புதுடில்லி, அக்.14 தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் (என்சிஎஸ்சி) கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் 47,000 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் (ஆா்டிஅய்) மூலம் பெறப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தாழ்த் தப்பட்டோருக்கு எதிரான ஜாதிய கொடுமைகள், நில விவகாரங்கள், அரசு பணிகள் சார்ந்த சிக்கல்கள் உள்ளிட்டவை முக்கிய விவகாரங்களாக இடம் பெற்றுள்ளதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020-2021-இல் 11,917 புகார்களும், 2021-2022-இல் 13,964 புகார்களும் 2022-2023-இல் 12,402 புகார்களும் 2024-ஆம் ஆண்டில் தற்போது வரை 9,550 புகார்களும் பெறப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டுப் படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக ஆா்டிஅய் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு விளக்கமளித்து இந்த தரவுகளை என்சிஎஸ்சி பகிர்ந்துள்ளது.
இதுதொடா்பாக என்சிஎஸ்சி தலைவா் கிஷோர் மக்வானா செய்தியாளா்களிடம் கூறியதாவது: பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள், நில விவகாரங்கள், அரசுப் பணி சார்ந்த சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து அதிக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இப்புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய அடுத்த மாதம் முதல் பட்டியலினத்தவருக்கான மாநில ஆணையங்களுக்கு நேரில் சென்று, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கண்காணிக்கவுள்ளோம்.
என்சிஎஸ்சி தலைவராக பதவியேற்றதில் இருந்து வாரம் நான்கு முறை மக்களை நேரில் சந்தித்து அவா்களின் குறைகளை கேட்டு வருகிறேன் என்றார்.
பட்டியலின மற்றும் பழங் குடியின சமூகத்தினருக்கான தேசிய உதவி எண் மூலம் 6,02,177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 3,10,623 (50 சதவீதத்துக்கும் மேல்) புகார்கள் உத்தர பிரதேசத்தில் இருந்தே பெறப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பட்டியலின மற்றும் பழங் குடியின சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகள் குறித்து அண்மையில் ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,‘கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த சட்டத்தின்கீழ் மொத்தம் 51,656 வழக்குகள் பதியப்பட்டன. அவற்றில் 12,287 வழக்குகளுடன் (23.78 சதவீதம்) உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 8,651 வழக்குகளுடன் ராஜஸ்தான் (16.75 சதவீதம்), 7,732 வழக்குகளுடன் மத்திய பிரதேசம் (14.97 சதவீதம்), 6,799 வழக்குகளுடன் பிகார் (13.16 சதவீதம்), 3,576 வழக்குகளுடன் ஒடிசா (6.93 சதவீதம்) மற்றும் 2,706 வழக்குகளுடன் மகாராஷ்டிரம் (5.24 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த 6 மாநிலங்களிலும் சோ்த்து மொத்தமாக 81 சதவீத வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல் 2022-ஆம் ஆண்டில் பதியப்பட்ட மொத்த வழக்குகளில் 97.7 சதவீத வழக்குகள் 13 மாநிலங்களில் பதி யப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.