“பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை” நிறுவனரும், வட சென்னை மாவட்டக் கழகத் தோழருமான பெ.செந்தமிழ்ச் செல்வன் சேகுவேரா (வயது 59) அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
அறிவியல் சிந்தனைகளை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் (தன் உடல் நலிவையும் பொருட்படுத்தாமல்) தொடர்ச்சியாக நடத்தியதுடன் “விண்வெளி விளையாட்டு” என்னும் புதிய வகை பலகை விளையாட்டை உருவாக்கி, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பையே தன் வாழ்நாள் கடமையாக ஆக்கிக் கொண்டவர்.
திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக மாநாடுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றதுடன், அவரது விளையாட்டையும் அறிவியல் விளக்கங் களையும் காட்சிப்படுத்தி மாணவர்களுக்கும் மக்களுக்கும் விண்வெளி, சூரிய மண்டலம், பால்வெளி உள்ளிட்ட அனைத்தையும் பற்றிய செய்திகளை விளக்குவார். ஜோதிட மூடநம்பிக்கையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்குதல் என்ற புதிய உத்தியைக் கையாண்டவர்.
“பெரியார் பிஞ்சு” இதழின் தூதுவராகவே தன்னை வரித்துக் கொண்டு பரப்பியவர்.
பெரியார் திடலில் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கிய தென்றல், பகுத்தறிவாளர் கழகம் போன்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பல்வேறு அறிவியல், விளக்கவுரைகள் வழங்கியதுடன், பெரியார் திடலைத் தனது செயல்பாட்டுக் களமாகக் கொண்டு செயல்பட்டவர். அவரது இழப்பு அறிவியல் மனப்பான்மை செயல்தளத்தில் நம் இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
அறிவியல் வாழ்முறையிலேயே இயங் கியவரின் விருப்பப்படி அவரது உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மாணவர்களின் ஆய்வுக்காகக் கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
அவரது வாழ்விணையர், மகன், மகள், தங்கை மற்றும் தோழர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
14.10.2024
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்