நாசா, அக்.16 வியாழன் கோளைச் சுற்றிவரும் ‘யுரோப்பா’ நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண் கலம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா அனுப்பியுள்ளது.
தொழிலதிபா் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ஃபால்கன் ஹெவி பிளாக் 5 ராக்கெட் மூலம், ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து அது விண்ணில் செலுத்தப்பட்டது.
‘யுரோப்பா க்ளிப்பா்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம், வியாழன் கோளை அடைவதற்கு அய்ந்தரை ஆண்டுகள் ஆகும். அதையடுத்து அந்த கோளின் சுற்றுப் பாதைக்குச் சென்று அதை சுற்றிவரத் தொடங்கும் அந்த விண்கலம், யுரோப்பா நிலவை 44 முறை நெருக்கமாகக் கடந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
கடந்த 1995 முதல் 2033 வரை வியாழனைச் சுற்றி வந்த நாசாவின் கலீலியோ விண்கலம், யுரோப்பாவின் பனிக்கட்டி படலத்துக்கு அடியில் பெருங்கடல்கள் இருக்கலாம் எனவும் அதில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் கண்டறிந்தது.
அதன் தொடா்ச்சியாக, அந்த நிலவு குறித்து மேலும் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக – குறிப்பாக அங்கு மனிதா்களைக் குடியமா்த்த முடியுமா என்று தெரிந்துகொள்வதற்காக – யுரோப்பா க்ளிப்பா் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
இத்தகைய ஆய்வுக்காக, பூமியின் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் உள்ளிட்ட விண்கலங்களைப் போல யுரோப்பாவைச் சுற்றிவரும் விண்கலத்தை அனுப்புவதற்குதான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், யுரோப்பாவின் சுற்றுப் பாதையில் அளவுக்கு அதிகமான கதிா்வீச்சு உள்ளது. அது, விண்கலத்தின் வாழ்நாளையும் செயல்திறனையும் பாதிக்கும். எனவே, நீண்ட காலம் ஆய்வு மேற்கொள்ளவும் பூமிக்கு தகவல்களை மிகத் திறனுடன் அனுப்புவதற்காகவும் வியாழன் கோளைச் சுற்றிவந்து யுரோப்பாவில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் அந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.