மனிதர்களின் வரலாற்றைப் பற்றியும், மக்களின் வரலாற்றைப் பற்றியும் நீங்கள் அறியவேண்டும் என்றால், தொல்லியல்தான் முதன்மைச் சான்றாகும்!
தொல்லியல் ஆய்வாளர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா சிறப்புரை
சென்னை, அக்.17 தொல்லியல் துறையில் புதிய புதிய தரவுகள் கிடைக்க, கிடைக்க வரலாறு மாறிக்கொண்டு இருக்கும் என்பதுதான் உண்மை. ஏனென்றால், வரலாற்றுக்கான ஆதாரங்கள் தொல்லியல் ரீதியாகத்தான் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் வரலாற்றைப் பற்றியும், மக்களின் வரலாற்றைப் பற்றியும் நீங்கள் அறியவேண்டும் என்றால், தொல்லியலைத்தான் நீங்கள் நம்பியிருக்கவேண்டும். ஏனென்றால், அதுதான் முதன்மைச் சான்றாகும். இரண்டாவது சான்றுகளில் இடைச்செருகல்கள் என்னவேண்டுமானாலும் இருக்கலாம் என்றார் தொல்லியல் ஆய்வாளர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்கள்.
சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா!
கடந்த 24.9.2024 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழாவில், தொல்லியல் ஆய்வாளர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
சிந்துவெளி நாகரிகம்
திராவிட அடித்தளம்!
ஓர் இனிய மாலைப் பொழுதில், பெரியார் திட லில், திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் மற்றும் திராவிடர் கழகம் இணைந்து சிந்துவெளி நாகரிகத்தின் பிரகடனத்தின் நூற்றாண்டு விழாவினை சீரும் சிறப்புமாக இன்று கொண்டாடி வருகிறது.
இந்த விழாவிற்குத் தலைமை தாங்கியுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களே,
இன்று இந்த சிந்துவெளி நாகரிகம் திராவிட அடித்தளம் என்று உரையாற்ற வந்துள்ள மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் அய்யா அவர்களே,
என்னுடைய பேராசிரியர்கள், குறிப்பாக சொல்ல வேண்டுமானால், பேராசிரியர் ஜெகதீசன் அவர்களே, பேராசிரியர் கருணானந்தன் அவர்களே,
இங்கே வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனார் அவர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற கழகப் பொருளாளர் குமரசேன் அய்யா அவர்களே,
அறிஞர் பெருமக்களே, சான்றோர்களே, பெரி யோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குமுன் இங்கே பேராசிரியர்கள் மிக விரிவாக சிந்துசமவெளி நாகரிகத்தைப்பற்றி சொன்னார்கள். அவர்கள் உரையாற்றிய பின், நான் என்ன பேசவிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால், ஏன் நாம் இந்த நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுகிறோம் என்பதுதான் நம் முன் இருக்கின்ற கேள்வியாகும்.
தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது!
சிந்துவெளி நாகரிகப் பிரகடனச் செய்தியை தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. வேறு எந்த மாநிலமும் அதைச் சீண்டவில்லை. அவர்களுக்கு என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு அதுபற்றிய புரிதல் இல்லை.
ஆனால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அந்தப் புரிதல் இருப்பதினால்தான், நாம் சீரும் சிறப்புமாக நூற்றாண்டு அறிக்கை பிரகடனத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
இந்திய மண்ணில் இருக்கின்ற
பெரிய சிக்கல்!
ஜான் மார்ஷல் என்ன சொன்னார் என்பதுபற்றிகூட தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அதுதான் இந்திய மண்ணில் இருக்கின்ற பெரிய சிக்கல்.
வரலாறு என்பதை நாம் சரியான கோணத்தில் அணுகவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
ஏனென்றால், வரலாறை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். வரலாறு என்பது பெருமிதங்களைச் சொல்லுவது கிடையாது. பேராசிரியர் அவர்கள் சொன்னதுபோன்று, பெருமிதங்கள் வரலாறு கிடையாது.
மக்கள் எவ்வாறு இருந்தார்கள்?
சமூகம் எவ்வாறு இருந்தது?
வருவார்கள், போவார்கள், ஆள்வார்கள், செல்வார்கள் ஆனால், அவர்களெல்லாம் வரலாறு கிடையாது. மக்கள் எவ்வாறு இருந்தார்கள்? சமூகம் எவ்வாறு இருந்தது? சமுதாய நிலை எவ்வாறு இருந்தது? என்பதுதான் மிக முக்கியமான வரலாறாகும்.
அந்த வரலாறைப்பற்றி யாருமே பேசுவதில்லை. அதை நினைத்தால்தான் மிகவும் வேதனையாக இருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் பேசும்பொழுதுதான், நம்மு டைய உண்மையான வரலாறு நமக்குத் தெரியவரும்.
எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது!
அந்த ஒரு செயலை செய்கின்ற ஓர் இடமாக, இந்தத் திராவிட வரலாற்று ஆய்வு மய்யமும், திராவிடர் கழகமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றது என்று நினைத்தால், எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது.
ஏனென்றால், இங்கே இருந்துதான் நாங்கள் புறப்பட்டவர்கள் என்ற பெருமை எங்களுக்கு இருக்கிறது. அந்தப் பெருமையை என்றைக்குமே நாங்கள்விட்டுக் கொடுக்கமாட்டோம்.
இதுபோன்ற அரங்குகளில் நம்முடைய கருத்துகளைச் எடுத்துச் சொல்லவேண்டும். ஜான் மார்ஷல் என்ற ஒருவர் இல்லையென்றால், நமக்கு சிந்துசமவெளி நாகரிகத்தைப்பற்றி தெரிந்திருக்காது. அதைப்பற்றி நாம் யாருமே படித்திருக்கமாட்டோம்; பாடப் புத்தகத்தில்கூட அதுகுறித்த பாடம் இருந்திருக்குமா? என்ற சந்தேகம்கூட நமக்கு வந்திருக்கும்.
மிக அருமையான ஒரு கருத்தை எடுத்து வைத்தவர்தான் ஜான் மார்ஷல் அவர்கள்.
சிந்துசமவெளி நாகரிகத்தைப்பற்றிய தகவல்களை அவருக்கு முன்னாலே பல ஆண்டுகளாக தெரிய ஆரம்பித்துவிட்டன. ஆனால், அந்தத் தகவல்கள் முழுமை பெறவில்லை என்பதுதான் உண்மை.
ஏனென்றால், சிந்துசமவெளி பகுதிகளான மொகஞ்ச தாரோ, ஹரப்பா போன்ற இடங்கள் எப்பொழுதும் இருக்கின்ற இடங்கள்தான்; யாரும் இல்லை என்று சொல்லவில்லை.
‘‘இறந்தவர்களின் மேடு’’ என்று அழைக்கப்பட்டது!
மொகஞ்சதாரோ இடத்தை, ‘‘இறந்தவர்களின் மேடு” என்றுதான் அழைக்கப்பட்டது. யார் என்பது, யாருக்குமே தெரியாது. அவர்கள் யார் என்பது யாருக்குமே தெரியாமல், ஒரு மேடாக இருந்துகொண்டிருந்தது; ஹரப்பாவும் அதுபோன்றுதான் இருந்து கொண்டிருந்தது.
அந்தப் பகுதிக்கு சார்லஸ் மேசோன் என்ப வர்தான் முதன் முதலாக அங்கே போகிறார். அவர்தான் அதுகுறித்த தகவல்களை கட்டுரை களில் குறிப்பிட்டிருந்தார். அவர், ஆக்ராவைச் சேர்ந்தவர். ராணுவ அதிகாரியாக இருந்தவர். 1824 ஆம் ஆண்டு அங்கிருந்து தன்னுடைய படை வீரர்களுடன் கிளம்புகிறார்; பலுஸ்சிஸ்தான் பக்கம் போகவேண்டும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. அதற்காக அவர் சிந்து பலுஸ்சிஸ்தான் பகுதிக்குச் செல்கிறார். சிந்து சமவெளி நாகரிகத்தைப்பற்றி அறிவதற்காக அல்ல அவர் சென்றது. ஆனால், அந்த இடங்களைப் பார்த்து வியக்கிறார். அவர் சொல்கின்ற கருத்து, “இது பல நாகரிகத்தின் ஒரு சின்னமாக இருக்கலாம்” என்பதுதான்.
ஆனால், அது ஹரப்பாவா? வேத நாகரிகமா? அல்லது அதற்கு முன்புள்ள நாகரிகமா? என்று எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.
பிராகுயூ என்று பேசப்படுகின்ற திராவிட மொழி!
ஆனால், சார்லஸ் மேசோன் அவர்களுக்கு ஒரு புரிதல் ஏற்படுகிறது. அந்தப் பகுதியில் பிராகுயூ என்று பேசப்படுகின்ற திராவிட மொழி பேசுகின்ற பழங்குடியினர் நிறைய பேர் இருக்கின்றனர் என்று அவர் முதன்முதலில் எழுதுகிறார்.
ஹரப்பா பகுதிகளில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களு டைய கலாச்சாரம் அந்த மேட்டுப்பகுதியோடு இணைந்திருக்கிறது என்ற ஒரு செய்தியை அவர் சொல்கிறார்.
அலெக்சாண்டர் கன்னிகாம்!
அந்த இடத்தை, அலெக்சாண்டர் கன்னிகாம் என்பவர், 1861 ஆம் ஆண்டிற்குப் பின், ஒரு டிரையல் டிரெஞ்ச் என்று சொல்லப்படுகின்ற ஒரு சிறிய அகழாய்வை மேற்கொள்கிறார். அப்பொழுது அங்கு கிடைக்கின்ற சின்னங்களையெல்லாம் பார்த்துவிட்டு, ப்ரி மவுரியன் என்று சொல்லப்படுகின்ற, மவுரிய காலத்திற்கு முன் இருந்த நாகரிகமாக இருக்கலாமே தவிர, அது வேறு எந்த நாகரிகத்திற்கும் ஒப்பானது இல்லை.
குறிப்பாக இன்னொரு கருத்தை அவர் சொல்கிறார், ஹரப்பா, மொகஞ்சதாரா போன்ற இடங்கள், புத்த சமயத்தைச் சார்ந்த ஒரு ஸ்தூபியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு ஏற்படுகிறது. ஆனால், அவர் தோண்டிப் பார்க்கவில்லை. ஆனால், அவர் பெரும்பாலும் புத்த சமயத்தைப்பற்றி முழுமையான ஆய்வை மேற்கொண்டவர்.
அவர் இந்தியாவிற்கு வந்ததின் காரணமே, சீன வெளிநாட்டவர்கள் குறிப்பைப்பற்றி முழுமையாக ஆய்வு செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.
பாரூட், சாரநாத் இடங்கள் தோண்டப்பட்டன
அப்படி வரும்பொழுது, இந்தியாவில் பல புத்த நினைவுச் சின்னங்களையெல்லாம் அவர் தோண்டி எடுக்கிறார். குறிப்பாக, பாரூட் என்ற இடம் தோண்டப்படுகிறது; சாரநாத் என்ற இடம் தோண்டப்படுகிறது. சிராவஸ் என்ற இடம் கண்டுபிடிக்கப்படுகிறது. லுந்தினி கண்டு பிடிக்கப்படுகிறது. குசி நகரம் போன்ற இடங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. தட்சசீலம் போன்ற ஸ்தூபங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, அதனுடைய தோற்றம், புத்த சமயத்தைச் சார்ந்தவையாகத்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது. ஆனால், அதற்குமேல் அவருக்கு எந்தக் கருத்தையும் சொல்லத் தெரியவில்லை.
அதற்குப் பிறகுதான், இந்திய வரலாற்றில் பல மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
வரலாற்றுக்கான ஆதாரங்கள் தொல்லியல் ரீதியாகத்தான் கிடைத்துக் கொண்டிருக்கின்றன!
தொல்லியல் துறையில் புதிய புதிய தரவுகள் கிடைக்க, கிடைக்க வரலாறு மாறிக்கொண்டு இருக்கும் என்பதுதான் உண்மை. ஏனென்றால், வரலாற்றுக்கான ஆதாரங்கள் தொல்லியல் ரீதியாகத்தான் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் வரலாற்றைப் பற்றியும், மக்களின் வரலாற்றைப் பற்றியும் நீங்கள் அறியவேண்டும் என்றால், தொல்லியலைத்தான் நீங்கள் நம்பியிருக்கவேண்டும். ஏனென்றால், அதுதான் முதன்மைச் சான்றாகும். இரண்டாவது சான்றுகளில் இடைச்செருகல்கள் என்னவேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால், மக்கள் விட்டுச் சென்ற பொருள்களை எடுத்து, நாம் அதை ஆவணப்படுத்தி, அதனை வரலாறாக உருவாக்கும்பொழுது, அதில் எந்த ஒரு மாறுதலும் செய்ய முடியாத கருத்துகள் கிடைக்கும். அந்த வகையில், நம்மிடம் தொல்லியல் சான்றுகள் உறுதியாக இருக்கின்றன.
அந்த வகையில் பார்த்தீர்களேயானால், ஜான் மார்ஷல் இந்தியாவிற்கு வருவதற்குக் காரணமே, கர்சன் பிரபுதான்.
1902 ஆம் ஆண்டில், 26 ஆவது வயதில்தான் இந்தியாவிற்கு வருகிறார் ஜான் மார்ஷல். இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்குத் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
வின்ஸ்டன் ஸ்மித் என்பவரைத்தான் அந்தப் பதவிக்கு நியமிக்க இருந்தார்கள். அதற்கு மறுப்புத் தெரிவித்த கர்சன் பிரபு அவர்கள், ஜான் மார்ஷல் அவர்களை அந்தப் பதவிக்கு நியமித்தார்.
கலைப் பொருள்களைச் சேகரிக்கும் நோக்கில்தான் பல இடங்களில்
ஆய்வுகள் நடைபெற்றன!
ஏனென்றால், அகழாய்வுகள் செய்யவேண்டும்; ஜான் மார்ஷலுக்கு முன்பு செய்யப்பட்ட அக ழாய்வுகள் எல்லாம் பார்த்தீர்களேயானால், தொல்பொருள்களைத் தேடவேண்டும் என்ற ஓர் எண்ணத்தில்தான் ஆய்வுகள் நடந்தன. அய்ரோப்பியர்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. தொல்பொருள்களை, கலைப் பொருள்களைச் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் தொல்லியல் படிப்பே ஆரம்பிக்கிறது அடிப்படையில். அப்படி கலைப் பொருள்களைச் சேகரிக்கும் நோக்கில்தான் பல இடங்களில் ஆய்வுகள் நடைபெற்றன. குறிப்பாக சொல்லவேண்டுமானால், எகிப்திய ஆய்வுகளைச் சொல்லவேண்டுமானால், எகிப்திய ஆய்வுகள், கலைப் பொருள்களைத் தேடுவதற்காகத்தான் நடைபெற்றது.
நெப்போலியன் அவர்கள் அந்த ஆய்வை மேற்கொண்டதற்கான காரணம், கலைப்பொருள்களைக் கொண்டு போகவேண்டும்; பிரான்சில் அதனைக் காட்சிப்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் அந்த ஆய்வுகளை மேற்கொண்டார். அப்பொழுதுதான் ரொசட்டா ஸ்டோன்ஸ் கிடைத்தன. இன்றைக்கும் பார்த்தீர்களேயானால், பாரீசில் இருக்கின்ற லூவர் மியூசியத்தில் எல்லா கலைப் பொருள்களிலும், எகிப்திய கலைப் பொருள்கள் பெரும்பங்கு வகிக்கும். அவர் படையெடுத்து அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அதைக் கொண்டு போய் காட்சிப் படுத்தியிருப்பார்.
மாற்றம் காணவேண்டும் என்று நினைத்தவர் கர்சன் பிரபு!
அந்த வகையில்தான், கலைப் பொருள்களை சேகரிக்கின்ற ஓர் அடிப்படையில்தான் தொல்லியல் ஆய்வுகள் தொடங்குகின்றன. ஆனால், அதில் மாற்றம் காணவேண்டும் என்று நினைத்தவர் கர்சன் பிரபு அவர்கள்.
ஆய்வுகள் வரலாற்றை நிரூபிக்கின்ற ஆய்வுகளாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஜான் மார்ஷல் அவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு கிரீக் நாகரிகத்தில் பணிபுரிந்தவர். அதனால்தான், அவரை இந்தியாவிற்கு அனுப்பவேண்டும் என்கிற எண்ணம் கர்சன் பிரவு அவர்களுக்கு இருந்தது.
ஜான் மார்ஷல், பல ஆய்வுகளை மேற்கொள்கிறார்!
அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான், ஜான் மார்ஷல் இங்கே வருகிறார். பல ஆய்வுகளை அவர் மேற்கொள்கிறார். தட்சசீலம் போன்ற இடங்களை அவர் மறுபடியும் தோண்டுகிறார். புத்த சமய நினைவுச் சின்னங்கள் இருந்த இடங்களைத் தோண்டுகிறார். புத்த சமய நினைவுச் சின்னங்களைப் பார்த்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அந்த அனுபவங்களையெல்லாம் வைத்துக்கொண்டுதான் ஹரப்பா, மொகஞ்சதாரா இடங்களை மறுபடியும் ஆய்வு செய்வோம் என்று தொடங்குகிறார்.
(தொடரும்)