புதுடில்லி, அக்.17 ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகான பேரவைத் தோ்தல் என்ப தோடு, கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும்.
துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் அய்ந்து உறுப்பினர் களையும் சோ்த்து, ஜம்மு-காஷ்மீா் பேரவையின் மொத்த பலம் 95 என்ற நிலையில், தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 42 இடங்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 6 இடங் களிலும், மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் வென்றன. இதையடுத்து, முதலமைச் சராக ஒமா் அப்துல்லா தோ்வு செய்யப்பட்டார். அவருக்கு 4 சுயேச் சைகள் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு தெரிவித்தனா்.
முதலமைச்சராக ஒமா் பதவியேற்பு: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடியரசுத் தலைவா் ஆட்சி நீடித்து வந்த நிலையில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசு நேற்று (16.10.2024) பதவியேற்றது. சிறீநகரில் உள்ள ஷொ்-இ-காஷ்மீா் பன்னாட்டு மாநாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சராக ஒமா் அப்துல்லா பதவியேற்றார். தேசிய மாநாட்டுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான சுரீந்தா் சவுத்ரி, சகீனா மசூத், ஜாவத் தார், ஜாவத் ராணா, சுயேச்சை உறுப்பினர் சதீஷ் சா்மா ஆகிய 5 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். அனைவருக்கும் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
துணை முதலமைச்சர் சுரீந்தா் சவுத்ரி: நவ்ஷேரா தொகுதியில் ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னாவை சுமார் 7,800 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியவரான சுரீந்தா் சவுத்ரிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.