சியோல், அக்.15- ‘தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின்’ தொடக்க விழா, 05.10.2024 அன்று சியோல் நகரத்தில் நடைபெற்றது.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ராம் மகாலிங்கம் , கொரியா பேராசிரியர் மருத்துவர் மோசஸ், இன்பராஜ், முனைவர் ஆரோக்கியராஜ், முனைவர் ஞான ராஜ், சியோல் பல்கலைக்கழக மாணவர்கள், வட இந்திய நண்பர் கள் என 30க்கும் அதிகமான கொரியா வாழ் தமிழர்கள் முன் னிலையில் தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு – (SKTRA) தொடங்கப்பட்டது.
தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் நோக்கங்கள்
1. தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களுக்கு இடையே நல்லதொரு நட்புறவை உருவாக்கும் நோக்கில் இரு கலாச்சாரங்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், பாரம்பரியங்கள் போன்றவற்றை உலக கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து புரிந்துகொள்ளுதல்.
2. இந்தியா (தமிழ்நாடு) மற்றும் கொரியாவுக்கு இடையிலான மொழியியல் மற்றும் பண்டைய கடல்வழி வணிகம் குறித்து ஆராய்தல்.
3. சமூக, அறிவியல் மற்றும் கலாச்சார ரீதியாக தொடர்புடைய தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகளை செய்தல்.
4. கல்வி-சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மற்றும் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்குதல்.
5. கொரிய-தமிழ் ஆராய்ச்சிகளின் களஞ்சியமாக செயல்படுதல்
6. கொரியாவில் வாழும் தமிழர்கள் அறிவுசார் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள ஒரு மன்றமாக செயல்படுதல்.
7. பெரும் மதிப்புமிக்க சாத னைகள் புரிந்தவர்களைப் பாராட்டி அவர்களுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம் வழங்கி மதிப்பளித்தல்.
தொடர்ந்து ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. அமெரிக்கா மிச்சிகன் பல்கலைக்கழகம் பேராசிரியர் ராம் மகாலிங்கம், துப்புரவு தொழிலாளர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்பற்ற வேலை செய்யும் தொழிலாளர்களின் மனஅழுத்தம் நல்வாழ்வு குறித்தும், பேராசிரியர் ஞானராஜ் தென்கொரிய சமூக மாற்றம் மற்றும் கிறிஸ்தவம் குறித்தும், செ.ஆரோக்கியராஜ் கொரியா – தமிழ் மொழியியல் மற்றும் கடல்சார் தொடர்புகள் குறித்தும் ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு பேசினார்கள்.