மின்சாரம்
கேள்வி: பணம் வைத்திருக்கும் அயோக்கியனை மக்கள் மதிக்கிறார்களே, ஏன்?
பதில்: கலியுகத்தில் பணத்தை மட்டுமே வைத்து மனிதர்கள் மதிக்கப்படுவார்கள். நல்ல பண்புகளின் அடிப்படையில் மனிதர்கள் மதிக்கப்படமாட்டார்கள் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாகவத புராணம் கூறிவிட்டது. மக்கள் அப்படி நடக்கவில்லை என்றால், பாகவத புராணம் பொய்யாகி விடுமே!
‘துக்ளக்’, 28.6.2023, பக்கம் 29
கேள்வி: ஆன்மிகமும், அரசியல்போல் வியாபாரமாகி மாறி வருகிறதே?
பதில்:‘கலியுகத்தில் ஆன்மிகமும் வெளி வேஷமாக மாறிவிடும்’ என்கிறது பாகவத புராணம். எனவே, இப்போது வெளிவேஷ ஆன்மிகத்தைத் தாண்டி உண்மையான ஆன்மிகத்தை தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.
‘துக்ளக்’, 9.10.2024, பக்கம் 9
கலியுகம் என்பது 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள், துவாபார யுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள், திரோதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள், கிரதயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டது.
கலியுகம் 5125 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இன்னும் 4 லட்சத்து 26,896 ஆண்டுகள் கலியுகம் நடக்கும்.
இதுபற்றி எல்லாம் சிறீமத் பாகவதம் கூறுவதாக ‘துக்ளக்‘ குருமூர்த்தி கூறுகிறார். கண்ணன் இறந்த நாளில் கலியுகம் தோன்றுகிறதாம்.
‘‘புளுகினாலும் பொருத்தமா சொல்லுங்கடா, அட போக்கற்ற பசங்களா!’’ என்று உடுமலை நாராயண கவி பாடினார்!
‘துக்ளக்’ குருமூர்த்தி கூற்றுப்படி இந்தக் கலியுகத்தில் ஆன்மிகம் வெளிவேஷமாக மாறிவிடும்.
நல்ல பண்புகளின் அடிப்படையில் மதிக்கப்பட மாட்டார்கள் – கலியுகத்தில் இப்படித்தான் நடக்கும். மக்கள் அப்படி நடக்கவில்லை என்றால், பாகவத புராணம் பொய்யாகிவிடுமே என்று அங்கலாய்க்கிறார் அய்யர்வாள்.
இவர் கூற்றுப்படியே இப்பொழுது நடக்கும் ஆன்மிகம் என்பது வெளிவேஷம் என்பதை ஒப்புக்கொள்கிறார்.
அப்படி இருக்கும்போது இன்றைய ஆன்மிகம் என்பது வெளிவேஷம் என்று நாம் சொல்லும்போது, நாலு கால் பாய்ச்சலில் ஏன் பாய்கிறார்கள்?
‘‘கடவுள் இல்லவே இல்லை’’ என்று கருப்புச் சட்டைத் தோழர்கள் கூறும்போது, ஏன் கடுகடுக்கிறார்கள் – காய்ந்து விழுந்து புரள்கிறார்கள்?
மகாபெரியவாள் சங்கராச்சாரியாரை என் படுக்கையறையில் மாட்டியிருக்கிறேன். தூங்கி எழுந்து அவர் முகத்தில்தான் முழிக்கிறேன் என்று புளகாங்கிதம் அடைகிறார்.
கலியுகத்தில் இதெல்லாம் வெளிவேஷம்தானே!
ஆயிரம் ஆயிரம் கோவில்கள் இருப்பதும், புதிதாகக் கோவி்ல்களைக் கட்டுவதும் (ராமன் கோவில் கட்டுவது உள்பட) இந்தக் கலியுகத்தில் வெறும் வேஷம் என்பதைத் திருவாளர் குருமூர்த்தி வாயாலேயே வெளிவந்துவி்ட்டதே!
சமுதாயத்தில் இவர்கள் யார் யாரை எல்லாம் தூக்கிச் சுமக்கிறார்களோ, வழிபடுகிறார்களோ, அரசியலில் யாரை எல்லாம் ‘சபாஷ்!‘ போட்டு சங்கீதக் கச்சேரிகள் நடத்துகிறார்களோ, அவர்கள் எல்லாம் கலியுகத்தில் பண்புள்ளவர்களாக இருக்க முடியாது –
அப்படித்தானே!
கலியுகத்தில் பணத்தை மட்டுமே வைத்து மனிதர்கள் மதிக்கப்படுவார்கள் – நல்ல பண்புகளின் அடிப்படையில் அல்ல என்கிறார் கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை என்று கூறப்படும் திருவாளர் குருமூர்த்தி அய்யர்.
அப்படி என்றால், அந்தக் கோயங்காவை பண்பாடு இல்லாதவர் என்று முதுகில் குத்துகிறாரா?
அதானி, அம்பானி கூட்டமெல்லாம் பண்பாடு இல்லாதவர்கள்; வெறும் பணக்காரர்கள் அப்படித்தானே!
இதற்கு மாறாகக் கலியுகத்தில் யாரும் இருக்க முடியாது. மாறாக நடந்தால், சிறீமத் பாகவதம் பொய்யாகிவிடும் என்றும் புலம்புகிறார்.
இப்பொழுதாவது மரியாதையாக மடிசஞ்சிக் கூட்டம் ஒன்றை ஒப்புக்கொள்ளவேண்டும்.
மதத்தைப்பற்றியும், கடவுள் பற்றியும், சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள்பற்றியும், பக்தி பற்றியும், ஆன்மிகம்பற்றியும், மகா பெரியவாள் என்று கூறப்படும் ஆசாமிகள்பற்றியும் தந்தை பெரியார் கூறிவந்த கருத்துகள், விமர்சனங்கள் நூற்றுக்கு நூறு சரியானதே என்று தோப்புக் கரணம் போட்டு ஒப்புக்கொள்ளவேண்டும்.
ஏனென்றால், இது கலிகாலம்; இந்தக் கலிகாலத்தில் ஆன்மிகம் வெளிவேஷம், நல்ல பண்பாடு என்பது எல்லாம் ஒன்றும் கிடையாது. இப்படி சொல்லுவது குருமூர்த்திக் கும்பல்!
எப்படி தாங்கள் விரித்த வலையில் வசமாகச் சிக்கிக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா?