புதுடில்லி, அக். 15–- டில்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் வரும் 2015 ஆம் வருடம் ஜனவரி 1 ஆம் தேதி வரை டில்லியில் பட்டாசுகள் வெடிக்க மாசு கட்டுப்பாட்டுக் குழு தடை உத்தரவு பிறப்பித்துளது.
வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற உள்ளன. டில்லி நகரில் ஏற்கெனவே காற்று கடுமையாக மாசு அடைந்துள்ளது விழாக்களில் பட்டாசு வெடிக்கப்படுவதால் டில்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே டில்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் இணைய வழி விற்பனைத் தளங்கள் மூலம் விநியோகம் செய்தல் மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளை வெடித்தல் என அனைத்து வகையான செயல்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக டில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை டில்லியில் மாசு பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்றாடம் இது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து காவல்துறை, மின்னஞ்சல் மூலம் மாசு கட்டுப்பாட்டு குழுவிற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உள்பட எட்டு மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு
சென்னை, அக். 15- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சிகள் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று (14.10.2024) வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு இலவச தொழிற்பயிற்சிகளை வழங்கிடவும் சிறப்பு முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
முகாம் நடைபெறும் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். எனவே, இந்த மாவட்டங்களில் செயல்படும் தனியார் நிறுவன நிர்வாகிகள் சமூக பொறுப்புணர்வுடன் தங்களது நிறுவனங்களில் உள்ள பணிகளில் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய ஏதுவாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து பணி வாய்ப்பு வழங்கி உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர், அக்.15- காவிரியின் நீர்ப்பிடிப்பு;g பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது.
டெல்டா பாசன பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.26 அடியிலிருந்து 89.92 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 52.55 டி.எம்.சி.யாக உள்ளது.
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
3 மாவட்டங்களுக்கு
ரெட் அலர்ட் – வானிலை மய்யம்
சென்னை,அக்.15- தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மய்யம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இங்குள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு கை கொடுத்த மெட்ரோ.. இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.