அய்தராபாத். அக்.16 தெலங்கானாவில் இந்த மாத இறுதியில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்பட இருக்கிறது.
தெலங்கானா சட்டப் பேரவைத் தோ்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநிலத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.அதைத் தொடா்ந்து, அண்மையில் நடைபெற்ற பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், ‘மாநில மக்களின் சமூக பொருளாதார நிலையை அறிய பிற்படுத்தப்பட்ட பிரிவினா் தொடா்பான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
பிற்படுத்தப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு முடிந்த பிறகு மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்றும் ரேவந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் தலைவா் ஜி.நிரஞ்சன் இது தொடா்பாக கூறுகையில், ‘பிற்படுத்தப்பட்டோர் குறித்து கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து இந்த மாத இறுதியில் கணக்கெடுப்பு தொடங்கும். 60 நாள்களில் கணக்கெடுப்பை முடித்து, டிசம்பா் 9-ஆம் தேதி அறிக்கை சமா்ப்பிக்கப்படும்.
இந்தப் பணியை மேற்கொள் வதற்கான நிர்வாக வசதிகள் பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திடம் இல்லாததால் மாநில திட்டக்குழுவின் உதவியுடன் இப்பணி மேற் கொள்ளப்படவுள்ளது என்றார்.