற்படுவதை தடுப்பது அரசின் நோக்கமாகும். எனவே, போதையின் தீமைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம் ‘போதையில்லா தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் ஆகிய போட்டிகள் நடத்த முன்வந்துள்ளது.
இந்த போட்டிகளில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டு தங்கள் சுயமான கற்பனையில் உருவான படைப்புகளை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் அனுப்பிவைக்கும் படைப்புகளில் சிறந்த படைப் பாளர்களை தேர்ந்தெடுத்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பார்.