அய்தராபாத், அக்.15 தெலங்கானா தலைநகர் அய்தராபாத்தில் உள்ள செகந்திராபாத்தில் மோண்டா மார்க்கெட் பகுதியில் முத்தியா லம்மன் கோயில் உள்ளது. கடந்த 13.10.2024 அன்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோயில் இரும்புக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். பிறகு கோயில் கதவுகள் மற்றும் கருவறையில் உள்ள அம்மன் சிலையை இரும்பு கம்பியால் அடித்து சேதப்படுத்தி உள்ளார். இதையடுத்து அவர் வெளியே வரும்போது, பக்தர்கள் ஓடிவந்து அந்த நபரை பிடித்தனர். மேலும் அவரை அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர் மீது செகந்திராபாத் கன்டோன்மெண்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளி பற்றிய வேறு எந்தத் தகவலையும் காவல்துறை யினர் வெளியிடவில்லை. இந்தச் செய்தி அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. உடைக்கப்பட்ட அம்மனின் உருவம் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பக்தர்கள் நேற்று (14.10.2024) காலையில் கோயில்முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஒன்றிய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். காவல் நிலையத்திற்கு சென்று, கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் அவர் ஆய்வு செய்தார். இதையடுத்து அம்மன் சிலையை சேதப்படுத்தியவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்தார். இந்நிகழ்வால் அம்மன் கோயில், சில மசூதிகள், சார்மினார் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கைதுசெய்யப்பட்ட நபர் மனநோயாளி என்றும் கூட்டம் மற்றும் அதிக ஓசையால் அவர் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது.